ஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் ‘ஆங்கில படம்.’
இந்தப் படத்தில் ராம்கியும், சஞ்சீவ்வும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தில் நாயகியாக புதுமுகம் ஸ்ரீஜா அறிமுகமாகிறார். மேலும் மீனாட்சி, சிங்கம்புலி, சிங்கமுத்து, மதுமிதா என்று நிறைய நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர்.
இசை – எம்.சி.ரிக்கோ, ஒளிப்பதிவு சாய்சதிஷ், கலை – பழனிவேல், படத்தொகுப்பு – மகேந்திரன். இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் ராதாரவி, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி நட்ராஜ், பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கமுத்து, ராம்கி, கலை இயக்குநர் மோகன மகேந்திரன், இயக்குநர் குமரேஷ் குமார் மற்றும் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசுகையில், “தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் பெருமளவில் வெற்றி பெற்றுவிடுகின்றன. ஓடுதோ, ஓடலையோ ஒரு வாரத்திலேயே இத்தனை கோடி வசூல்ன்னு கண்ககு சொல்றாங்க. இப்பக்கூட ஒரு படத்தோட மொத்த வசூல் 500 கோடின்னு சொன்னாங்க.
வருமான வரித்துறை ஒரு இடத்துல 500 கோடி ரூபாய் பணத்தை கைப்பத்துனாங்க. ஆனால் அதை எண்ணி முடிக்க 18 நாளாச்சு. இதெல்லாம் நடக்குற காரியமா..? சொல்லலாம்.. அவ்ளோ வசூல்.. இவ்ளோ வசூல்ன்னு.. நம்பணுமே..? இப்படி பெரிய பட்ஜெட் படங்கள் ஜெயித்தாலும் அது சினிமாவுக்கு முக்கியமல்ல. மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட் படம் உருவாக குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வருடங்களாகும், ஏனெனில் ஹீரோ கால்ஷீட், இசையமைப்பாளர் கால்ஷீட், இயக்குநர் கால்ஷீட் என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.
ஆனால் சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றால், தொடர்ந்து அதே தயாரிப்பாளர்கள் மீண்டும் படமெடுப்பார்கள், அதன் மூலம் பல்வேறு கலைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். எனவே சிறிய பட்ஜெட் படங்களுக்கு அதிக திரையரங்குகளை தியேட்டர் உரிமையாளர்கள் கொடுக்க வேண்டும்.
இப்போதெல்லாம் புது இசையமைப்பாளர்களிடம்தான் இசை இருக்கிறது. பழைய ஆட்கள், அதை இதை என்று எங்கிருந்து எடுத்தாவது சுட்டுப் போட்டுவிடுகிறார்கள். ராப் வகை பாடல்கள்தான் இப்போ ரொம்ப பிரபலமா இருக்கு. ஆனால் அதுக்கு எப்படி லிப் மூவ்மெண்ட் கொடுக்குறாங்கன்னு தெரியலை. நல்ல வேலை நமக்கு எந்தத் தொல்லையும் இல்லை. இந்த வில்லனா நடிக்குறதுல இருக்குற ஒரே செளகரியம் இதுதான்.
என்னை புக் செய்ய வரும்போதே சொல்லிருவேன். ரொம்ப நடக்க முடியாது. ஓட முடியாது. மாடிப் படி ஏறி, இறங்க முடியாது. முக்கியமா டான்ஸ் ஆட முடியாது. பைட் செய்ய முடியாதுன்னு எல்லாத்தையும் சொல்லிட்டுத்தான் ஒத்துக்குவேன்.
நான் பார்த்ததிலேயே வெள்ளை தாடி வைச்சுக்கிட்டு, வெள்ளையா முடியையும் வைச்சுக்கிட்டு ஒரு மனுஷன் அசால்ட்டா அழகாக இருக்காருன்னா அது சூப்பர் ஸ்டார் ரஜினிதான். ஒரு சமயம் வெள்ளை முடி வைச்சுக்குவார். வெள்ளை தாடியோட வருவார். அப்புறம் கெட்டப் மாத்தியும் வருவார். எப்படி வந்தாலும் லுக்குல அவரை அடிச்சுக்க முடியாது.
ரஜினிக்கப்புறம் என்னை அந்த மாதிரியான வெள்ளை முடி, வெள்ளை தாடி கெட்டப்புல கவர்ந்தது அஜீத்துதான். அவரும் ஒரு ஸ்டைல்ல கவர்ச்சியா இருக்காரு. இவங்களுக்கப்புறம் மூணாவது என் மாப்ளை ராம்கிதான் இந்த சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலுக்கு பொருத்தமா இருக்காரு.
இப்போ இங்கிலீஷ்தான் எல்லாருக்கும் சரளமா வருது. போனை எடுத்தா எல்லாரும் ஹலோன்னுதான் சொல்றோம். போனை கண்டு பிடிச்சவரோட ஒய்ப் பேரே ஹலோதான். தமிழ், தமிழ்ன்னு பேசுறவங்களே போனை எடுத்தா ஹலோன்னுதான் பேசுறார். அந்தளவுக்கு ஆங்கில ஆதிக்கம் அதிகமாயிருச்சு.
ஒரு பேய்ப் படம் எடுத்தால் தொடர்ந்து பேய்ப் படமா எடுக்குறாங்க. இப்பல்லாம் ஜனங்களுக்கு பேய் பயமே இல்லை. தியேட்டர்ல பேய் வருதுன்னா சிரிக்கிறான். அந்த அளவுக்கு நம்மாளுங்க ஆக்கிட்டாங்க..
இந்தப் படத்தோட இயக்குநர் தானும் ஒரு கேரக்டர்ல நடிக்கிறேன்னு சொன்னார். நான் உடனே வேணாம்ண்ணே. ஏன்னா அது இயக்குநர் வேலைய பாதிக்கும். அதுனாலதான் சொல்றேன். நானும் இத்தனை வருஷமா நடிச்சிருக்கேன். ஒரு படமாவது இயக்கியிரலாம்ன்னு நினைச்சுக்கி்ட்டேயிருக்கேன். அது தள்ளிப் போயிக்கிட்டேயிருக்கு. செய்ய முடியலை..
எனக்கு இப்பவும் வில்லனா நடிக்கத்தான் ஆசை. ரேப் சீன்ல் நடிக்கத்தான் ஆசை. ஆனா எங்க விடுறாங்க.. குணச்சித்திர வேடம்.. குணச்சித்திர வேடம்ன்னு கிட்டத்தட்ட நாகையா ரேஞ்சுக்கு நம்மளை கொண்டு போயிட்டாங்க..
இப்போ உள்ள ஹீரோக்கள் வருஷா வருஷம் தங்களோட வயதைக் குறைச்சுக்கி்ட்டே போறாங்க. ஒரு ஹீரோகிட்ட சொன்னேன்.. இப்படியே வயசைக் குறைச்சிக்கிட்டே போய் உங்கம்மா வயித்துக்குள்ள போயிராதடான்னேன்.
இப்போ இருக்கிற சினிமா தியேட்டர்லெல்லாம் டிக்கெட் கட்டணத்தைவிட பாப்கார்ன் கட்டணம்தான் ஜாஸ்தி. அதோட டிக்கெட் வசூலையும்விட கேண்டீன் வசூல்தான் அதிகமா வருது. நான் ஒரு மல்டிபிளெக்ஸ் தியேட்டருக்கு படம் பார்க்கப் போனேன்.. ஏண்டா போனோம்னு ஆகிப் போச்சு.. ஆள் மாத்தி ஆள் பேசிக்கிட்டேயிருக்காங்க. ஒருத்தன் வீட்டுப் பிரச்சினையை பேசுறான்.. இன்னொருத்தன் ஆபீஸ் பிரச்சனையை பேசுறான். சைட்ல ஒருத்தன் விட்டான்னா.. முன்னாடி உக்காந்திருக்கிறவன் ஆரம்பிக்கிறான். இப்படி பார்த்தா படம் எப்படி மனசுக்குள்ள உக்காரும்..?” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் சிவப்பாக இருந்தால் அவர்களுக்கு LOVER BOY என்ற இமேஜ் வைத்துவிடுவார்கள், ஆனால் ராம்கி மட்டுமே சிவாப்பாக இருந்து ஆக்க்ஷன் ஹீரோவானவர். மேலும் கிராமங்களில் பல்வேறு திறமையான இளைஞர்கள் உள்ளார்கள். அவர்களை தமிழ் சினிமாவில் சேர்த்துக் கொண்டு ஆதரிக்க வேண்டும். நட்டியை கதாநாயகனாக வைத்து விரைவில் நான் ஒரு படம் இயக்கப் போகிறேன்…” என்றார்.
இயக்குநர் R.V.உதயகுமார் பேசுகையில், “தமிழ் சினிமாவில் திரைப்படத்தில் வேகத்தை மக்கள் விரும்புகிறார்கள். உணர்ச்சிபூர்வமான படங்களை விரும்புவதில்லை. இப்போதெல்லாம் பாடல் வரிகளில் ஆங்கில வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகிறர்கள், தமிழ் சொற்களை பயன்படுத்துவதில்லை. இளம் இசையமைப்பாளர்கள் தமிழ் சொற்களை பாடல் வரிகளில் பயன்படுத்தவேண்டும்..” என்றார்.
பவர் ஸ்டார் சீனிவாசன் பேசுகையில், “இங்கிலீஷ் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு நீங்க வரணும்’ என்று என்னை கேட்டார்கள். முதல்ல எனக்கு ஒண்ணும் புரியலை. ‘இங்கிலீஷ் படத்துல பாட்டு ஏது..? அதுக்கெதுக்கு என்னை கூப்பிடுறீங்க’ன்னு கேட்டேன். அதுக்கப்புறம்தான் ‘இது தமிழ்ப் படம்தான். படத்தோட தலைப்பே இங்கிலீஷ் படம்தான்.. ராம்கி நடிச்சிருக்காரு’ன்னு சொன்னாங்க.
எனக்கு ராம்கியை மிகவும் பிடிக்கும். இத்தனை வருஷமாகியும் அவரின் தலை முடி அப்படியேதான் உள்ளது. அவரை பார்க்கும்போது எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது. பல நேரம் அவர் முடி நிஜம்தானா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றே அவரை உரசியிருக்கிறேன்.
நான் இந்த சினிமா துறைக்கு வர முக்கிய காரணம் யார் என்று கேட்டால் ராதாரவி அண்ணன்தான் என்று சொல்வேன். சினிமாவுக்குள் வரும்போது நான் முதலில் அவர் வீட்டுக்கு போயி அவரைச் சந்தித்தேன். ‘அண்ணே, படம் பண்ணலாம்னு இருக்கேன்.. ஹீரோவா பண்ணவா..?’ என்று கேட்டேன்.
அதுக்கு அவர், ‘ஏலே, முட்டாப் பயலே.. நீ பாட்டுக்கு ஹீரோவா நடிச்சு தமிழ் சினிமாவை கெடுத்துடாதடா. உனக்கு காமெடிதான் செட்டாகும்’ என்றார். ‘என்னண்ணே, இப்படி சொல்றீங்க..? என் பணம்தாண்ணே..?’ என்றேன். ‘இருக்கட்டும்டா.. ஆனால் ஹீரோவுக்கு உன் முகம் ஒத்து வராது. நீ காமெடியே பண்ணு..’ என்றார் ராதாரவி. அதன்படி நடித்தேன். திரும்பவும் ஒரு நாள் அவர் வீட்டிற்கு சென்று ‘அண்ணே… நான் வில்லனாக நடிக்கட்டா…?’ என்றேன். அவர் ‘வேண்டாம்’ என்றார். அவர் ஏதோ பொறாமையில் கூறுகிறார் என்றுதான் நானும் நினைத்தேன். பின்புதான் தெரிந்தது. யாருக்கு எது நல்லா வருமோ அதைச் செய்து மக்களிடையே பெயர் வாங்குவதுதான் நல்லதுங்கறதுக்குத்தான் அண்ணன் அப்படிச் சொல்லியிருக்காருன்னு..!
நமக்கு நல்ல டெக்னீஷியன்கள் கிடைக்கவில்லை என இது போன்ற இசை வெளியீட்டு விழாக்களுக்கு வரும்போது ஃபீல் பண்ணியிருக்கிறேன். பரவாயில்லை, ஜனவரியில் புதுப் படம் ஒன்றை பிரமாண்டமான செலவில் தயாரிக்கப் போகிறேன். அந்தத் திரைப்படத்தில் இவர்களை கண்டிப்பாக பயன்படுத்துவேன்…” என்றார்.
இப்படத்தை பற்றி இயக்குநர் குமரேஷ் குமார் பேசும்போது, “இந்தப் படத்திற்கு இங்கிலீஷ் படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும்.
இந்தக் கதையை பல நடிகர்களிடம் சொன்னபோது, ‘கதை நல்லா இருக்கு; ஆனா நீ புது இயக்குநர் சொன்ன மாதிரி எடுப்பாயா?’ என கேட்டனர். ஆனால் இப்போது ராம்கி, சஞ்சீவ் கூட்டணியில் படம் சூப்பராக வந்துள்ளது. படம் பார்த்த தயாரிப்பாளர் உள்பட அனைவருக்கும் மகிழ்ச்சி. படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் விரைவில் திரைக்கு வரும்.
இப்படத்தில் நடித்துள்ள ராம்கி, சஞ்சீவ் இருவரும் இந்தப் படம் எங்களை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் என்றார்கள். உண்மையில் நீங்கள் இதுவரை பார்க்காத ராம்கி, சஞ்சீவை இப்படத்தில் பார்ப்பீர்கள்..” என்றார் நம்பிக்கையோடு..!