full screen background image

எங்க அம்மா ராணி – சினிமா விமர்சனம்

எங்க அம்மா ராணி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் வர்ணிகா, வர்ஷா என்னும் இரண்டு சிறுமிகளும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீஹரி, நமோ நாராயணா, அணி முரளி, இயக்குநர் மனோஜ்குமார், ரிந்து ரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ‘தங்கமகன்’ ஒளிப்பதிவாளர் ஏ.குமரன் ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டர் ஏ.எல். ரமேஷ்,  கலை விஜயகுமார். இப்படத்தின் இயக்குநரான பாணி, இயக்குநர் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்படத்தக்கது.

தயாரிப்பு – எம்.கே பிலிம்ஸ், இயக்குநர் – எஸ்.பாணி, தயாரிப்பாளர் – சி. முத்து கிருஷ்ணன், இசை – இளையராஜா, கேமரா – ஏ.குமரன்,  கலை – விஜயகுமார், படத் தொகுப்பு – ஏ.எல் ரமேஷ், தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.பி.சொக்கலிங்கம், பாடல்கள் – பழனி பாரதி, பி.ஆர்.ஒ – ரியாஸ் கே. அகமது, சவுண்ட் டிசைன் – உதயகுமார், ஸ்டில்ஸ் – எஸ்.பி.சுரேஷ்.

கதாநாயகியை மையப்படுத்திய கதை இது.

தமிழ்நாட்டில் இருந்து சென்று மலேசியாவில் செட்டிலானவர் சாய் தன்ஷிகா. இவரது கணவரை காதலித்து கரம் பிடித்ததால் ஒரே ஊராக இருந்தும் இருவர் வீட்டாரும் கடும் எதிர்ப்பில் இருக்கிறார்கள். இதனாலேயே 2 பெண் குழந்தைகள் பிறந்தும் இருவருமே ஊர் திரும்பாமல் இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தன்ஷிகாவின் கணவர் வேலை விஷயமாக மலேசியாவில் இருந்து கம்போடியா சென்றவர் திடீரென்று காணாமல் போகிறார். அவரை கண்டுபிடித்துத் தரும்படி கேட்டு மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம், கம்போடிய தூதரகம் ஆகியவற்றில் புகார் செய்கிறார் தன்ஷிகா. ஆனாலும் பலனில்லை. ஊருக்கும் தகவல் சொல்லிவிடுகிறார் தன்ஷிகா.

இந்த நேரத்தில் அவருடைய இரட்டை பெண் குழந்தைகளில் ஒருத்தியான தாரா திடீரென்று ஏற்பட்ட உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் இறந்து போகிறாள். அவளுக்கு இருந்தது மிக, மிக விநோதமான நோய் என்றும், இதே நோய் மீராவுக்கும் இருக்க வாய்ப்புள்ளதாக அவளுக்கு சிகிச்சையளித்த இளம் மருத்துவர் சொல்கிறார்.

இதனை முதலில் நம்ப மறுக்கும் தன்ஷிகா பின்பு மீராவுக்கும் அந்த நோய் இருக்கிறது என்பதை உணர்ந்து மேற்கொண்டு என்ன செய்வது என்று மருத்துவரிடமே கேட்கிறார்.

குளிர் பிரதேசத்தில்தான் இருக்க வேண்டும். உடலில் வெப்பமே படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் மீராவை தனித்துவிடக் கூடாது என்றெல்லாம் எச்சரிக்கை செய்கிறார் டாக்டர்.

டாக்டரின் அறிவுரையின்படி மலேசியாவிலேயே குளிர் பிரதேசமான ஒரு பகுதிக்கு மீராவுடன் குடி வருகிறார் தன்ஷிகா. அவர் குடியிருக்கும் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்குள் ஒரு முறை மீரா செல்ல.. அவளுக்குள் ஒரு ஆவி புகுந்து கொள்கிறது. அது ஒரு சிறுமியின் ஆவி.

அந்த ஆவியின் சொல்படி மீரா நடக்கத் துவங்க.. தன்ஷிகாவுக்கு பிரச்சினைகள் தொடர்கின்றன. ஏற்கெனவே கணவர் காணாமல் போன நிலைமை.. இரண்டு குடும்பத்தாரும் ஊருக்கு வரும்படி தொடர்ந்து கொடுத்து வரும் அழுத்தங்கள்.. மாமனாரின் மரணம்.. இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையில் மீராவின் இந்த தடாலடி மாற்றத்தை தன்ஷிகாவால் தாங்க முடியாமல் போகிறது.

மீராவின் இந்தச் செயல் ஒரு கொலையில் போய் முடிய.. அடுத்தக் கொலையை முடித்த பின்புதான் அவளது உடலை விட்டுப் போவேன் என்று அவளை பீடித்திருக்கும் ஆவி சொல்ல.. இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் கதை.

தன்ஷிகாதான் படத்தைத் தாங்கியிருக்கிறார். நல்ல நடிப்பு. இத்தனை நடிப்பாற்றலுடன் இருக்கும் இவருக்கு இவரது நடிப்புத் திறமை வெளிக்காட்ட ஒரு நல்ல படைப்பும், இயக்குநரும் கிடைக்கவில்லையோ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ‘பரதேசி’யைவிடவும் இதில்தான் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

மீரா, தாராவாக நடித்த சிறுமிகளின் நடிப்பும் மனதைக் கொள்ளையடிக்கிறது. கொஞ்சம் யதார்த்தமான நடிப்புக்காக நமோ நாராயணா, நெகிழ்ச்சியான மாமனாராக மனோஜ்குமார், மாமியார் ரிந்து ரவி, குற்றவுணர்ச்சியுடன் தன்ஷிகாவுக்கு கடைசிவரையிலும் உதவி செய்யும் டாக்டர்.. என்று பலரும் நடிப்பில் சோடை போகவில்லை.

படம் முழுவதுமே மலேசியாவில் படமாக்கியிருப்பதால் ஒளிப்பதிவை பற்றி சொல்ல வேண்டியதில்லை. கண்ணுக்குக் குளுமைதான். இசைஞானியின் இசையில் ‘வா வா மகளே’ மனதை நெருடுகிறது.. ‘அம்மான்னு உலகத்தில்’ பாடலும் கேட்கும் ரகம்.. பின்னணி இசையில் அடக்கி வாசித்திருப்பதால் காட்சிகளை ரசிக்க முடிந்திருக்கிறது.

படம் முழுவதுமே சோகமாக இருப்பதால் படத்தை அனைவராலும் ரசிக்க முடியுமா என்று தெரியவில்லை. கணவர் காணாமல் போன போர்ஷனை படத்தில் பாதிக்கும் மேலாக அப்படியே ‘அம்போ’ என்றுவிட்டுவிட்டு பேய், ஆவி, பழி வாங்குதல்.. வில்லன்கள் என்று திசை திரும்பியது ஏன் என்றும் தெரியவில்லை.

கிளைமாக்ஸில் தன்னைத்தானே பழி கொடுத்துவிட்டு மகளை வாழ வைக்கும் முடிவுக்கு வரும் நாயகியின் முடிவு எதிர்பாராதது என்றாலும், அம்மா பாசத்திற்கு அளவில்லைதான் என்றாலும், இது சரிதானா என்றும் கேட்கத் தோன்றுகிறது.

ஒரு பேய் உடம்பில் குடியேறியதால் நோயே காணாமல் போய்விடும் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய வடி கட்டிய முட்டாள்தனம் என்பதை இயக்குநர் ஏன் யோசிக்காமல் விட்டுவிட்டார்..? இதற்கு வேறு ஏதாவது கதை யோசித்திருக்கலாம்..!

இந்த ராணி சோகத்தை பிழிந்தெடுக்கிறாள்..!

Our Score