full screen background image

எனிமி – சினிமா விமர்சனம்

எனிமி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரித்திருக்கிறார்.

படத்தில் விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ், மாரிமுத்து, ஜார்ஜ் மரியான், கலை இயக்குநர் ராமலிங்கம், சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர், இசை – எஸ்.தமன், கலை இயக்கம் – டி.ராமலிங்கம், படத் தொகுப்பு – ரெய்மண்ட் டெர்ரிக் கிரெஸ்டா, எழுத்து – ஷான் கருப்பசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், நடன இயக்கம் – பிருந்தா, சண்டை இயக்கம் – ரவி வர்மா, நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.பி.சொக்கலிங்கம், உடைகள் வடிவமைப்பு – ப்ரீத்தா அகர்வால், பாடல்கள் – அறிவு, விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா, புகைப்படங்கள் – டி.நரேந்திரன், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமத், தயாரிப்பு – எஸ்.வினோத்குமார், எழுத்து, இயக்கம் – ஆனந்த் சங்கர்.

ஆர்யா விஷாலுடன் இணைந்து ஏற்கெனவே  இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் வில்லனாக நடித்ததில்லை. அவர் விஷாலுக்கு வில்லனாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’, ‘நோட்டா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கும் 4-வது திரைப்படம் இது.

ஊட்டியில் தன் 13 வயது மகனோடு மளிகை கடை நடத்தி வாழ்ந்து வருகிறார் தம்பி ராமையா. தன் மகனைப் பொத்தி பொத்தி வளர்க்கிறார். வாழ்க்கையில் படிப்பு மட்டும்தான் முக்கியம் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறார் தம்பி ராமையா. ஆனால், மகனுக்கு வெவ்வேறு விசயங்களில் ஆர்வம்.

தம்பி ராமையாவின் வீட்டிற்கு பக்கத்தில் குடி வருகிறார் பிரகாஷ்ராஜ். முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி. அவரது 13 வயது மகன் ஆர்யா. பிரகாஷ் ராஜ் தன் மகனை போலீஸ் அதிகாரியாக்க நினைத்து அவனுக்கு பலவிதமான போலீஸ் பயிற்சிகளை கொடுத்து வளர்க்கிறார்.  

அவர் தன் மகனுக்கு பயிற்சி கொடுப்பதை ஏக்கத்தோடு பார்க்கும் சிறுவயது விஷால் தானும் அவரிடம் பயிற்சி பெற வேண்டும் என்கிறான். பிரகாஷ்ராஜ் இருவருக்கும் ஒரேபோல் பயிற்சி கொடுக்கிறார்.

இந்தப் பயிற்சியின்போது ஆர்யாவைவிட விஷால் திறமையாளன் என்பது பிரகாஷ்ராஜூக்குத் தெரிய வர.. அவர் விஷாலை பெரிதும் பாராட்டுகிறார். இதனால் விஷால் மீது ஆர்யாவுக்கு சிறு வயதிலேயே இனம் புரியாத பொறாமை கலந்த கோபம் வருகிறது. இதைச் சரி செய்யும் முயற்சியில் பிரகாஷ்ராஜ் இருந்த நிலையில் திடிரென அவர் கொலை செய்யப்படுகிறார்.  

இந்த நேரத்தில் நண்பர்கள் இருவரும் பிரிகிறார்கள். தம்பி ராமையா தன் மகனை அழைத்துக் கொண்டு சிங்கப்பூர் வந்துவிடுகிறார். அங்கே சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்துகிறார். விஷால் தன் அப்பாவிற்குத் தெரியாமலே பல நல்லவற்றை சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களுக்குச் செய்து வருகிறார்.

அப்போது அங்கே வரும் இந்தியாவின் வெளியுறவைத் துறை அமைச்சரை கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. இதை விஷால் முறியடிக்கிறார். இந்த சதி வேலையை செய்தது யார் என்று விஷால் தேடும்போது அது ஆர்யா என்று தெரிய வந்து அதிர்ச்சியாகிறார்.

இதைத் தொடர்ந்து விஷாலுக்கும், ஆர்யாவுக்கும் இடையில் பெரும் போர் துவங்குகிறது. ஆர்யா இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட காரணம் என்ன? நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? பிரகாஷ் ராஜை யார், எதற்காகக் கொலை செய்தார்கள் என்பதற்கான விடைதான் இந்தப் படத்தின் மீதிமான திரைக்கதை.

விஷால் சண்டைக் காட்சிகளில் மிகவும் சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். அப்பா செண்டிமெண்ட் காட்சிகளில் ஓரளவு நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் இன்னும் துள்ளல் இருந்திருக்கலாம்.

ஆர்யாவிற்கு ஒரு மிகப் பெரிய வில்லன் கதாப்பாத்திரம். ஆனால் அவர் அப்பாத்திரத்தை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம். இந்த அளவுக்கு கொஞ்சம் நடிப்பு பின் தங்கியிருந்தது.

தம்பி ராமையா வழக்கம் போல் தன் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். பிரகாஷ்ராஜ் சற்று நேரமே வந்தாலும் அவரது முத்திரையைப் பதித்துச் செல்கிறார். நாயகி மிருளாளனிக்கு இது டிக்டாக் இல்லை என்பதை சொல்லித் தந்து நடிக்க வைத்திருக்க வேண்டும். மம்தா மோகன்தாஸ் சில காட்சிகளே ஆனாலும் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

படத்தில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள் சிறு வயது விஷால் ஆர்யாவாக வரும் இரு பையன்கள்தான். முதல் இருபது நிமிட படத்தை அவர்களே தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். அட்டகாச நடிப்பு. பாராட்டுக்கள்.

விஷால் நண்பராக வரும் கருணாகரன் எப்போதும் போல் வழக்கமான காமெடி கதாபாத்திரத்தில் வந்து சிரிப்பு மூட்ட முயற்சி செய்துள்ளார். மற்றபடி சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மாரிமுத்து, ஜார்ஜ் மரியான், கலை இயக்குநர் ராமலிங்கம், சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் அவரவர் வேலையை நிறைவாக செய்துள்ளனர்.

படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்துமே அனல்தான். பின்னணி இசையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் சாம் சி.எஸ். தமனின் இசையில் பாடல்கள் பெரிதாக சோபிக்கவும் இல்லை…சோதிக்கவும் இல்லை.

படத்தின் ஒளிப்பதிவாளர் மிகச் சவாலான ஷாட்களை எல்லாம் சிறப்பாக எடுத்திருக்கிறார். கண்ணைக் கவரும் பல ஷாட்களில் பிரம்மாண்டம் தெரிகிறது.  சி.ஜி., செட் வொர்க் இரண்டுமே அருமை. இரவு நேரக் காட்சிகளில் ஒளிப்பதிவுக்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள்போல் தெரிகிறது.

கதையின் மையப்புள்ளி மிக அழகானது. அதை செறிவான திரைக்கதையோடு அணுகியும் இருக்கிறார்கள். அதனால்தான் சில காட்சிகள் நம்மை நகரவிடாமல் கட்டிப் போடுகின்றன. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

முன் பாதியில் கதையை கொஞ்சம்  மெத்தனமாக கையாளப்பட்டிருப்பது  தெரிகிறது. அவ்வளவு பெரிய அசைன்மெண்ட்களை எல்லாம் அசால்டாக முடிக்கும் ஆர்யாவும் சரி, மிகப் பெரிய இண்டிலிஜெண்ட் ஆக வரும் விஷாலும் சரி… படத்தில் பல விஷயங்களில் வீக்காக காண்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.

திரைக்கதையில் ஏற்பட்டிருக்கும் சின்ன சறுக்கல் இது. ஆனாலும் படத்தில் டக் டக் என வரும் அதிரடி திருப்பங்கள் மட்டுமே படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன. துப்பறியும் காட்சிகளின் திரைக்கதை சுவாரஸ்யமாக செல்வது படத்திற்கு பெரிய பலம்.

ஒரு குழந்தை வளர்ந்து நல்லவராவதும், கெட்டவராவதும் குறித்து திரையில் காட்டியிருக்கும் காட்சிகளில் வலுவில்லை. வேகமாக நகரும் கதைக்கு காதல் டிராக் கை கொடுக்கவில்லை.

சின்ன சின்ன குறைகள் நிறைய இருந்தாலும் சண்டை பட ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில்தான் உருவாகியிருக்கிறது இந்த எனிமி’ திரைப்படம்..! கிளைமாக்ஸில் வரும் சண்டை காட்சி சிறப்பாக வந்திருக்கிறது. கதை, திரைக்கதை, இயக்கத்தில் கொஞ்சம் கூடுதல் கவனத்தைக் கொடுத்திருந்தால் இந்த ‘எனிமி’ வேறு மாதிரியாக பேசப்பட்டிருக்கும்.

RATINGS : 3 / 5

Our Score