full screen background image

என்னோடு விளையாடு – சினிமா விமர்சனம்

என்னோடு விளையாடு – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ரேயான் ஸ்டுடியோஸ் மற்றும் டொரோண்டோ ரீல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

‘காதல்’ படத்தின் மூலம் நம் எல்லோர் வீட்டுப் பிள்ளையாகவே ஆகிவிட்ட ‘சின்ன தளபதி’ பரத்தும், ‘மத யானைக் கூட்டம்’ படத்தில் அறிமுகமாகி ‘கிருமி’வரை மிக வேகமாக வளர்ந்து வரும் கதிரும் இந்தப் படத்தில் ஹீரோக்களாக நடித்துள்ளனர். 

மேலும் சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி, யோக் ஜே.பி, கமலா தியேட்டர் கணேஷ், வெங்கடேஷ்  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – யுவா, படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, இசை- சுதர்சன்.எம் குமார்  & ஏ.மோசேஸ்,  பாடல்கள் – விவேகா, சாரதி, அருண்ராஜா காமராஜ், கதிர்மொழி ஆக்ஷன்-ஓம் பிரகாஷ்,  நடனம்-விஜிசதீஷ், கலை-சுப்பு அழகப்பன், எழுத்து, இயக்கம்- அருண் கிருஷ்ணசுவாமி, தயாரிப்பு – ரேயான் ஸ்டுடியோஸ் மற்றும் டொரோண்டோ ரீல்ஸ்.

ஒரு கட்டுமான நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக பணிபுரியும் பரத்துக்கு குதிரை ரேஸ் மீது அலாதி பிரியம். தனது கம்பெனியில் இருந்துகூட பணத்தைக் கையாடல் செய்து குதிரை ரேஸில் கலந்து கொள்கிறார்.

துவக்கத்தில் சில, சில வெற்றிகள் கிடைத்தாலும் போகப் போக அவருக்கு கிடைப்பதெல்லாம் தோல்விகளே.. எந்தக் குதிரை ஜெயிக்கும் என்பதைக் கணிப்பதில் தான் ஒரு வல்லவன் என்பதை பரத் நினைத்துக் கொண்டாலும், கடைசி நிமிடத்தில் அவர் பணம் கட்டும் குதிரைகள் தோல்வியைத் தழுவுகின்றன.

இப்போதைய நிலைமையில் பரத் 27 லட்சம் ரூபாய் அளவுக்கு கடனாளியாக இருக்கிறார். இதில் அவரது கம்பெனி பணம் போக.. மீதமெல்லாம் பல்வேறு வங்கிகளின் கடன் அட்டை மூலமாக அவர் செலவழித்ததுதான்.

தினம்தோறும் வங்கிகளில் இருந்து வரும் போன் அழைப்புகளில் “கடனை எப்போ கட்டுவீர்கள்…?” என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் பரத் தனது கம்பெனியில் செய்த தில்லுமுல்லு நிர்வாகத்திற்கும் தெரிய வர.. ஒரு வாரம் நேரம் கொடுத்து அதற்குள்ளாக பணத்தைக் கட்டும்படியும், இல்லையெனில் சிறைக்கு போக நேரிடும் என்று பரத்தையும் எச்சரிக்கிறார்கள்.

இதே நேரத்தில் இசை ஆசிரியையாக இருக்கும் சாந்தினியை பார்த்தவுடன் லவ்வாகிறார் பரத். தன்னுடைய தந்தையிடம் பரத்தை அழைத்து வந்து அறிமுகப்படுத்துகிறார் சாந்தினி. அவரது தந்தையோ பரத்தின் ஜாதகத்தையே பகிரங்கப்படுத்துகிறார்.

அவர் 27 லட்சம் ரூபாய் கடனில் இருப்பதையும்.. கிரெடிட் கார்டு கடனுக்காக பல்வேறு வங்கிகள் பரத்தை தேடி வருவதையும் சொல்லி எந்த நம்பிக்கையில் “இவனை உனக்குக் கல்யாணம் செய்து வைப்பது…” என்கிறார்..!

ஒரு பக்கம் காதல் நிறைவேறாத நிலைமை.. இன்னொரு பக்கம் இன்னும் ஒரு வாரத்தில் பணத்தைக் கட்டாவிட்டால் உங்களுடைய பெயர் சிபில் அமைப்பில் சேர்க்கப்படும் என்கிற வங்கிகளின் கடைசி கட்ட எச்சரிக்கை.. கம்பெனி பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லையெனில் சிறைக்கு செல்ல வேண்டிய நிலைமை.. என்று மூன்று புறமும் தன்னை எதிர்நோக்கியிருக்கும் இந்த பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்து வருகிறார் பரத்.

இதே நேரம் திருச்சியில் இருந்து சென்னைக்கு வேலையில் சேர வருகிறார் கதிர். வந்த இடத்தில் கதிரின் தங்கையின் பிரெண்ட்டான சஞ்சிதா ஷெட்டியின் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை. இயல்பிலேயே பெண்கள் பக்கமே போக விருப்பமில்லாத கதிருக்கு இது தர்மசங்கடத்தைக் கொடுத்தாலும் வேறு வழியில்லாமல் அந்த வீட்டில் இருக்கிறார்.

ஒரு நிலையில் புரிந்து கொள்ளாத சூழலில் சஞ்சிதாவுக்கும், கதிருக்கும் இடையில் முட்டல் மோதல் உருவாகிறது. வீட்டைவிட்டு போக முடிவெடுக்கிறார் கதிர். ஆனால் இதனை சஞ்சிதா விரும்பவில்லை. கதிரை இருக்க வைக்க நினைக்கிறார். ஆனால் அதை அவரால் வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

அந்த நேரத்தில் கதிரின் பையில் இருந்து ஒரு எலி இறங்கி வீட்டுக்குள் ஓடி ஒளிகிறது. “அந்த எலியைக் கண்டுபிடிச்சு வெளில எடுத்துப் போட்டுட்டு நீங்க வீட்டைக் காலி பண்ணுங்க…” என்று சஞ்சிதா சொல்லிவிட.. எலியைத் தேடி அலைகிறார் கதிர். எலி அவர் கண்ணுக்கே சிக்கவில்லை. அதே நேரம் கதிருக்கும் அந்த வீட்டில் இருந்து வெளியேறும் சூழல் பிடிக்கவில்லை. அதனால் தந்திரமாக அவரும் எலியை பிடிக்கும் முயற்சியைத் தொடராமலேயே இருக்கிறார்.

“சஞ்சிதாவின் பூர்வீக வீடு ஏலத்தில் இருக்கிறது. அதற்கு 25 லட்சம் ரூபாய் தேவை. பணம் கிடைத்தால் வீட்டை மீட்டுவிடுவேன்…” என்று கண் கலங்குகிறார் சஞ்சிதா. அவருக்கு எந்த வகையிலாவது உதவி செய்ய வேண்டும் என்று கதிர் துடித்துக் கொண்டிருக்கிறார். இந்த உதவி செய்யும் மனப்பான்மையே கதிருக்குள் காதலை ஏற்படுத்திவிட அது சஞ்சிதாவுக்கும் பாஸாகிவிடுகிறது.

ஒரு காலத்தில் குதிரை பந்தயத்தில் ராஜா போல் இருந்த ராதாரவி, சில காரணங்களினால் சில காலம் அதில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். இப்போது மீண்டும் களத்தில் குதிக்கத் தயாராகிவிட்டார். ஆனால் முதல் ஓட்டத்திலேயே பரிசை வெல்ல துடிக்கிறார்.

இப்போதைய குதிரை பந்தய ஓட்டத்தில் தொடர்ச்சியான வெற்றியை யோக்ஜேபியின் குதிரைதான் பெற்று வருகிறது. ஆகவே யோக்ஜேபியுடன் ஒரு பரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வருகிறார் ராதாரவி. 50 லட்சம் ரூபாய் தருவதாகவும், அந்த வெற்றியை தனக்கு விட்டுக் கொடுக்கும்படியும் ராதாரவி கேட்கிறார்.

யோக்ஜேபியும் விட்டுத் தருவதாகச் சொல்ல.. பணத்தை மறுநாள் காலை ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டில் வந்து வாங்கிக் கொள்ளும்படி சொல்கிறார் ராதாரவி. சொன்னது போலவே அந்த ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு தனது ஆட்கள் மூலமாக 50 லட்சம் ரூபாயை கொடுத்துவிடுகிறார் ராதாரவி. அன்றைக்கு அதே ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு சாப்பிடுவதற்காக கதிரும் வந்திருக்கிறார்.

ஆனால் ராதாரவியின் அடியாட்கள் ரெஸ்ட்டாரெண்ட்டில் இருக்கும்போது போலீஸ் திடீரென்று வந்துவிட.. அவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டி பணம் இருந்த பையை கதிரின் கார் டிக்கியில் வைத்துவிட்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள் அடியாட்கள். ஆனாலும் போலீஸ் அவர்களை இழுத்துச் செல்ல.. வண்டியின் நம்பர் தெரியாமல் கலரை மட்டும் தெரிந்து கொண்டு போகிறார்கள் இருவரும்.

தன்னுடைய கணிப்பெல்லாம் கடைசி நிமிடத்தில் தோற்பதை அறிந்த பரத் இதற்கான காரணத்தை தேடுகிறார். அதில் குதிரை ரேஸில் ஓடும் குதிரைகளுக்கு மறைமுக ஊக்கம் கொடுத்தும், தொந்திரவு செய்தும் வெற்றிகளை சிலர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதாக தெரிந்து கொள்கிறார் பரத்.

இது தொடர்பாக அவர் உளவு வேலை பார்க்கும்போது ராதாரவியும், யோக்ஜேபியும் பேசுவதை ஒட்டுக் கேட்கிறார். அந்த 50 லட்சம் ரூபாயை அபேஸ் செய்ய திட்டம் தீட்டி அதே ரெஸ்ட்டாரெண்ட்டில் வந்து காத்திருக்கிறார் பரத். ஆனால் தனது கார் டிக்கியில் 50 லட்சம் ரூபாய் இருப்பதே தெரியாமல் கதிர் காரை எடுத்துக் கொண்டு போய்விட.. பரத்துக்கு ஏமாற்றமாகிறது.

அந்தப் பணம் கிடைத்தால் கடனை அடைத்து காதலியையும் திருமணம் செய்யலாம் என்ற நிலைமையில் பரத்.. 25 லட்சம் ரூபாய் கிடைத்தால் தனது காதலி சஞ்சிதாவின் வீட்டை மீட்டுக் கொடுத்துவிட்டு, அவளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கதிரும் காத்திருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் யோக்ஜேபி பணம் இன்னமும் தன் கைக்கு வந்து சேரவில்லை என்கிறார். ராதாரவியோ அவரது ஆட்களை தேடுகிறார்.

இறுதியில் என்னவாகிறது என்பதுதான் திரைக்கதை.

எல்லா வகையான சூதாட்டங்களை போலவே குதிரை பந்தயமும் ஒரு சூதாட்டம்தான். சென்னையில் பிரிட்டிஷார் காலத்தில் போர்களில் பயன்படுத்தப்பட்ட குதிரைகளை அதற்கான தேவைகள் இல்லாததால் சும்மாவே வைத்திருந்தார்கள். அப்போதுதான் பிரிட்டிஷ் பாரம்பரியத்தின்படி அவைகளை வைத்து எந்தக் குதிரை வேகமாக ஓடுகிறது என்பதற்காக ரேஸ் போட்டியை நடத்தினார்கள்.

தொடர்ந்து வெளிநாடுகளில் நடப்பதுபோலவே இதனை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக மாற்றி குதிரை பந்தயமாகவே மாற்றிவிட்டுப் போனார்கள். பின்பு தமிழகத்தைச் சேர்ந்த பணக்காரர்கள் தங்களது பணத் திமிரை காட்டுவதற்காக பந்தயக் குதிரைகளை வாங்கி அதனை வளர்த்து, பயிற்சி கொடுத்து இந்த குதிரை ரேஸில் ஓடவிட்டு மகிழ்ந்தார்கள்.

இது காலப்போக்கில் அனைத்துத் தரப்பு மக்களும் குதிரை மீது பணத்தைக் கட்டி சூதாட்டம்போல் ஆடும் விளையாட்டாக மாறிவிட்டது. இன்றைக்கும் கிண்டி ரேஸ் கிளப்பில் பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்திருப்பவர்களில் 90 சதவிகிதம் பேர் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களே..!

5 நிமிடங்களில் கட்டிய பணத்தைவிட இரட்டிப்பு மடங்கில் பணம் கிடைக்கிறதே என்பதற்காகவும், உழைக்காமல் மிக எளிதாக பணம் சம்பாதிக்க முடிகிறதே என்பதற்காகவும் பலரும் இந்த குதிரை பந்தயத்தில் ஈடுபட்டார்கள். இது மிக எளிதாக சென்னைவாழ் மக்களிடையே போதைப் பழக்கம், குடிப்பழக்கம்போல பரவி.. இன்றைக்கு பல குடும்பங்களின் தாழ்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாகிவிட்டது.

1971-ம் ஆண்டு இந்த குதிரை பந்தயத்தை ஒழிப்பதாக அப்போதைய தி.மு.க. அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து குதிரைப் பந்தயத்தை நிறுத்தியது. இதற்கான அடையாளமாக சென்னையின் மையப் பகுதியான அண்ணா சாலை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு குதிரையின் சிலையை நிறுவி, தனக்குத்தானே பெருமைப்பட்டுக் கொண்டது அப்போதைய தி.மு.க. அரசு.

ஆனால் குதிரை பந்தயத்தில் ஈடுபடும் தொழிலதிபர்கள் காட்ட வேண்டியவைகளை காட்டியும்.. கொடுக்க வேண்டியவைகளையும் கொடுத்து மறுபடியும் அதே தி.மு.க. அரசின் மூலமாகவே குதிரை பந்தயத்தை நடத்த அனுமதி வாங்கி திரும்பவும் நடத்தத் துவங்கினார்கள்.

1996-2001- ஆட்சிக் காலத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது திரும்பவும் கிண்டி குதிரை பந்தயத்தை நிறுத்துவதாக அறிவித்தது. ஆனால் இந்த முறையும் கட்சிக்கும், ஆட்சியாளர்களுக்கும் தகுந்த கவனிப்பை செய்து, அவர்களின் வழிகாட்டுதலிலேயே நீதிமன்றத்தில் இது சூதாட்டமே அல்ல என்றொரு தீர்ப்பை வாங்கி வெற்றிகரமாக இப்போதுவரையிலும் நடத்தி வருகிறார்கள் பந்தயக் குதிரையை வளர்த்து வரும் பணக்காரர்கள்.

“படத்தில் குதிரை பந்தயத்தில் ஈடுபடுவது அவர்களது குடும்பத்தையே பாதிக்கும். இது குடிப் பழக்கத்திற்கு ஈடான சமூக விரோதச் செயல் என்றெல்லாம் சொல்லியிருப்பதாக…” பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தப் படத்தின் இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி கூறியிருந்தார். ஆனால் படத்தில் அப்படி சொல்லவே இல்லை.

திருடிய பணத்தை வைத்து குதிரை பந்தயத்தில் ஈடுபட்டு.. அந்தக் குதிரை ஜெயிக்க.. ஜாக்பாட்டி வெற்றியில் கிடைத்த பணத்தில் இருந்து திருடிய பணத்தை திருடியவரிடமே திரும்பவும் ஒப்படைத்துவிட்டு, மீதமிருக்கும் பணத்துடன் ஹீரோக்கள் இருவரும் சந்தோஷமாக இருக்கப் போகிறார்கள் என்றே படத்தை முடித்திருக்கிறார். இதன் மூலமாக இந்தச் சமூகத்திற்கு இயக்குநர் சொல்லியிருக்கும் செய்தி என்ன என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.

நடிகர் பரத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பின்பு பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு படம் கிடைத்திருக்கிறது. நடிப்பைக் கொட்ட வேண்டிய காட்சிகளெல்லாமல் இல்லாமல்.. இப்போதைக்கு இருக்கும் யூத்துகளின் பிரச்சினையாக திரைக்கதை அமைந்திருப்பதால் வரும் காட்சிகளிலெல்லாம் பரத் என்கிற இளைஞனையே காட்டியிருக்கிறார் இயக்குநர். நன்று..!

இதேபோல் கதிரும்.. இவருக்குத்தான் அதிகமாக நடிக்க வாய்ப்பு. சஞ்சிதாவுடன் ஏற்படும் வாய்ச் சண்டை.. பின்பு அவரை நினைத்து வருத்தப்படுவது.. வீட்டிலேயே இரு என்று சொல்ல மாட்டாரா என்று ஏங்குவது.. தனக்குள் வந்துவிட்ட காதலைக்கூட சொல்லத் தெரியாமல் இருப்பது என்று ரொமான்ஸ் காட்சிகளில் கதிர் காட்டியிருக்கும் நடிப்பை பார்த்தால் நிச்சயமாக இவர் சரியான தேர்வு என்றுதான் சொல்ல வேண்டும்.

நாயகிகள் சாந்தினிக்கும், சஞ்சிதா ஷெட்டிக்கும் சமமான கதாபாத்திரம்தான். சாந்தினியைவிடவும் தனக்கு நடிப்பில் ஸ்கோப் நிறைய இருப்பதால் அதில் நிஜமாகவே கவர்ந்திருக்கிறார் சஞ்சிதா ஷெட்டி.

தூக்கத்தில் புரண்டு விழும் தனது குணத்தை மறைக்க முடியாமல் சொல்லிவிட்டு பின்பு அதைச் சமாளிக்க சண்டையிடுவதும்.. தனது பூர்வீக வீட்டின் மீதான பாசத்தை மறைக்க முடியாமல் அதனை நினைத்து ஏங்குவதும், பேசுவதுமாக காதலருக்கு தன் மீதான காதலை தோற்றுவிக்கும் கேரக்டர் ஸ்கெட்ச்சில் சஞ்சிதா ஷெட்டி ஸ்கோர் செய்திருக்கிறார்.  பாடல் காட்சிகளில் எல்லை மீறாமல்.. இருவருமே கச்சிதமாக மாடர்ன் டிரெஸ்களில் வந்து கலக்கியிருக்கிறார்கள்.

ராதாரவி வழக்கம்போல.. அவர் இருக்கும் காட்சிகள் முழுவதிலுமே அவரே கவர்கிறார். யோக்ஜேபியுடன் அலட்சிய நடிப்பை தனது கம்பீர நடிப்பால் ப்பூ என்று ஊதி தள்ளுகிறார்.  வில்லன்களில் இன்னமும் அசைக்க முடியாதவர் ராதாரவி என்பதில் சந்தேகமேயில்லை.

ஒளிப்பதிவாளர் யுவாவின் கேமரா பணிகள் அசத்தல். ஒரு காட்சியில்கூட சாதாரணமாக இல்லை. காட்சிகள் அனைத்துமே அழகுணர்ச்சியுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. குதிரை பந்தயக் காட்சிகளை சினிமாத்தனமாக திரில்லிங் அனுபவத்தில் எடுத்து அதனை கச்சிதமாகத் தொகுத்திருக்கிறார்கள்.

பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். எதுவும் இரண்டாவது முறையாக கேட்கும் நிலையில் இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம். இசையமைப்பாளர் சுதர்சன் எம்.குமாரின் பின்னணி இசை படத்திற்கு கிடைத்த ஒரு பலம் என்றே சொல்லலாம். 

குதிரைகள் லாயத்திற்குள் நுழைந்து குதிரைகளை கொல்வது.. அதன் பின் இதன் விளைவுகள் என்ன என்று காட்டப்படாதது.. யோக்ஜேபி ரேஸ் கிளப்பின் ரெஸ்ட் ரூமுக்குள் சர்வசாதாரணமாக துப்பாக்கியால் சுட்டு ஒருவனை கொலை செய்வது.. போலீஸ் உயரதிகாரிகள் இரு தரப்பினருடன் நட்புறவோடு இருப்பது.. பழகுவது.. என்று சில இடங்களில் புருவத்தை உயர்த்தி கேள்வியெழுப்ப வேண்டிய நிலைமை இருந்தாலும்..

ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் ஒரு சுவையான திரில்லிங் அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை..!

‘என்னோடு விளையாடு’ – நிச்சயமாக நாமும் விளையாடலாம் என்பதுதான் உண்மை. 

Our Score