full screen background image

ஃபயர் – சினிமா விமர்சனம்

ஃபயர் – சினிமா விமர்சனம்

பன்மொழி வெற்றிப் படங்களின் விநியோகஸ்தரான ஜே.எஸ்.கே., தேசிய விருது வென்றதங்க மீன்கள்மற்றும்குற்றம் கடிதல்‘, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா‘, ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்‘, ‘மதயானைக் கூட்டம்‘, ‘தரமணி‘, ‘புரியாத புதிர்மற்றும் விரைவில் வெளியாக உள்ளஅண்டாவ காணோம்உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் ஆவார்.

தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. இயக்குநராக தற்போது அவதாரம் எடுத்துள்ளார். இவர் எழுதி, இயக்கியிருக்கும் முதல் திரைப்படம்தான் இந்தஃபயர்‘.

இந்தப் படத்தில் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி.கே. (அறிமுகம்) இசையமைக்க, சதீஷ்.ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எஸ்.கே.ஜீவா வசனங்களை எழுதியுள்ளார். படத் தொகுப்பை சி.எஸ்.பிரேம் குமாரும், கலை இயக்கத்தை சுரேஷ் கல்லேரியும் கவனிக்க, பாடல்களை மதுர கவியும், ராவும் எழுதியுள்ளனர். உடைகள் வடிவமைப்புக்கு டினா ரோசாரியோவும் பத்திரிக்கை தொடர்புக்கு நிகில் முருகனும் பொறுப்பேற்றுள்ளனர்.

இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விறுவிறுப்பான திரில்லர் ஆகும்.

இன்றைய காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும் அவர்கள் எவ்வாறு அவற்றை கடந்து வருவது என்பது குறித்தும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் அலசுகிறது.

தொடர்ந்து தவறான செயல்களில் தெரிந்தே ஈடுபடும் ஆண்கள் இந்த சமுதாயத்தில் சகஜமாக நடமாடும் நிலையில், பெண்கள் தெரியாமல் தவறு செய்தாலும் அவர்களை நமது சமூகம் வேறு மாதிரி பார்க்கிறது.

இந்த சமூக பார்வை மாறினால் மட்டுமே நல்ல சமுதாயம் உருவாகும். ஏனென்றால் இவ்வாறு இருப்பது இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கும் நல்லதல்ல எனும் கருத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் சொல்கிறது.

மேற்கண்ட விஷயங்களை சிறிதும் சுவாரஸ்யம் குறையாமலும், அதே சமயம் சமுதாய விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் உருவாகியுள்ள இந்த ஃபயர் திரைப்படம் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான திரைப்படமாகவும் உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக நாகர்கோயிலில் காசி என்ற ஒரு வாலிபர் நிறைய இளம் பெண்களை சோசியல் மீடியாவில் சந்தித்து அதன் மூலமாக அவர்களை காதல் வலையில் விழ வைத்து அவர்களுடன் நெருக்கமாக இருந்து அதை வீடியோவும் புகைப்படமாகவும் எடுத்து வைத்து அவர்களை மிரட்டி, அவர்களிடமிருந்து பணம் பறித்ததாக மிகப் பெரிய குற்றச்சாட்டு எழுந்தது.

இப்பொழுது அந்தக் காசி என்பவர் அந்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். அவருடைய கதையைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குநர், நடிகருமான ஜே.எஸ்.சதீஷ்குமார்.

நாயகன் பாலாஜி முருகதாஸ், ஒரு பிசியோதெரபி டாக்டர். தனியிடம் சிகிச்சைக்காக வருகின்ற பெண்களிடம் உரிமையாக பேசி, அன்பாக பேசி, ஆறுதலாக பேசி அவர்களுக்கு உதவி செய்வதுபோல் நடித்து அவர்களை படுக்கையில் வீழ்த்தும் மன்மதன்.

அப்படி அந்த அப்பாவி பெண்கள் தன்னுடன் உறவு கொள்ளும்போது அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறிப்பதையும் ஒரு தொழிலாகச் செய்து வருகிறார்.

பாலாஜியின் வலையில் விழுந்தவர்கள்தான் ரக்ஷிதா, சாந்தினி தமிழரசன், சாக்சி அகர்வால், காயத்ரி ஷான் இந்த நான்கு பேரும்.

இந்த நேரத்தில் ஒரு நாள் திடீரென்று பாலாஜி முருகதாஸ் காணாமல் போய்விட போலீஸில் வழக்குப் பதிவாகிறது. போலீஸ் விசாரிக்க, விசாரிக்க இந்த நான்கு பேரின் தொடர்புகளும் வெள்ளித்திரையில் விரிகின்றன. இந்த நான்கு பேர்தான் பாலாஜியை ஏதோ செய்துவிட்டதாக போலீஸுக்கு சந்தேகம் வருகிறது.

கடைசியில் என்ன ஆகிறது..? பாலாஜி முருகதாஸ் மீட்கப்பட்டாரா? அவர் எங்கே இருந்தார்? என்பதுதான் இந்தப் படத்தின் கதை சுருக்கம்.

பாதி படம் மிகவும் கண்ணியமாகவும், மீதி படம் மிக மிக அதிகமான கவர்ச்சியில் ஒரு பிட்டு பட பாணியில் எடுக்கப்பட்டிருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

அதிலும் விஜய் டிவியில் குடும்ப குத்து விளக்காகவே திகழ்ந்து வந்த ரட்சிதா மகாலட்சுமியை இந்தப் படத்தில் உரித்த கோழியாக்கி, அளவுக்கு மீறி கவர்ச்சி காட்ட வைத்து நடிக்க வைத்திருக்கும் இயக்குநரின் திறமையை நிச்சயமாக பாராட்டித்தான் ஆக வேண்டும். ரக்ஷிதா எதனால் இப்படி நடித்தார் என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று நினைப்பதுபோல பாலாஜி முருகதாஸ் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய கிளினிக்கிற்கு வரும் பெண்களிடம் அவர் பேசுகின்ற அந்த சாந்தமான பேச்சும், பாந்தமான பார்வையும் அமைதியான நடவடிக்கையும் அடடா என்று நம்மை சொல்ல வைத்திருக்கிறது.

கடைசியாக இவருடைய ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும்போது இவரா இப்படி என்று நம்மையும் திட்ட வைத்திருக்கிறார் பாலாஜி முருகதாஸ். அந்த வகையில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பினால் நம்மையும் கவர்ந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

நாயகிகளில் டாப்பில் இருப்பவர் ரக்ஷிதா மகாலட்சுமிதான். அவருடைய முதல் போர்ஷன் காட்சிகளில் அவருடைய நடிப்பு அபாரம். தன்னுடைய வீட்டுக்குள் வந்து தகராறு செய்யும் வீட்டு ஓனரிடம் அவர் கெஞ்சுகின்ற கெஞ்சலும், குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர் படுகின்ற பாடும் நிச்சயமாக ஒரு பண்பட்ட நடிகை என்றே ரக்சிதாவை நமக்குக் காட்டுகிறது.

ஆனால் இடைவேளைக்கு பின்பு நாம் பார்க்கும் ரக்சிதாவே வேறு. ‘மெதுவா மெதுவா’ என்ற பாடல் காட்சியில் அவரை உரித்தக் கோழியாகக் காட்டிவிட்டதால் அதிலேயே இளசுகள் சூடாகிவிட்டார்கள். நிச்சயம் இது ரக்சிதாவுக்கு புது அனுபவமாக இருக்கோ.. இல்லையோ.. அவருடைய ரசிகர்களுக்கு இதுவொரு புது அனுபவமாகத்தான் இருக்கும்.

இன்னொரு பக்கம் சாக்சி அகர்வாலும், சாந்தினி தமிழரசனும் தங்களுடைய கேரக்டரில் அழகாக நடித்திருக்கிறார்கள் அதிலும் சாந்தினி தமிழரசனின் கேரக்டர் பாவம்தான். உண்மையில் தன் மீது பரிதாபமாக வரக் கூடிய அளவுக்கு மிக அழகாக சாந்தமாக நடித்திருக்கிறார்.

அமைச்சராக நடித்திருக்கும் சிங்கம்புலியின் அட்டகாச நடிப்பு சூப்பர்ப். கிளைமாக்ஸில் அவர் தூக்கப்படும்போது “தூக்குடா அவனை..” என்று நம்மையும் சொல்ல வைத்திருக்கிறார்.

துடிப்பான புத்திசாலியான இன்ஸ்பெக்டரான ஜெ.சதீஷ்குமாரும் அவருடைய சப்-இன்ஸ்பெக்டரான சுரேஷ் சக்கரவர்த்தியும் படத்தையும் முதலிலிருந்து கடைசிவரையில் நகர்த்தி இருக்கிறார்கள். இதில் சதீஷ்குமாரின் நடிப்பு ஓரளவுக்கு பரவாயில்லை என்று மட்டும்தான் சொல்ல முடியும்.

ஜி.சதீஷ் செய்திருக்கும் ஒளிப்பதிவு படத்துக்கு கிடைத்த மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். பாடல் காட்சிகளை படமாக்கியிருக்கும்விதம் நிச்சயம் பாராட்டுக்குரியது. கிளாமரையும், அளவுக்கு அதிகமான கவர்ச்சியையும் காண்பிக்க வைத்து அதையும் திரையிலிருந்து நம் கண்ணை அகலவிடாமல் செய்யும் வண்ணம் படமாக்கி இருக்கிறார். அதற்காகவே ஒளிப்பதிவாளருக்கு நமது பாராட்டுக்கள்.

டி.கே.வின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்தான். ஆனால் பின்னணி இசையை கொஞ்சம் சாப்டாக வைத்து படத்தின் திரைக்கதையை முன்னிறுத்தி வைத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்தில் வசனங்கள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்துள்ளது. வசனங்களை எழுதிய ஜீவாவையும் மனதார பாராட்டுகிறோம்.

படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஜெ.சதீஷ்குமார் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வை தர வேண்டும் என்பதற்காகவும் ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கையைத் தரக் கூடிய படமாகவும் இந்த படத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

இருந்தாலும் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பவர் அதே சட்டத்தையே மீறுகின்ற வகையிலும் நீதிமன்றத்தையே காலில் தூக்கி போட்டு மிதிக்கும் வகையிலும் செயல்படுவதாக காண்பிப்பது நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

ஆளாளுக்கு ஒவ்வொருவரும் தத்தமது கைகளில் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தீர்ப்புகளை வழங்கத் தொடங்கினால் பின்பு நீதிமன்றமும், காவல்துறையும் எதற்கு..? இதை ஒரு காவல்துறை அதிகாரியே செய்வதாக காட்டியிருப்பது ஏற்க முடியாத ஒன்று.!

இடைவேளைக்கு பின்பான அந்த மூன்று படுக்கையறை காட்சிகளையும் இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். இந்த அளவுக்கு விஸ்தாரமாக ஒரு பிட்டு படம் போல காட்டி இருப்பது தேவையில்லாதது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.

சினிமா ஒரு மாஸ் மீடியம். இதில் நீங்கள் எதை வியாபாரத்திற்காக அதிகரித்து காட்டுகிறீர்களோ அது அப்படியே சமூகத்திலும் பிரதிபலிக்கும்.

அந்த வகையில் இந்தப் படத்தில் ஆண்கள் செய்யும் தவறுகளை எல்லாம் காட்சிப்படுத்திவிட்டு, கடைசியாக பெண்களுக்கு மட்டும் அட்வைஸை நீட்டி முழக்கியிருக்கிறார் இயக்குநர்.

முதலில் சொல்ல வேண்டிய அறிவுரையே ஆண்களிடம்தான்.. ஆனால் பாவம் ஓரிடம்.. பழி வேறிடமாக பெண்களிடம்போய், “ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள். நீங்கள்தான் கொஞ்சம் பார்த்து நடந்து கொள்ள வேண்டும்…” என்று சொல்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்…? இதைத்தான் இந்தப் படத்தின் இயக்குநர் செய்திருக்கிறார்.

காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளின் உண்மைத்தன்மைக்கு நேர்மாறாகப் படத்தை முடித்தமைக்காக இயக்குநருக்கு நமது வன்மையான கண்டனங்கள்..!

RATING : 3 / 5

Our Score