நடிகர் சிம்புவின் நடிப்பில், இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்திருக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் பாடல் வரும் டிசம்பர் 14-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.
நடிகர் சிம்பு இந்தச் செய்தியை தனது ரசிகர்களுக்காக தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிம்புவின் நடிப்புலக வாழ்க்கையில் இத்தனை சீக்கிரமாக ஒரு படம் முடிந்திருக்கிறது என்றால் அது ‘ஈஸ்வரன்’ திரைப்படம்தான்.
கடந்த மாதம் சிம்புவை திண்டுக்கல்லுக்குக் கடத்திச் சென்ற ‘ஈஸ்வரன்’ படக் குழு ஒரே மூச்சாக 35 நாட்கள் அங்கேயே அவரை இருக்க வைத்து படத்தை முடித்த பின்பே அவரை சென்னைக்கு போகவிட்டனர்.
சென்னைக்கு வந்த அடுத்த நாளே இந்தப் படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்ட சிம்பு இரண்டே நாட்களில் அதை முடித்துவிட்டு, மூன்றாவது நாளில் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்புக்காக பாண்டிச்சேரிக்கு கிளம்பிப் போய்விட்டார்.
தற்போது ‘ஈஸ்வரன்’ படத்தின் போஸ்ட் புரொடெக்சன்ஸ் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன.
சிம்புவின் இந்தப் புயல் வேக மாற்றத்தினால் அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். ‘ஈஸ்வரன்’ படத்தை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.
அவர்களை உற்சாகப்படுத்தும்விதமாக, “இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் டிசம்பர் 14-ம் தேதியன்று வெளியாகும்…” என்று சிம்பு அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களில் இது குறித்த ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஈஸ்வரன்’ திரைப்படம் 2021 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.