கோலாகலமாகத் துவக்கப்பட்ட இயக்குநர் சேரனின் Cinema To Home திட்டம் அவருடைய சொந்தத் திரைப்படமான ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படத்தோடு நின்றுவிட்டது.
எதிர்பார்த்ததுபோலவே தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். ‘புதிய படங்களின் தயாரி்பபாளர்கள் இத்திட்டத்தில் இணைந்து படங்களை கொடுத்தால் அவர்களின் படங்களை நாங்கள் எங்களது தியேட்டர்களில் திரையிட மாட்டோம்’ என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவருமே, இந்தத் திட்டத்திற்கு தங்களது படங்களை வழங்க மறுத்துவிட்டனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து பல நூறு விநியோகஸ்தர்களை இத்திட்டத்திற்காக திரட்டி, அவர்களிடமிருந்து பல கோடி ரூபாய்களை முன் பணமாகப் பெற்றிருந்த சேரனுக்கு, இது மிகப் பெரிய பின்னடைவு என்ற போதிலும் இப்போது திட்டத்தின் செயல்பாட்டினை வேறுவிதமாக மாற்றியமைக்கலாமா என்று யோசித்து வருகிறாராம்.
இதன் முதல்கட்டமாக சமீபத்தில் திரைக்கு வந்து சரியாக மக்கள் கவனத்திற்கு வராமல் போன, அதே சமயம் தரமாகவும் இருக்கும் திரைப்படங்களை வாங்கி இந்தத் திட்டத்தின் மூலமாக டிவிடியாக வெளியிட்டால் எப்படி என்று யோசித்திருக்கிறார்.
இதன் முதல்படியாக இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி இயக்கிய ‘எட்டுத்திக்கும் மத யானை’ என்கிற திரைப்படத்தை இப்போது தனது சி2ஹெச் திட்டத்தின் கீழ் வெளியிட்டிருக்கிறார். இந்தப் படத்தின் டிவிடியின் விலை 60 ரூபாய்தான்.
இந்த ‘எட்டுத்திக்கும் மத யானை’ திரைப்படத்தை ‘ராட்டினம்’ பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கிறார்.
சத்யா, ஸ்ரீமுகி, கே.எஸ்.தங்கசாமி, லகுபரன், சாம் ஆண்டர்சன், பானுசந்தர், மதுரை பாலா, ‘அசத்தப் போவது யாரு’ ராஜ்குமார், ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு ஆர்.ஜே.ஜெய். இசை மனுரமேசன். எடிட்டிங் – தீபக் துவாரகநாத். கலை – மணி கார்த்திக்.
இத்திரைப்படத்தின் நமது இணையத்தள விமர்சனம் இது :











