full screen background image

தயாரிப்பாளர் சங்க விவகாரம் – கேயார் அணிக்கு, டி.சிவா அணி சவால்..!

தயாரிப்பாளர் சங்க விவகாரம் – கேயார் அணிக்கு, டி.சிவா அணி சவால்..!

தமிழ்த் திரைப்படத் தயாரி்ப்பாளர் சங்கத்தில் கேயார் அணிக்கு நெருக்கடி முற்றியிருக்கிறது.

சென்ற தேர்தலில் தோல்வியடைந்த தாணு அணி, கேயார் தலைமையிலான நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்தும் அதை அவர்கள் கண்டு கொள்ளாததால் தனியாக பொதுக்குழுவைக் கூட்ட அறிவிப்பை வெளியிட்டார்கள்.

இந்த அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றத்திற்கு கேயார் தரப்பு சென்றதால் நீதிமன்றமே பொதுக்குழுவைக் கூட்ட உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இந்த பொதுக்குழு எழும்பூர் ஹோட்டலில் கூடவுள்ளது.

இதுவரையில் கேயார் அணியில் இருந்து வந்த தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் டி.ஜி.தியாகராஜன், செயலாளர் டி.சிவா, பொருளாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இப்போது தனி அணியாகச் செயல்படுகிறார்கள்.

இவர்கள் தலைமையிலான அணி நேற்றைக்கு தனியாக சதியாலோசனை கூட்டம் நடத்தி பொதுக்குழுவில் யாரை ஆதரிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்..

கூட்டத்தின் முடிவில் இவர்கள் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

“உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடைபெறவிருக்கும் இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் எப்படியாவது தீர்மானத்தைத் தோற்கடித்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தச் சங்கத்தின் சில அலுவலக நிர்வாகிகள் குறுக்கு வழியில் குறுகிய நோக்கத்தில் அவசர கதியில் செயல்பட்டு வருகிறார்கள்.

இதே தீர்மானத்தை நாங்கள் ஜனநாயக வழியில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். இந்தச் சூழலில் ‘உறுப்பினர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் வாழ்நாள் முழுவதும் வந்து சேரும்’ என்ற நடைமுறையில் சாத்தியப்படாத ஒரு திட்டத்தை பரப்பி வருகிறார்கள்.

பணம் படைத்தவர்கள் முதல் மாதம் தங்கள் பணத்தைத் தந்தாலும் அடுத்த மாதம் பணம் தரவில்லையென்றால் அதற்கு யார் பொறுப்பு..? இதை யாரிடம் கேட்பது..? நாங்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராக ஒரு சவால் விடுகிறோம்..

மொத்தம் உள்ள 832 நிரந்தர உறுப்பினர்களுக்கு மாதம் பத்தாயிரம் என்கிற அடிப்படையில் முதல் மூன்று மாதங்களுக்குத் தேவைப்படும் தொகையான 2 கோடியே 49 லட்சத்துல 60 ஆயிரம் ரூபாயை உறுப்பினர்கள் மீது மாறாத அன்பு கொண்ட பணம் படைத்த சங்க நிர்வாகிகள் தயார் செய்து அனைத்து உறுப்பினர்களுக்கும் வரும் 10-ம் தேதி மாலைக்குள் காசோலை மூலம் தந்துவிடுவீர்களேயானால் அவர்களது எண்ணத்தை மதித்து இந்தத் திட்டத்திற்கு நாங்கள் ஒத்துழைப்புத் தருகிறோம்.

ஆனால், நாங்கள் உறுப்பினர்களுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் உழைத்து செயலாற்ற நினைக்கிறோம். பொதுக்குழுவில் சிந்தித்து செயலாற்ற உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறோம்..”

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதில் ஒரு விஷயம் புரியவில்லை. தாணு கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தற்போதை சங்கத்தின் நிர்வாகிகளுக்கு எதிரானது.

இந்த நிர்வாகத்தில் இருக்கும் இந்த மூவரும், இப்போது யாருக்கு எதிராக இப்படி போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்..?

பொதுக்குழுவில் சிந்தித்து செயலாற்ற உறுப்பினர்களை அழைக்கும் இவர்கள், அவர்களை என்னதான் செய்யச் சொல்கிறார்கள்..?

ஒருவேளை தாணு அணி வெற்றி பெற்றால் இவர்கள்தான் பதவியைவிட்டு விலகி மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்க வேண்டும்.. பின்பு எதற்காக இ்ந்த போர்க்குரல்..?

கேயார் மற்றும் ஞானவேல்ராஜா, சுபாஷ்சந்திரபோஸ், ராஜன் ஆகியோர் அடங்கிய டீமை எதிர்ப்பதென்றால் தனியாக பேசித் தீர்த்துக் கொள்ளாமே..? அவர்களுடன் சேர்ந்துதானே இவர்கள் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று நிர்வாகப் பொறுப்பில் அமர்ந்தார்கள். மீண்டும் ஒரு தேர்தலுக்கு வழிவகை செ்யயும் அளவுக்கு கூட்டணியை பிளவுபடுத்த வேண்டுமா என்ன..?

இதில் தள்ளி நின்று புன்முறுவல் பூத்தபடி இந்தக் கூத்துகளை வேடிக்கை பார்க்கிறது தாணு அணி. அவர்கள் எதிர்பார்த்தது கஷ்டமேயில்லாமல் நடைபெறும் போலத் தெரிகிறது..!

ம்ஹூம்.. இவங்க நடத்துற அரசியலுக்கு அரசியல் கட்சிகளே பரவாயில்லை போலிருக்கே..?

Our Score