full screen background image

உலகக் கோப்பை கால்பந்து-முதல் போட்டியில் பிரேசில் வெற்றி..!

உலகக் கோப்பை கால்பந்து-முதல் போட்டியில் பிரேசில் வெற்றி..!

20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நேற்று பிரேசில் நாட்டில் கோலாகலமாகத் துவங்கியது..!

jlo-1

வண்ணமயமான நிகழ்ச்சிகள்.. பிரேசில் நாட்டுக்கே உரித்தான ஆடல்கள், பாடல்கள்.. பிரபலமான நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸின் அசத்தலான நடனத்துடன் கூடிய பாடல் நிகழ்ச்சி.. வான வேடிக்கைகள் என்று முதல் 2 மணி நேரம் உலக கால்பந்து ரசிகர்களை மெய்மறந்து பார்க்க வைத்தது துவக்க விழா வைபவம்..!

மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும், இத்தொடரின் போட்டிகளில் மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது. சாவ் பாலோவில் நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் ´ஏ´ பிரிவில் இடம் பெற்றுள்ள 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, குரோஷியாவை எதிர்கொண்டது.

brazil-players

உலகக் கோப்பை சங்கத்தின் விதிமுறைகளின்படி உலகக் கோப்பை போட்டிகளின் முதல் போட்டியில் அந்தப் போட்டியை நடத்தும் நாடு விளையாட வேண்டும். அதன்படி பிரேசிலும், குரேஷியாவும் நேற்றைய முதல் போட்டியில் மோதின.

FBL-WC-2014-FRIENDLY-CRO-MAL

போட்டி துவங்கிய 11-வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் மார்சலோ எதிர்பாராதவிதமாக சேம்சைட் கோல் அடித்து குரேஷியாவுக்கு ஒரு கோல் பெற்றுக் கொடுத்தார். உலகக் கோப்பை போட்டிகளில் முதல் போட்டியில், முதல் கோலாக சேம்சைட் கோல் விழுந்தது இதுதான் முதல் முறையாம்.. பாவம் மார்சிலோ..  இதனை நினைத்து புலம்பியபடியே விளையாடிக் கொண்டிருந்தார்.

neymar

29-வது நிமிடத்தில் பிரேசில் நாட்டின் நம்பிக்கை நட்சத்திர வீரரான Neymar அட்டகாசமான ஒரு கோலை அடித்தார். போஸ்ட் கம்பத்தில் மோதி கோல் வலைக்குள் நுழைந்தது பந்து. கரணம் தப்பினால் மரணம் கதையாக இந்த உலகக் கோப்பையின் முறைப்படியான முதல் கோலை அடித்த பெருமைக்குரியவரானார் Neymar.

போட்டியின் இடைவேளையின்போது 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணியும் சம நிலையில் இருந்தன. ஆட்டத்தின் பிற்பாதியில் குரேஷிய அணி வீரர்கள் கொஞ்சம் முரட்டுத்தனத்துடன் நடந்து கொண்டனர். 3 வீரர்களுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்.

71-வது நிமிடத்தில் குரேஷிய வீரர் Verdan Corlika பிரேசில் வீரர் Neymar-ஐ கோல் போஸ்ட்டின் உள் வட்டத்தில் தடுத்து கையைப் பிடித்திழுத்து கீழே தள்ளிவிட்டதால் பவுல் ஆனார். நடுவரின் இந்த பவுல் தீர்ப்பை எதிர்த்து குரேஷிய வீரர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். ஒட்டு மொத்த ஸ்டேடியத்தின் எதிர்பார்ப்பையும் ஏமாற்றிவிடாமல் Neymar அந்த பவுலின் மூலம் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக கோலாக்கினார்.

இதன் பின்பும் குரேஷிய அணி வீரர்கள் பல முறை முயன்றும் கோல் அடிக்கவே முடியவில்லை. அவர்களும் பிரேசில் அணியின் கோல் கீப்பருக்கு கடும் டென்ஷனைக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள. ஆனாலும் அதிர்ஷ்டம் அவர்களுக்குக் கை கொடுக்கவில்லை.

மாறாக ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ஆஸ்கர் மேலும் ஒரு கோலை அடிக்க.. பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வென்றது.

இதுவரையிலும் நடந்த 20 உலகக் கோப்பை போட்டிகளிலும் போட்டியை நடத்தும் நாடு, தொடக்கப் போட்டிகளில் தோற்றதே கிடையாதாம். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசிலும் நேற்று இச்சாதனையை தக்கவைத்துக் கொண்டது.

Our Score