ஈஷான் புரொடெக்சன்ஸ் நிறுவனம் தனது அடுத்தப் படத் தயாரிப்பை இன்று துவக்கியுள்ளது.
நடிகர் திலகத்தின் பேரனும், நடிகர் திலகத்தின் மூத்த மகனான ராம்குமாரின் மகன் நடிகர் துஷ்யந்த் சினிமா தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். இவர் தனது மனைவி அபிராமி துஷ்யந்துடன் இணைந்து ஈஷான் புரொடெக்சன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை சென்ற வருடம் துவக்கியிருந்தார்.
இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக நடிகர் காளிதாஸ் ஜெயராம், பிரபு நடிப்பில் ‘மீன் குழம்பும் மண்பானையும்’ என்ற படத்தை சென்ற வருடம் தயாரித்து வெளியிட்டிருந்தார்கள்.
இப்போது தங்களது நிறுவனத்தின் இரண்டாவது படத்தையும் துவக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் துஷ்யந்த்.
இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார். நடிகை நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். மேலும் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகையரும் நடிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவு – கே.ஜி.வெங்கடேஷ், கதை – ஈ.முருகன், வசனம் – டி.ஜோதி அருணாச்சலம், இசை – டி.இமான், திரைக்கதை, இயக்கம் – எழில், தயாரிப்பு – அபிராமி துஷ்யந்த், ஆர்.ஜி.துஷ்யந்த்.
எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ’வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் 2015-ம் ஆண்டு சூப்பர் ஹிட்டானது நினைவிருக்கலாம். இதே கூட்டணி மீண்டும் இந்தப் படத்திற்காக இணைந்துள்ளது.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் துஷ்யந்த், அபிராமி துஷ்யந்த், இயக்குநர் எழில், நடிகர் விஷ்ணு விஷால், ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் படத்தில் பங்கு பெறும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.