full screen background image

டப்பிங் சீரியல்களை எதிர்த்து ஏப்ரல் 15-ல் வேலை நிறுத்தம் – சின்னத்திரையுலகம்-பெப்சி இணைந்து அறிவிப்பு..!

டப்பிங் சீரியல்களை எதிர்த்து ஏப்ரல் 15-ல் வேலை நிறுத்தம் – சின்னத்திரையுலகம்-பெப்சி இணைந்து அறிவிப்பு..!

மொழி மாற்றுத் தொடர்களின் அதிகரிப்பால் வேலையிழந்த சின்னத்திரை இயக்குநர் பாலாஜி யாதவ் கடந்த ஏப்ரல் 2-ம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார். அவரது நினைவஞ்சலி கூட்டம் நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் டப்பிங் சீரியல்களின் ஆதிகத்தை எதிர்த்து வரும் புதன்கிழமை ஏப்ரல் 15-ம் தேதியன்று தமிழகத்தில் மட்டும் சின்னத்திரையுலகில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தார் பெப்சியின் தலைவர் ஜி.சிவா.

இது குறித்து தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் இணைந்து வெளியிட்ட அறிக்கை இது :

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்புவரையிலும் தமிழ், மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வந்தன. பின்னர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் ஆந்திராவில் மட்டுமே நடைபெற வேண்டும் என்று தெலுங்கு சேனல்கள் உத்தரவிட்டன. இதனைத் தொடர்ந்து தெலுங்கு மொழி தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்புகள் முழுவதும் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. இதனால் அப்போதே தமிழ் சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகள் 50 சதவிகிதம் குறைந்துவிட்டன.

இதன் பின்பு வேற்று மொழி டப்பிங் சீரியல்கள் தமிழ்ச் சேனல்களில் வர ஆரம்பித்த பின்பு இன்னமும் வேலை வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனால் தமிழ்நாடு சின்னத்திரையைச் சேர்ந்த கலைஞர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைக் குறிப்பிட்டு மொழி மாற்றுத் தொடர்களை நிறுத்திக் கொள்ளுமாறு பெப்சி மற்றும் சின்னத்திரை கூட்டமைப்பின் சார்பாக சம்பந்தப்பட்ட சேனல்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சார்பாகவும் சேனல்களிடம் இது குறித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனால் மொழி மாற்றத் தொடர்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் எங்களது வேண்டுகோளை ஏற்காமல் மேலும் மேலும் டப்பிங் சீரியல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளன.

இதன் விளைவாக சின்னத்திரையையே நம்பியிருந்த ஆயிரக்கணக்கான கலைஞர்கள், தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கை ஆதாரத்தை இழந்த நிலையில் உள்ளனர்.  இதன் விளைவுதான் இயக்குநர் பாலாஜி யாதவ்வின் தற்கொலை.

இப்போதைய சூழ்நிலையில் சின்னத்திரையை நம்பியிருக்கும் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலையின்றி நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.

இப்போது போன்றே இந்த மொழி மாற்றுத் தொடர்களின் ஒளிபரப்பு மேலும் மேலும் தொடருமானால், சின்னத்திரையுலகில் இயக்குநர் பாலாஜி யாதவ் போன்றே பலரும்  தற்கொலை செய்து கொள்ளும் சூழல் அதிகரிக்கும்.

எனவே சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் மொழி மாற்றத் தொடர்களை உடனடியாக நிறுத்திவிட்டு அந்த நேரத்தில் நேரடி தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்து இதன் மூலம் சின்னத்திரை கலைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பை பெருக்கித் தந்து இனிமேலும் இது போன்ற அநியாயமான உயிரிப்புகள் நடைபெறாமல் காப்பாற்ற வேண்டுகிறோம்.

அல்லாதபட்சத்தில் எங்கள் உயிரையும், வாழ்க்கையும் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கெதிராக அறவழியில் போராட வேண்டிய நிலைமை உருவாகும் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.”

இவ்வாறு இந்த அறிக்கையில் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் சார்பாக இயக்குநர் கவிதாபாரதியும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்தியத் தலைவர் ஜி.சிவாவும் கூறியுள்ளனர்.

Our Score