பகத் பாஸில்-நஸ்ரியாவின் வெளிவராத காதல் கதை..!

பகத் பாஸில்-நஸ்ரியாவின் வெளிவராத காதல் கதை..!

மலையாள நடிகரான பகத் பாஸில் நடிகை நஸ்ரியாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டிருப்பது தெரிந்ததே.

தங்களது காதல் எங்கே எப்போது பிறந்தது.. வளர்ந்தது.. என்பது பற்றி தனது முகநூல் பக்கத்தில் பகத் பாஸில் எழுதியுள்ளார்.

அதில் ”உயிருக்கு ஆபத்தான கொரோனாவுக்கு மத்தியில் இதை எழுவது சரியான நேரமல்ல. ஆனால், நாம் அனைவருமே முடிந்தவரை கொரோனாவை எதிர்த்து போராடுகிறோம் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கிறேன்.

‘மலையன் குஞ்சு’ படப்பிடிப்பின்போது எனக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து மீண்டு வருகிறேன். எனது, காலண்டரில் ஊரடங்கு என்பது கடந்த ஆண்டு மார்ச்-2-ம் தேதியிலிருந்தே தொடங்கிவிட்டது. நான் அதிர்ஷ்டசாலி. இந்த விபத்தினால் காயம் மட்டுமே ஏற்பட்டது. என் தைரியத்தை இழக்கவில்லை.

நான் நடித்திருக்கும் ’மாலிக்’ படம் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்தது. தயாரிப்பாளர் தியேட்டரில்தான் வெளியிடவேண்டும் என்று காத்திருந்தார். ஆனால்,  கனத்த இதயத்துடன் எங்களது ஒட்டு மொத்தக் குழுவும் இப்போது வேறு வழியில்லாமல் ஓடிடி வெளியீட்டை தேர்ந்தெடுத்துள்ளனர்.

மாலிக் படத்தைப் பார்க்கும்படி ரசிகர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்கிறேன். தியேட்டர்கள் இயல்பு நிலைக்கு திரும்பும்வரை எங்களால் காத்திருக்க முடியவில்லை.  தற்போது நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனும் இயல்பு நிலையை பெற போராடுகிறான்.

‘பெங்களூர் டேஸ்’ படத்தில் நடிக்கும்போதுதான் நஸ்ரியாவுடன் எனது பயணம் ஆரம்பமானது. அவரிடம், ஒரு மோதிரத்துடன் கடிதம் எழுதி என் காதலை வெளிப்படுத்தினேன். அதற்கு, நஸ்ரியா ‘ஓகே’ என்றும் சொல்லவில்லை. ‘நோ’ என்றும் சொல்லவில்லை.  நஸ்ரியாவின் விடாமுயற்சியாலேயே எங்கள் காதல் திருமணம்வரை வந்தது.

இப்போது எங்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. நாங்கள் இருவரும் எல்லா விஷயத்திலும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம். என்னை ஒரு சிறந்த நபராக நஸ்ரியா மாற்றினார்.

நஸ்ரியாவுடன் வாழத் தொடங்கிய பின்னர்தான் எனது அனைத்து சாதனைகளும் அதிகமானது. நஸ்ரியாவை நான் அதிகமாக புரிந்து கொள்ளவில்லை என்றால் என் வாழ்க்கை என்னவாகியிருக்கும் என்று எண்ண தோன்றுகிறது…”  என்று கூறியிருக்கிறார் பகத் பாசில்.  

ஏற்கனவே, ஃபகத் ஃபாசிலின் ‘சி யூ சுன்’, ’ஜோஜி’ ஆகிய படங்கள் அமேசான் பிரைமிலும், ’இருள்’ நெட் ஃபிளிக்ஸிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.  இப்போது மாலிக் படமும் ஓடிடி தளத்தில் என்பதால் மலையாள விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் பகத் பாசில் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

 

Our Score