அஜித்தின் ‘துணிவு’ படமும், விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துக்கு ரஜினி, கமலுக்கு அடுத்தப்படியாக லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளாவிலும் இவர்களுக்கு தீவிர ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படமும், அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படமும் 2023 பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 11-ம் தேதியன்று ஒரே தேதியில் வெளியாக உள்ளன.
இதற்கு முன்பு ‘வீரம்’, ‘ஜில்லா’ படங்கள் ஒன்றாக நேருக்கு நேர் மோதிய நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜய், அஜித் படங்கள் ஒன்றாக திரைக்கு வருகின்றன. இதனால் விஜய், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதற்கிடையே ‘வாரிசு’, ‘துணிவு’ படங்களின் போஸ்டர்கள், டிரெய்லர்கள் உள்பட அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி, இணையத்தை கலக்கி டிரெண்ட்டிங்கில் இடம் பிடித்து வருகின்றன.
ரிலீசுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இரு படங்களுக்கும் திரையரங்குகளில் முன் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் அதிகாலை 1 மணி காட்சியெல்லாம் திரையிடப்பட உள்ளதால், ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.
வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனாலே முதல் ஷோ டிக்கெட் மட்டும் தாறுமாறான விலைக்கு விற்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டும் ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படத்தின் FDFS டிக்கெட் விலையைக் கேட்டால் தலைசுற்றிவிடும். அந்த அளவுக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் முதல் ஷோ ஒரு டிக்கட்டின் விலை ரூபாய் ஆயிரம் முதல் அதிகபட்சமாக 3 ஆயிரம் ரூபாய்வரையிலும் விற்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல தியேட்டர்களில் படத்தின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரசிகர்கள் புகார் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். மறுபுறம் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை வாங்கவும் ஒரு கூட்டம் அலைமோதுகிறதாம்.
இந்நிலையில், இது குறித்து தமிழக பா.ஜ.க.வின் துணை தலைவர் நாரயணன் திருப்பதி ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும் ‘வாரிசு’, ‘துணிவு’ ஆகிய படங்களை தமிழகத்தில் விநியோகிக்கும் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனத்தின் உரிமையாளரான உதயநிதி ஸ்டாலினை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பொங்கலன்று வெளியாகும் சில முக்கிய நடிகர்கள் நடித்துள்ள படங்களின் டிக்கெட்டுகள் வெளிப்படையாக ரூபாய் 1,000 முதல் ரூபாய் 3,000 வரை விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த சட்ட விதிமீறல்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விவகாரம். பண்டிகை காலங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களின் மூலம் ஏழை, எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் ‘சூது’ இந்த சட்ட விரோத டிக்கெட் விற்பனை.
இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மாநில அரசினுடையது. சட்ட விரோதமாக செயல்படும் இந்த ஒட்டு மொத்த அமைப்பை முடக்குவதோடு, திரைப்பட மாஃபியாக்களை கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம் மாநில அரசுக்கு உள்ளது.
ஆனால், இதைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்கள் என்பதோடு, தமிழக காவல் துறை கை கட்டி. வாய் பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை சுரண்டும் கேவலமான அராஜகம் இது.
சூதை ஒழிக்கப் போவதாக முழங்கி கொண்டிருக்கும் அரசின் கொடூர முகத்தை நட்ட நடுநிசி 1 மணிக்கு படங்களை திரையிட அனுமதியளித்துள்ளது வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே, இந்த படங்களின் விநியோக உரிமையை பெற்றிருப்பது சட்ட விரோதமாக செயல்படும் கொள்ளையர்களின் கூடாரமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருப்பதை தெளிவாக்குகிறது.
பல்வேறு விவகாரங்களை தானாகவே முன் வந்து விசாரிக்கும் சென்னை உயர்நீதி மன்றம், இந்த சூதை, பகல் கொள்ளையை, அரசின் அத்துமீறலை, சட்ட விரோத நடவடிக்கையை, அராஜகத்தை வேடிக்கை பார்க்காமல் மாநில திமுக அரசை கண்டிப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையேல் கொள்ளையர்களின் அட்டகாசம் மேலும் பெருகி கொண்டே இருக்கும்” என நாராயணன் திருப்பதி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
https://mobile.twitter.com/narayanantbjp/status/1612281135412936705
https://mobile.twitter.com/narayanantbjp/status/1612133585292783618









