full screen background image

என்ன சத்தம் இந்த நேரம் – சினிமா விமர்சனம்

என்ன சத்தம் இந்த நேரம் – சினிமா விமர்சனம்

ஹாலிவுட்டின் பரபரப்பு தேடல் தன்மையைக் கொண்ட படங்களைப் பார்த்து பார்த்து அதன் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் இப்படியொரு சினிமாவை தமிழில் படைத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் இயக்கம் பயின்று இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் குரு ரமேஷ்..!

வாய் பேச முடியாத, காது கேளாதோர் பள்ளியில் இருந்து சில குழந்தைகள் மிருக்க் காட்சி சாலைக்கு சுற்றுலா செல்கின்றனர். அன்றைக்கு பார்த்து மலைப்பாம்பு இருக்கும் அறையைப் பூட்ட காவலர் மறந்துவிட.. அது வெளியில் சுதந்திரமாக உலா வருகிறது. இந்த நேரத்தில் 4 குழந்தைகள் அந்தக் காட்டுக்குள் காணாமல் போய்விட.. மிருக்க் காட்சி சாலை காவலர்களும், குழந்தைகளை அழைத்து வந்த டீச்சரும் தேடுகிறார்கள். அவர்கள் கிடைத்தார்களா..? என்னவானது..? என்பதுதான் படத்தின் கதை..!

இந்தப் படத்திற்கு எதற்கு இந்த அபூர்வமான 4 குழந்தைகளை நடிக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை..! ஒரே பிரசவத்தில் பிறந்த அதிதி, அக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி என்ற அந்த 4 குழந்தைகள்தான் இதில் மெயின் கேரக்டர்களை செய்திருக்கிறார்கள். அதிலும் வாய் பேச முடியாத.. காது கேளாத கேரக்டர்கள்.. இந்த கேரக்டர் ஸ்கெட்ச்சையும் இயக்குநர் படத்தில் சரவர பயன்படுத்திக் கொள்ளவில்லை.

படத்தின் துவக்கத்திலேயே குழந்தைகள் பெற்றோர்கள் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போயிருப்பதும், அன்றைக்குத்தான் கடைசியான வழக்கு விசாரணை என்பதையும் சொல்லிவிடுகிறார்கள். அம்மாவும், அப்பாவும் விழுந்தடித்து ஓடிவரும்போதே படத்தின் கிளைமாக்ஸ் என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது..!

கிராபிக்ஸையெல்லாம் தமிழ்ப் படங்களில் கொண்டு வருவதென்றால் அது கடலில் போடும் பெருங்காயம் மாதிரி.. அனகோண்டா சைஸுக்கு ஒரு பாம்பை கிராபிக்ஸில் காட்டுவதற்குள் படாதபாடுபட்டிருக்கிறார்கள்..!

குழந்தைகளை ச்சும்மா வந்து போனதில் இயக்குநருக்கு என்ன திருப்தியோ தெரியவில்லை.. அவர்களுடைய சைகை மொழி சில இடங்களில் அழகாக இருக்கின்றன என்றாலும், தாங்கள் தனித்துவிடப்பட்டிருக்கிறோம் என்ற பய உணர்வே அவர்களிடத்தில் இல்லாமல் இருப்பது, படம் பார்த்தவர்களுக்கே ஏதோ ஒரு படம் பார்த்த உணர்வையே காட்டியது..!

ஒரு சின்ன அழுகை.. ஒரு சின்ன பயம்.. இப்படி எதையுமே காட்டாமல் திரைக்கதையின் ஓட்டத்திற்கேற்ப அங்கிருந்து தப்பிப்பதற்காக அவர்களே செய்கின்ற முனைப்புகளுடன் கதை நகர்வது சின்னப் புள்ளைகளுக்கு ஏற்ற படமாகவே இதனை அடையாளம் காட்டியது..!

இப்படிப்பட்ட கதையில் இந்த மனோபாலா, சிவசங்கர் கதை தேவையா..? இப்படியொரு காமெடி கடத்தல் நாடகத்தினை சலிப்போடு பார்த்து வெறுப்பாகிவிட்டது..! ஒரு போலீஸ் உதவி கமிஷனர் வருகிறார். பின்பு அமைச்சரே தேடி வருகிறார். அவரை வம்பிழுக்கும் ஒரு பெண் பத்திரிகையாளரை “நீ முந்தா நாள் ராத்திரி மகாபலிபுரம் ரோட்டுல ஒரு பையனோட நெருக்கமா கட்டிப்பிடிச்சுட்டு போய் போலீஸ்கிட்ட சிக்கி நல்லவேளையா தப்பிச்சிட்ட.. நீயெல்லாம் என்னைய கிண்டல் செய்றியா..?” என்கிறார் அமைச்சர்..? என்ன கொடுமை சரவணா இது..? இதெல்லாம் இந்தப் படத்துக்குத் தேவைதானா..?

சீரியஸ் நேரங்களில் காமெடி செய்வதை போல சுவாமிநாதன் பிராணிகள் நல வாரியத்தில் இருந்து வந்து “மலைப்பாம்பை கொல்லக் கூடாது..” என்று லெக்சர் அடிப்பதும்.. போலீஸ் கமிஷனரையே உள்ளே விடாமல் அனுமதி மறுப்பது என்பதும் ஏதோ இயக்குநர் இத்தனை நாட்களாக வெளிநாட்டில் வசித்து வந்து இப்போதுதான் தமிழ்நாட்டுக்குள் கால் வைத்திருக்கிறார் போன்ற உணர்வைத்தான் தந்தது..!

அன்றைக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை.. அதற்குள்ள இந்தக் குழந்தைகள் பிரச்சினை என்று திசை திருப்பிய அந்த ஒரு திரைக்கதை மட்டுமே படத்தின் பலம். மதியம் 3 மணிக்கு கல்யாணம் செய்யவிருக்கும் டீச்சர் மாளவிகா.. தந்தைக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து எஸ்கேப்பாக போகும் நேரத்தில் இந்தச் சிக்கல் இவருக்கு..

குழந்தைகளின் அம்மா, அப்பாவாக ‘காதல் மன்னன்’ மானுவும், ‘ஜெயம்’ படத்தின் இயக்குநர் ராஜாவும் நடித்திருக்கிறார்கள். அவ்ளோதான்..! சொல்வதற்கு ஒன்றுமில்லை..! ராஜா இன்னமும் கொஞ்சம் டிரை செய்தால் ‘தம்பி’ போலாகிவிடலாம்..!

ஒரு மயில் தோகையைத் தருவதாகச் சொல்லி வாக்கு கொடுத்துவிட்டு அதை எடுக்க நேரமில்லாமல் தவிக்கும் இமான் அண்ணாச்சி.. தனது காதலிக்கு அன்றைக்கு திருமணம் என்பதால் அதே நேரம் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலை செய்யத் தயாராகியிருக்கும் கார்டு நிதின் சத்யா.. டைவர்ஸ் கிடைத்துவிடும் என்கிற பரபரப்பில் இருக்கும் அம்மா, அப்பா.. இப்படி இவர்களது கதையுடன் துவங்கும் இந்தப் படம் மிருகக் காட்சி சாலைக்குள் வந்தவுடன் வழி தெரியாத மலைப்பாம்பாக மாறிவிடுகிறது..

நிதின் சத்யாவின் சீரியஸே இல்லாத தன்மையும், மாளவிகாவுடன் சேர்ந்து தேடுதல் வேட்டை நடத்தும் காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக எரிச்சலைத்தான் உண்டு செய்கிறது.. தூக்க மாத்திரையை விழுங்கியவுடன் மலைப்பாம்பு சட்டென மயங்கி விழுவதாக அமைத்திருக்கும் திரைக்கதை.. விட்டலாச்சார்யாவையே தோற்கடித்துவிட்டது..

இமான் அண்ணாச்சி சிகரெட் லைட்டரை வைத்து மலைப்பாம்பிடம் இருந்து தப்பிப்பதும் இதே கதைதான்.. கிளைமாக்ஸில் அந்தக் குழந்தைகள் ரெஸ்ட்டாரெண்ட்டை தேடிப் பிடித்து ஓடி வரும் இடம்கூட படத்தை முடிக்கணுமேன்னு இயக்குநர் அவசரப்படுத்தியதால்தான் என்று நினைக்கிறோம்..!

இன்னொருவுலகத்தின் பரவசத்தையும், அடுத்தது என்ன என்ற பரபரப்பையும், குழந்தைகளின் ஆர்வத்தையும், மிருகக் காட்சி சாலையை பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்க வேண்டிய இந்தப் படம், வெறுமனே ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் ஒன்றாக நடித்திருக்கும் முதல் தமிழ்ப் படம் என்கின்ற லிம்கா சாதனையைப் படைத்திருக்கும் ஒரு செயலைத் தவிர வேறெந்த பெருமையையும் பெறவில்லை..!

அந்தக் குழந்தைகளுக்கு எமது வாழ்த்துகள்..!

Our Score