2012-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘ராட்டினம்’. காதலின் பின் விளைவுகளை சொல்லிய விதத்தில் தமிழ்ச் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற படம் அது.
அதன் இயக்குநரான கே.எஸ்.தங்கசாமியின் அடுத்த படம்தான் இந்த ‘எட்டுத்திக்கும் மத யானை’. இதில் நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ரீமுகி என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ராட்டினம் படத்தின் ஹீரோ லகுபரனும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.
ஆர்.ஜெ.ஜெய் ஒளிப்பதிவு செய்ய.. தீபக் எஸ்.துவாரகநாத் எடிட்டிங் செய்திருக்கிறார். மணி கார்த்திக் கலை இயக்கம் செய்திருக்கிறார். ‘நாக் அவுட்’ நந்தா பரபரப்பான சண்டை காட்சிகளை இயக்கியிருக்கிறார்.
‘ராட்டினம்’ படத்திற்கு மிகச் சிறப்பான முறையில் இசையமைத்திருந்த மனுரமேசன்தான் இந்த ‘எட்டுத்திக்கும் மதயானை’க்கும் இசையமைத்திருக்கிறார். பிரான்சிஸ் கிருபா, மீனாட்சி சுந்தரம், அம்பை சுந்தரம் ஆகியவர்களுடன் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமியும் சேர்ந்து பாடல்களை எழுதியிருக்கிறார்கள். தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கிறார் கே.எஸ்.தங்கசாமி.
“தான் ஒரு யானை பலம் கொண்டவன் என்பதையறியாத ஒருவனுக்கு கிடைத்த கஷ்டங்களும், வேதனைகளும் எப்படி அவனுக்குள் யானை பலம் கொண்ட சக்தியை உணர வைத்து ஜெயிக்க வைக்கிறது என்பதுதான் கதை…” என்கிறார் இயக்குநர்.
படத்தின் டிரெயிலரை பார்த்தால் ஒரு காதல்.. ஒரு மோதல்.. கொஞ்சம் அரசியல்.. இடையூறு செய்யும் அதிகாரம் என்று அனைத்தும் கலந்த கலவையாகத் தெரிகிறது.. வரட்டும் பார்த்துவிடுவோம்..!