full screen background image

எனக்கு வாய்த்த அடிமைகள் – சினிமா விமர்சனம்

எனக்கு வாய்த்த அடிமைகள் – சினிமா விமர்சனம்

வான்சன் மூவிஸ் சார்பில் ஷாம் சுதர்சன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

ஜெய் கதாநாயகனாகவும், ப்ரணீதா நாயகியாகவும், கருணாகரன், காளி வெங்கட், நவீன் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். இவர்களுடன் “நான் கடவுள்” இராஜேந்திரன், தம்பி ராமைய்யா, சூப்பர் குட் சுப்பிரமணி, இயக்குநர் மாரிமுத்து, இயக்குநர் ஆர்.என்.ஆர். மனோகர் போன்றோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசுவாமி, சண்டைப் பயிற்சி – ஹரி தினேஷ், நடனம் – காயத்ரி ரகுராம், சதீஷ், பாடல் வரிகள் – கபிலன், ‘காமெடி பஜார்’ மாறன், இசை – சந்தோஷ் தயாநிதி, மக்கள் தொடர்பு – நிகில், படத்தொகுப்பு – கோபி கிருஷ்ணா, எழுத்து, இயக்கம் – மகேந்திரன் ராஜமணி. இவர் தில்லுக்கு துட்டு ‘லொள்ளு சபா’ ராம்பாலாவிடம் இணை இயக்குநராகப் பயின்றவர். சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் கூட. அதனால்தான் படத்தின் ஒரு காட்சியில், நடிகர் சந்தானமாகவே தோன்றி நாயகனின் எண்ணத்தை மாற்றும் கெளரவத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.

மிக இறுக்கமான சூழலிலுள்ள தமிழக மக்களைக் கலகலப்பாக்க வந்துள்ளோம் என்கிறார் இயக்குநர் மகேந்திரன் ராஜமணி. ‘லொள்ளு சபா’ குழுவையும் ஆங்காங்கே காட்சிகளில் அழகாகப் பயன்படுத்தி நல்ல காமெடிப் படத்துக்கு உத்திரவாதம் அளித்துள்ளார்.

ஹீரோ ஜெய் காதல் தோல்வியால் துவண்டு தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்குப் போகிறார். மனநல நிபுணரான தம்பி ராமைய்யா, எந்தச் சிரமத்தையும் செய்யக் காத்திருக்கும் நல்ல நண்பர்களிடம் பேசினால் தற்கொலை எண்ணம் விலகிப் போகுமெனச் சொல்கிறார். நண்பர்களிடம் சொன்னால் கிண்டல் செய்வார்கள் என மறுத்து விடுகிறார் ஜெய். நண்பர்களிடம் பேசும்படி சமாதானம் செய்து தூங்குவதற்கு மாத்திரை கொடுத்து அனுப்புகிறார் தம்பி ராமைய்யா. அதையும் மீறி தற்கொலை புரிந்து கொள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து. சரக்கில் விஷம் கலந்து குடிக்கப் பார்க்கிறார்.

அந்த நேரத்தில், தம்பி ராமையா சொன்னது ஞாபகத்துக்கு வர நண்பர்களான கருணாகரன், காளி வெங்கட், நவீன் ஆகியோருக்கு ஃபோன் செய்கிறார் ஜெய். கருணாகரன் நிச்சயதார்த்தத்திலும், காளி வெங்கட் ஒயின் ஷாப்பிலும், நவீன் கஸ்டமர் கேர் பணியிலும் அப்பொழுது உள்ளனர். காதல் தோல்விக்குப் போய் யாராவது தற்கொலை செய்து கொள்வார்களா என ஜெய்யின் மன வருத்தத்தைச் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்.

பின் நிலவரத்தின் தீவிரம் உணர்ந்து, ஜெய்யின் தந்தையிடமும் ப்ரணீதாவின் நண்பர்களிடமும் விசாரிக்கிறார்கள் நண்பர்கள். ஜெய்யைத் தீவிரமாகத் தேடத் தொடங்குகிறார்கள். ஒயின் ஷாப்களில் போய்த் தேடும் காளி வெங்கட் கொலை வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்கிறார். ஜெய் தங்கியிருக்கும் லாட்ஜில் போய்த் தேடும் கருணாகரன் பிராத்தல் வழக்கில் சிக்கி அவரது திருமணம் தடைப்படுகிறது. பூங்காக்களில் தேடும் நவீனை ப்ரணீதாவின் புது காதலன் ஆள் வைத்து வாகனத்தில் இடிக்க, பலத்த காயங்களுடன் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்படுகிறார்.

சந்தானத்தின் பேச்சைக் கேட்டு தற்கொலை எண்ணத்தை கைவிட்டுவிடுகிறார் ஜெய். தன்னைத் தேடிச் சென்றதால் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அவரது நண்பர்களை ஜெய் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதை நகைச்சுவையுடன் சொல்லியுள்ளார் அறிமுக இயக்குநர் மகேந்திரன் ராஜமணி.

பெரிய நீளமான கண்களுடைய ப்ரணீதா, முத்துசுவாமியின் ஒளிப்பதிவில் அழகாய்த் தெரிகிறார். ஆனால், ‘கண்ணாடிப் பூவுக்கு வண்ணமில்ல’ என்ற பாடலில் மட்டுமே அவருக்கு நடிக்க வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. ‘மண்ணெண்ண விளக்கெண்ண வேப்பெண்ண’ என்னும் காமெடி பஜார் மாறனின் பாடல் வரிகளில், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி துள்ளலான பாடல் ஒன்றைக் கொடுத்து ரசிக்க வைத்துள்ளார். அதைக் காட்சிப்படுத்திய விதமும் அருமையாக உள்ளது. இப்பாடல், அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் என்பது உறுதி.

ஜெய்யின் தந்தையாக இயக்குநர் ஆர்.என்.ஆர்.மனோகர் நடித்துள்ளார். தன்னைத் தன் மகன் அசிங்கமாகத் திட்டிவிட்டான் என அவர் வருத்தப்படுத்தும் இடத்தில், காளி வெங்கட் போலவே திரையரங்கில் பார்வையாளர்களும் சிரிக்கின்றனர். போராடிக்காமல் முழுப் படத்தையுமே நகைச்சுவையாகக் கொண்டு சென்றுள்ளது தான் இயக்குநரின் வெற்றி. தற்கொலை ச்எய்யப் போகும் இடத்தில், சேட்டை படத்தின் பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்கும் ஜெய், “கடையில் பிரேம்ஜி பாட்டுக்கெல்லாம் ஆட வச்சுட்டாளே!” என அங்கலாய்க்கும் இடம் அட்டகாசம்.

‘சரி தான் போய்ச் செத்துடு’ எனக் கோபத்தில் சொல்லிவிட்டு, கருணாகரன் படும்பாடு நல்ல நகைச்சுவை. அதைச் சொல்லிச் சொல்லியே, தன் ஷேர் ஆட்டோக்கு காளி வெங்கட் டீசல் போட வைப்பதும் செம. சிறையில் இருக்கும் பொழுது, “இவ்வளவு சத்தத்தில் உன் மகன் நல்லா தூங்குறான். ஆனா வீட்டில் சின்ன பேச்சு சத்தம் கேட்டாலே எழுந்திச்சிடுறானே!” என காளி வெங்கட் வருத்தப்படும்போது மொத்த திரையரங்கமும் குலுங்கிச் சிரிக்கிறது.

எனக்கு வாய்த்த அடிமைகள் – வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறார்கள்.

Our Score