full screen background image

தென்னிந்திய பிலிம் சேம்பர்-தமிழ்த் திரையுலகம் மோதல்..!

தென்னிந்திய பிலிம் சேம்பர்-தமிழ்த் திரையுலகம் மோதல்..!

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கும், தமிழ்த் திரையுலகத்தினருக்குமான மோதல் வலுத்துள்ளது.

தென்னிந்திய சினிமாவின் வர்த்தகத் தொடர்புகளை அந்தந்த சினிமா பிரிவுகளுக்குள் வளர்த்தெடுக்கவும், வியாபாரத் தொடர்புகளை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்லவும் உருவாக்கப்பட்டது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை.

இதன் தலைமையகம் சென்னைதான். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்கத்தினர், தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், ஸ்டூடியோ அதிபர்கள் ஆகியோர்தான் இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்.

இதன் நிர்வாகப் பதவிகளுக்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் தேர்தல் நடந்திருந்தது. இடையில் சினிமா நூற்றாண்டு விழா நடத்தவும், சேம்பர் பில்டிங்கை கட்டி முடிப்பதற்காகவும் சென்ற முறை தேர்தலே நடத்தாமல் அதே நிர்வாகக் குழு நீடித்திருக்க அனுமதி தந்திருந்தார்கள். 

இரண்டு பணிகளுமே முடிந்துவிட்டதால் இப்போது உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி கில்டு அமைப்பின் தலைவர் கிரிலால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததையடுத்து சேம்பரின் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அதாவது ஏப்ரல் 27-ம் தேதி சேம்பர் நிர்வாகத்தினருக்கான தேர்தல் சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் நடைபெறவுள்ளது.

இந்த நேரத்தில் மிக நீண்டகாலமாகவே தமிழ்த் திரையுலகில் தமிழகத்திற்கென்றே தனியாக ஒரு பிலிம் சேம்பர் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தத் தேர்தல் சமயத்திலாவது அதனை முன்னெடுக்கலாம் என்று நினைத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து குரல் எழுப்பியுள்ளனர்.

இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் புதிதாக தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை அமைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆலோசிக்க இருக்கிறார்களாம்..

ஏனெனில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் அந்தந்த மொழிவாரியான பிலிம் சேம்பர்கள் இருக்கின்றன. தமிழில்தான் தனிப்பட்ட முறையில் இல்லை. இருக்கின்ற தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும் ரொட்டேஷன் முறையில் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகள் நான்கு மாநிலங்களுக்கும் பங்கீட்டு தரப்படுகிறது. இது சரியல்ல என்பதுதான் நமது மாநிலத்தவர்களின் கருத்து.

ஆனால் தவறான நேரத்தில் அல்லவா முடிவெடுக்கிறார்கள்.? நாளைக்கு தேர்தலை வைத்துக் கொண்டு இன்றைக்கு அதனை எதிர்த்தால் எப்படி..? இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தார்களாம்..

இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கு விடை கிடைக்கும் என்று நம்பலாம்.

விரிவான அலசல் கட்டுரை விரைவில்..!

Our Score