இன்றைக்கு பிப்ரவரி 28-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று வெளியாகியிருக்கும் திரைப்படங்கள் இவை :
1. வல்லினம்
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் தயாரிப்பில் அறிவழகன் இயக்கியிருக்கும் படம். ஈரம் படத்திற்குப் பின் சில ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு அறிவழகன் இயக்கியிருக்கும் படம் இது. இதில் நகுல், மிருதுளா பாஸ்கர் ஹீரோ, ஹீரோயினா நடிச்சிருக்காங்க. ஜெயபிரகாஷ், அதுல் குல்கர்னி, அனுபமா, நண்டு ஜெகன் போன்றோரும் நடிச்சிருக்காங்க. ஒளிப்பதிவு பாஸ்கரன். எஸ்.எஸ்.தமன் இசையமைச்சிருக்காரு..
வாலிபால் விளையாட்டில் ஆர்வமுள்ள ஹீரோ ஒரு கட்டத்தில் விளையாட்டை தொட மறுக்கிறார். ஆனால் அதை விளையாடியே தீர வேண்டிய கட்டாயம் அவரது வாழ்க்கையில் ஏற்படுகிறது. அதனை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை..! மிக நீண்ட வருடங்களாக தயாரிப்பில் வைக்கப்பட்டிருந்த படம். எப்படியிருந்தாலும் இது ஆஸ்கருக்கு நஷ்டத்தைத்தான் தரும் என்பது தெரிந்த விஷயம்தான்..!
2. பனிவிழும் மலர்வனம்
இன்றைய திரைப்படங்களில் ஒரு எதிர்பார்ப்பை உண்டு செய்திருக்கும் படம் இது. கதை வித்தியாசமானது. அதனால்தான்.. புலியை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டிருப்பதுதான் காரணம். அபிலாஷ் ஹீரோவாகவும், சானியா தாரா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். வர்ஷா அஷ்வதி ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சுருளி மனோகர், ஜெகன்ஜி, பாவா லட்சுமணன் போன்றோரும் நடித்திருக்கிறார்கள். பி.ஆர்.ரஜின் இசையமைக்க.. வைரமுத்து, ரவி இந்திரன், ஜேம்ஸ் டேவிட் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். இரவிசங்கர் எடிட்டிங் செய்ய.. என்.ராகவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எழுதி, இயக்கியிருக்கிறார் பி.ஜேம்ஸ் டேவிட்.
3. தெகிடி
இன்றைய கோடம்பாக்கத்தின் முன்னணி தயாரிப்பாளரான திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் தயாரித்திருக்கும் படம் இது.
அசோக்செல்வன், ஜன்னி ஐயர் ஹீரோ, ஹீரோயினா நடிச்சிருக்காங்க. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய.. லியோ ஜான்பால் எடிட்டிங் செஞ்சிருக்காரு. நிவாஸ் பிரசன்னா இசையமைச்சிருக்காரு. எழுதி, இயக்கியிருப்பவர் பி.ரமேஷ். தனியார் டிடெக்டிவ் ஏஜென்ஸி பற்றிய கதையாம்.. டிரெயிலரே அசத்தியிருக்கிறது. இதனால் படத்தின் எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது..!
4. அமரா
எஸ்.பி.ஜலாலுதீன் தயாரித்திருக்கும் படம் இது. இதில் அமரன் என்ற புதுமுகம் ஹீரோவாகவும், சோனா என்ற புதுமுகம் ஹீரோயினாகவும் அறிமுகமாகியிருக்கிறார்கள். டி.இமான் இசையமைத்திருக்கிறார். ராஜாமுகமது ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எழுதி இயக்கியிருக்கிறார் ஜீவன். சந்தர்ப்பவசமாக ஹீரோயினின் காதலனாக வெளியுலகத்திற்குத் தெரியும்வகையில் மாட்டிக் கொள்ளும் ஹீரோ.. அதிலிருந்து தப்பிக்க நினைக்கிறார். ஆனால் முடியாமல் போகிறது. எப்படி என்பதுதான் கதை..!
2 வருடங்களுக்கு முன்பாகவே முடிக்கப்பட்ட படம். நீண்ட நாட்கள் இழுபறிக்கு பின்னர் இன்றைக்குத்தான் ரிலீஸாகியிருக்கிறது. அதனால் 2 வருடங்களுக்கு முன்பு இறந்து போன நடிகர் அலெக்ஸ் இதில் ஒரு குணச்சித்திர கேரக்டரில் நடித்திருக்கிறார். 2 பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளன. ஒரு குத்துப் பாடலின் ஆட்டம் குத்தாட்ட ரசிகர்களை நிச்சயம் கவரும்..!
5. வெற்றிமாறன் – மலையாள டப்பிங்
மலையாளத்தில் சென்ற வருடம் வெளியான ‘கர்மயோதா’ என்ற படமே இப்போது வெற்றிமாறன் ஐ.பி.எஸ். என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இதில் மோகன்லாலுடன் ஆஷா சரத், ஐஸ்வர்யா தேவன், சாய்குமார், முகேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஸ்ரீகுமார் இசையமைத்திருக்கிறார். மேஜர் ரவி எழுதி, இயக்கியிருக்கிறார். மும்பை பின்னணியில் ஐ.பி.எஸ். ஆபீஸராக என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருக்கிறார் மோகன்லால். முதல் முறையாக தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறாராம்..
இவைகள் தவிர ‘பறக்கும் கல்லறை மனிதன்’ என்ற ஆங்கில டப்பிங் படமும் ரிலீஸாகியுள்ளது.