full screen background image

பைண்டர் – திரைப்பட விமர்சனம்

பைண்டர் – திரைப்பட விமர்சனம்

Arabi production நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரஜீஃப் சுப்பிரமணியம்  இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படமான  இந்தப் படத்தில் நடிகர் சார்லி கதையின் திருப்புமுனை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  இவர்களுடன் செண்ட்ராயன், கோபிநாத் சங்கர், நடிகை தாரணி மற்றும் பிரானா ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – Arabi production  & Viyan ventures, தயாரிப்பாளர்கள் ரஜீஃப்  சுப்பிரமணியம்வினோத் ராஜேந்திரன், இயக்கம் வினோத் ராஜேந்திரன், ஒளிப்பதிவு பாபு ஆண்டனி, படத்தொகுப்பு தமிழ்குமரன், கலை இயக்கம் அஜய் சம்பந்தம், இசை சூர்ய பிரசாத், பத்திரிக்கை தொடர்பு – A ராஜா.

இப்படத்தை, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்குவதோடுஇப்படத்தில் முக்கியமான ஒரு வேடத்திலும் நடித்து படத்தையும் வெளியிட்டுள்ளார்.

செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுத் தரும் ஒரு சுய சார்பு நிறுவனத்தை பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னைப் பின்னணியில்  இப்படத்தின் திரைக்கதை  அமைக்கப்பட்டுள்ளது.

செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் சார்லியைக் காப்பாற்ற நினைக்கும் வழக்கறிஞர்களான நாயகனும், நாயகியும் அந்த வழக்கினை எப்படி உடைத்து சார்லியை காப்பாற்றுகிறார்கள் என்பதாக பரபரப்பான காட்சிகளுடன், அதிரடி திருப்பங்களுடனும், திரில்லர் டைப்பில் கொடுத்திருக்கிறார்கள்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம். ஆனால் இன்றைக்கு இந்தியா முழுமைக்குமே பல்வேறு மாநிலங்களின் சிறைகளில் இருக்கும் தண்டனை கைதிகளில் 25 சதவிகிதம் பேர் சந்தர்ப்பவசத்தாலும், பொய் சாட்சிகளாலும் குற்றவாளியாக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த அப்பாவிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு நியாயம் கிடைக்க பல்வேறு தனியார் சட்ட அமைப்புகள் இப்போதும் முனைப்புடன் போராடி வருகின்றன. அதுபோல் ஒரு நிரபராதியை விடுவிக்க ஒரு தனியார் சட்ட அமைப்பு நடத்தும் போராட்டம்தான் இந்தப் படம்.

கிரிமினாலஜி படிப்பில் பட்டம் பெற்ற நாயகன் வினோத் ராஜேந்திரன், தனது காதலி தாரணி மற்றும் நண்பனுடன் சேர்ந்து ‘ஃபைண்டர்’ எனும் துப்பறியும் நிறுவனத்தைத் துவக்குகிறார். இவர்களின் இந்த முயற்சிக்கு முன்னாள் அட்வகேட் ஜெனரலும், தற்போதைய அட்வகேட் சேம்பரின் தலைவருமான நிழல்கள் ரவியின் ஆதரவும், ஆசியும் கிடைக்கிறது.

இந்த நிறுவனத்தின் மூலம் தற்போது ஜெயிலில் எந்தவிதக் குற்றமும் செய்யாமல் தண்டைக்குள்ளாகியிருக்கும் அப்பாவிகளை விடுவிக்கும் சமூகப் பணியில் ஈடுபடுகிறார் வினோத் ராஜேந்திரன்-தாரணி டீம்.

இந்த நேரத்தில் இவரிடத்தில் சார்லியின் கேஸ் வருகிறது. மீனவர் குப்பத்தில் வசிக்கும் சார்லி, மீனவர் தொழிலோடு சீட்டுப் பிடிக்கும் வேலையையும் செய்து வருகிறார். இவர் சீட்டுப் பிடித்துத் தந்த சேட்டு ஒரு நாள் எஸ்கேப்பாகிவிட ஒட்டு மொத்த மீனவர் மக்களும் கொடுத்தக் காசை திருப்பிக் கேட்டு சார்லியிடம் ஓடி வந்து நெருக்கடி கொடுக்கிறார்கள்.

இதனால் பணப் பிரச்சினைக்காக பெரிதும் அல்லாடும் சார்லியிடம் வரும் அவருடைய குடும்ப நண்பனான சென்றாயன், ஒரு கொலை வழக்கில் ஜெயிலுக்குப் போனால் 5 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று ஆசை காட்டுகிறார்.

இதில் மதி மயங்கும் சார்லி,  வேளச்சேரியின் ஆளும் கட்சியின் கவுன்சிலரை கொலை செய்த்தாக பொய்யாக சொல்லி கோர்ட்டில் சரண்டராகிறார். ஆனால் 6 மாதங்களில் வெளியில் வந்துவிடலாம் என்று வழக்கறிஞர் வாக்குறுதியளித்திருந்த நிலையில் சார்லியை வெளியில் விடாமலேயே நீதிமன்றத்தில் விசாரணை நடந்து ஆயுள் தண்டனை என்று தீர்ப்பும் வந்து விடுகிறது. இது உயர்நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்படுகிறது.

இந்த இடைவெளியில் சென்றாயன் சிறையிலேயே இறந்து போகிறார். சார்லியின் மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறார். சார்லியின் டீன் ஏஜ் மகளான பிராணா மீன் விற்றுப் பிழைப்பு நடத்து வருகிறார்.

இந்த நேரத்தில்தான் சார்லியின் மகள் வினோத் ராஜேந்திரனின் இந்த பைண்டர்’ அமைப்பைத் தேடி வருகிறாள். தனது தந்தையை சிறையில் இருந்து மீட்டுக் கொடுக்கும்படி கேட்கிறாள். வழக்கை விசாரிக்கும் வினோத்துக்கு சார்லி குற்றமற்றவர் என்பது தெரிய வர.. துணிந்து இந்த வழக்கினை கையில் எடுத்து விசாரணையில் இறங்குகிறார்.

விசாரணை என்னவானது..? சார்லி விடுதலையானாரா..? உண்மையில் அந்த கவுன்சிலரை கொலை செய்த்து யார்..? என்பதெல்லாம் திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்..!

படத்தின் முக்கியப் புள்ளியே சார்லிதான். நடுத்தர வயதுக்கான கதாப்பாத்திரங்களில் இப்போதைக்கு சார்லியைவிட்டால் வேறு ஆளில்லை எனலாம். அந்த அளவுக்கு தான் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் தனது நடிப்பாற்றலை ஒவ்வொரு படத்திலும் குறையில்லாமல் கொடுத்து வருகிறார் சார்லி.

அப்பாவியாய் சீட்டுப் பிடிக்கும் சேட்டுவால் ஏமாற்றப்பட்டு குடும்பமே நடுத்தெருவுக்கு வந்த நிலையில் அவர் காட்டும் பரிதாப நடிப்பு பிரமாதம். மனைவியிடம் தான் ஜெயிலுக்குப் போகவிருக்கும் கதையைச் சொல்லுமிடத்தில் நம் நெஞ்சைத் தொட்டுவிட்டார் சார்லி.

மகள் மீதான பாசத்தில் தான் வெளியில் வந்தாக வேண்டும் என்று சிறையில் கதறும்போது இந்தப் படத்தைத் தாங்கிப் பிடிக்கும் உணர்வைத் தந்துள்ளார் சார்லி. சிறைக்குப் போகும்போது கொஞ்சம் குண்டான உடம்புடனும், ஜெயிலில் இருக்கும்போதும், ஜெயிலிலிருந்து வரும்போது கொஞ்சம் மெலிந்த உருவத்திலும் தோற்றமளித்து சார்லி மிகவும் சிரத்தையெடுத்து இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது பாராட்டுக்குரியது.

சார்லியின் மகளாக நடித்திருக்கும் பிராணாவும் தன் பங்குக்கு எப்பவும் சோகமான முகத்துடன் நம்மை அதே மூட்லேயே வைத்திருக்க உதவியிருக்கிறார். அவருடைய கண்களே அவருடைய சோகக் கதையைப் பேசுகிறது. இன்னொரு நாயகியான தாரணி ச்சும்மா நாயகன் வினோத்துக்கு சட்டம் பற்றிப் பேசும்போது கதைக்கும், திரைக்கதைக்கும் உதவியிருக்கிறார்.

செண்ட்ராயனுக்கு முக்கியமான கேரக்டர்தான். ஒரு கிரிமினலுக்கான கல்லுளிமங்கன் நடிப்பைக் காண்பித்திருக்கிறார். வழக்கறிஞராக நடித்திருக்கும் சரண்ராஜ், ருத்ரசுவாமி, கவுன்சிலர் என்று மற்றைய கேரக்டர்களில் நடித்தவர்களும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். நிழல்கள் ரவி, தனது அனுபவ நடிப்பின் மூலம் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் வினோத் ராஜேந்திரன் தனக்கு வந்ததை.. தன்னால் முடிந்ததை நடிப்பாகக் காண்பித்திருக்கிறார். படத்தில் இருக்கும் ஒரேயொரு பேக் டிராப்பே இவர்தான். இவருடைய கதாப்பாத்திரத்திற்கு வேறொரு முன்னணி நடிகரை நடிக்க வைத்திருக்கலாம். ஒரு கவன ஈர்ப்பாவது படத்திற்குக் கிடைத்திருக்கும்.

ஒளிப்பதிவாளர் பிராசந்த் வெள்ளிங்கிரியின் ஒளிப்பதிவில் குறைவில்லை. சூர்ய பிரசாத்தின் இசையும் பரவாயில்லை ரகம். கவுன்சிலர் கொலை தொடர்பான காட்சிகளை முன், பின்னாக நான் லீனியரில் சொல்லியிருந்தாலும் கொஞ்சமும் குழப்பமில்லாமல் எடிட்டிங் செய்திருக்கிறார் எடிட்டர். பாராட்டுக்கள்.

ஒரு உண்மைக் கதையை மையமாக வைத்து இந்தப் படத்தினை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் வினோத் ராஜேந்திரன். ஒரு க்ரைம், சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கு என்ன வேண்டுமோ அதை திரைக்கதையில் சிறப்பாகவே கொண்டு வந்திருக்கிறார். ஆனால் போகிற இடங்களில்லாம் உடனடியாக மரியாதையுடன் செய்திகள் கிடைப்பதாக எழுதியிருக்கும் திரைக்கதைதான் கொஞ்சம் இடிக்கிறது.

லாஜிக்கெல்லாம் பார்க்காமல் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த சென்டிமெண்ட் படமாக இதை நிச்சயமாகப் பார்க்கலாம்.

RATING : 3.5 / 5

 

Our Score