திரைப்பட நடிகர்களுக்கு பட்டங்கள் கொடுக்கவெல்லாம் யாரும் சோம்பேறித்தனப்படுவதில்லை.. வாங்கிக் கொள்ள அவர்கள் தயாராக இருந்தாலே போதும்..!
‘மக்கள் தளபதி’ என்ற பட்டத்துடன் தனது புதிய படத்தை திரைக்கு வரும் முயற்சியில் இருக்கிறார் நடிகரும், தயாரிப்பாளருமான ராதாகிருஷ்ணன் என்கிற ஆர்.கே.
எற்கெனவே ‘எல்லாம் அவன் செயல்’, ‘அழகர் மலை’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் ஆர்.கே. நடித்திருக்கும் மூன்றாவது படம்தான் ‘என் வழி தனி வழி’.
இதில் பூனம் கவுர், மீனாட்சி தீட்சீத் இருவரும் ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர். மேலும், ராதாரவி, விசு, ஆஷிஷ் வித்யார்த்தி, ‘தலைவாசல்’ விஜய், இளவரசு, சம்பத், சீதா, ரோஜா மற்றும் தம்பி ராமையா, சிங்கமுத்து ஆகியோர் நடித்துள்ளனர். ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்ய.. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். சூப்பர் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார். மலையாள இயக்குநர் ஷாஜி என்.கைலாஷ் இயக்கியிருக்கிறார். சென்னை, கேரளா, ஜோர்டான் ஆகிய இடங்களில் இந்தப் படம் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.
இதற்கு முந்தைய ஆர்.கே.வின் படங்களான ‘எல்லாம் அவன் செயல்’ படத்திலும் ‘அழகர் மலை’ படத்திலும் நடிகர் வடிவேலுவின் காமெடி ஒரு டிரெண்ட் செட்டராகவே அமைந்திருந்தது. இன்றைக்கும் இணையத்தில், எழுத்துலகில் ‘வண்டு முருகன்’ என்று பட்டப் பெயர் சூட்டி அழைக்கிறார்கள் என்றால் அது ‘எல்லாம் அவன் செயல்’ படத்தில் வடிவேலு ஏற்றிருந்த வேடத்தையே சாரும்..!
ஆர்.கே. சென்னையில் துவங்கிய ‘வாங்க சாப்பிடலாம்’ என்ற செயின் ஹோட்டல்களைகூட வடிவேலுதான் துவக்கி வைத்தார். அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தும் இந்தப் படத்தில் வடிவேலு மிஸ்ஸிங். இவருக்கு பதிலாக தம்பி ராமையாவும், சிங்கமுத்துவும் ஜோடி போட்டிருக்கிறார்கள்.
“ஏன் வடிவேலுவை அழைக்கவில்லையா?” என்று கேட்டதற்கு, “அழைக்காமல் இருப்பேனா..? இது மாதிரி படம் பண்ணப் போறேன். நீங்களும் நடிக்கணும்னு வடிவேலு அண்ணன்கிட்ட கேட்டேன். ஆனா அவர்தான் ‘தம்பீ இப்போ நான் ஹீரோவா ஆக்ட் பண்ணப் போறேன். இந்த நேரத்துல உனக்காக இந்தப் படத்துல காமெடி ரோல் செஞ்சா நல்லாயிருக்காது’ன்னு சொல்லிட்டாரு. நானும் வாழ்த்துச் சொல்லிட்டு வந்துட்டேன். ஆனாலும் என் முந்தைய படங்களின் காமெடியை போலவே இந்தப் படத்தின் காமெடி காட்சிகளும் செம ரகளையாத்தான் இருக்கும். தம்பி ராமையாவும், சிங்கமுத்து அண்ணனும் அந்த அளவுக்கு யோசிச்சு யோசிச்சு திரைக்கதை அமைச்சு செஞ்சிருக்காங்க..” என்றார் ஆர்.கே.
ஜோர்டான் சென்று சில காட்சிகளை படமாக்கியதையும் சொன்னார் ஆர்.கே. “நாங்க போன இடம் ஜோர்டானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லை பகுதி. நாங்க ஹெலி கேமிராவை வைச்சு ஷூட் செஞ்சப்போ எப்படியோ தகவல் கிடைச்சு ஜோர்டான் ராணுவம், இஸ்ரேலிய ராணுவம் இரண்டு பேருமே தேடி வந்துட்டாங்க.. எல்லாத்தையும் சோதனை செஞ்சாங்க. நாங்க எடுத்த ஷூட்டிங் காட்சிகளை ஓட விட்டு காட்டினோம். அப்புறம்தான் அவங்க நம்புனாங்க.. இதுனால அரை நாள் ஷூட்டிங் நின்னு போனது. ஆனாலும் ரொம்ப மரியாதையா நடத்தினாங்க.. அது மறக்க முடியாதது…” என்றார்.
கூடவே, “எல்லாம் அவன் செயல்’ படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து அதே போல மீண்டும் ஒரு வெற்றியை பெற வேண்டிய இயக்குநர் ஷாஜி கைலாஷுடன் பணியாற்றுகிறேன்..” என்கிறார் ஆர்.கே.
இந்தப் படத்தின் தலைப்பு ரஜினியின் பஞ்ச் டயலாக்காச்சே..? என்ற கேள்விக்கு.. “ரஜினிக்கும் முன்னாடியே ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர். சொன்னது இது.. அதை ரஜினி திருப்பிச் சொன்னார்.. இந்த வசனம் எனக்கு பிடிச்சுப் போச்சு.. என்னோட கதைக்கும் பொருத்தாத்தான் இருந்துச்சு.. கேட்சிங்காவும் இருக்குல்ல. அதுனால இதையே டைட்டிலா வைச்சிட்டேன்..” என்றார் ஆர்.கே.
சில ஆண்டுகளுக்கு முன்பாக சுய முன்னேற்றம் குறித்த தன்னம்பிக்கை அளிக்கும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றுவார் நடிகர் ஆர்.கே. Vcan என்ற மல்டி நேஷனல் நிறுவனத்தைக்கூட ஆர்.கே. நடத்தி வந்திருக்கிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் இவர் நடத்தப்பட்ட கூட்டங்களில் இவர் பேசிய பேச்சுக்கள், வீடியோ காட்சிகளாக பல நாடுகளில் ஒளிபரப்பப்பட்டதாம்.
இது பற்றி கூறிய நடிகர் ஆர்.கே., “இதுவரை சுமார் இரண்டு கோடி பேர் என்னுடைய பேச்சை கேட்டு பாராட்டியிருக்காங்க. மூணு லட்சம் பேர் என்னால் பயனடைஞ்சு இருக்காங்க. உலக நாயகன் கமல் சாரே என் பேச்சை வியந்து பாராட்டி இருக்கிறார்…” என்றவர் மீடியாவுக்கும் இரண்டு பேச்சுக்களை அப்படியே தட்டிவிட்டார். இனிமையாகத்தான் இருந்தது..!
தொடரட்டும் இந்தப் பணி..!