full screen background image

புலவர் புலமைப்பித்தனின் பேரன் ஹீரோவாக அறிமுமாகும் ‘எவன்’ திரைப்படம்..!

புலவர் புலமைப்பித்தனின் பேரன் ஹீரோவாக அறிமுமாகும் ‘எவன்’ திரைப்படம்..!

நான்கு தலைமுறைகளுக்கும் பாடல் எழுதி வரும் பழம்பெரும் பாடலாசிரியர், புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி, தமிழ்ச் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

சன்லைட் சினிமாஸ் தயாரிக்கும் படம் ‘எவன்’. தலைப்பே படத்தின் கதையைச் சொல்லிவிடுகிறதா என்றால் ‘இல்லை’ என்கிறார் இயக்குநர் துரைமுருகன். இவர் ‘தயா’, ‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘கோலிசோடா’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

“படத்தின் கதை ஹீரோத்தனம் இல்லை.. ஹீரோயின்தனம்.. காதலர்களைச் சேர்த்து வைக்க பெற்றோர்களை கட்டாயப்படுத்தும் படங்கள்தான் அதிகம் வந்திருக்கு. இப்போ முதல் முறையா ஹீரோவை அவருடைய தாயுடன் இணைத்து வைக்கும் வேலையைச் செய்கிறார் இந்தப் படத்தின் ஹீரோயின். அது ஏன்..? எதற்காக தாய்க்கும், மகனுக்கும் இடையில் பிரிவு..? இதனால் காதலிக்கு என்ன துயரம்..? என்பதுதான் படத்தின் கதை..” என்கிறார் இயக்குநர்.

இந்தப் படத்தில் திலீபன் புகழேந்தி ஹீரோவாகவும், கன்னட தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் தீப்தி மானே ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். முக்கிய வேடங்களில் ஜே.கே.சஞ்சீத், உஜ்ஜைனிராய், கானாபாலா, பாண்டி ரவி ஆகியோர் நடித்திருக்கின்றனர். முக்கியமான மூன்று வில்லன் கேரக்டர்களில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறாராம் இயக்குநர்.

சிவராமன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.கே.சசிதரன் இசையமைக்கிறார். பாலா எடிட்டிங் செய்கிறார். பாடல்களை புலவர் புலமைப்பித்தன், விவேகா, கானா பாலா , ஏகா ராஜசேகர் ஆகிய நால்வரும் எழுதியிருக்கிறார்கள். “இதில் கானா பாலா எழுதியிருக்கும் பாடல், நிச்சயமாக சர்ச்சையைக் கிளப்பும்..” என்கிறார் இயக்குநர்.

“புலவரின் மகன் என்பதால் நேரடியாக கேமிராவுக்கு முன்பாக வந்துவிட்டாரோ…?” என்று இயக்குநரிடம் கேட்டோம். “இல்லை.. இல்லை.. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கிடைத்து.. கதை, திரைக்கதை, வசனமெல்லாம் எழுதி, மற்ற கேரக்டர்களுக்கெல்லாம் ஆட்களைத் தேர்வு செய்த பின்பும் ஹீரோ மட்டுமே எனக்குக் கிடைக்கவில்லை. எங்கு தேடியும் நான் எதிர்பார்த்ததுபோல் இல்லை.

கடைசியாக ஒரு நாள் கூத்துப் பட்டறைக்குச் சென்று யாராவது கிடைப்பார்களா என்று தேடினேன். நான் சென்ற அன்று சுமாராக 200 பேர் அங்கே நடித்துக் கொண்டிருந்தார்கள். நான் பார்த்தவுடன் என் கண்ணில் பட்டு, என் மனதில் சட்டென்று விழுந்தவர் திலீபன்தான். மிகப் பொருத்தமானவர் இவரே என்று தெரிந்தது.. விசாரித்த பின்புதான் இவர் புலவரின் பேரன் என்று தெரிந்தது.. எப்படியோ தமிழ்ச் சினிமாவுக்கும் பொருத்தமான ஒருத்தரைத்தானே அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அந்த வகையில் எனக்கும் இதில் மட்டற்ற மகிழ்ச்சி..” என்றார்.

“ஹீரோயின் தீப்தி மானே ஒரு முக்கியமான காட்சியில் கிளிசரின்கூட போடாமல் தத்ரூபமாக கண்ணீர்விட்டு அழுது நடித்தாராம்.. நானேகூட அதை எதிர்பார்க்கலை..” என்று ஹீரோயின் புராணமும் பாடினார் இயக்குநர்..!

எல்லா முதல் பட இயக்குநர்களுக்கும் இருக்கும் டென்ஷனும், எதிர்பார்ப்பும், பயமும் இவரிடத்திலும் இருக்கிறது.. இந்தப் பரபரப்பு படத்திலும் இருந்து படம் ஜெயிக்க வாழ்த்துகள்..!

Our Score