full screen background image

என் ஆளோட செருப்பக் காணோம் – சினிமா விமர்சனம்

என் ஆளோட செருப்பக் காணோம் – சினிமா விமர்சனம்

DRUMSTICKS PRODUCTIONS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இதில் ‘கோலிசோடா’ பாண்டி ஹீரோவாகவும், ஆனந்தி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

மேலும், யோகிபாபு, ரேகா, பால சரவணன், லிவிங்ஸ்டன், சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சுக செல்வன், படத் தொகுப்பு – மணிகண்டன் சிவக்குமார், இசை – இஷான் தேவ், பின்னணி இசை – தீபன் சக்கரவர்த்தி, பாடல்கள் – விஜயாசாகர், கலை இயக்கம் – என்.கே.பாலமுருகன், சண்டை பயிற்சி – ஸ்டண்ட் கன், நடனம் – பாலகுமார், ரேவதி, தினா, ‘மெட்டி ஒலி’ சாந்தி, மக்கள் தொடர்பு – நிகில், நிர்வாகத் தயாரிப்பு – அருண் கணேசன், நாமக்கல் எம்.அரவிந்த், எழுத்து, இயக்கம் – ஜெகன்நாத்.

விஜய் நடித்த ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஜெகன்நாத், தனது நான்காவதாக படமாக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

ஒரு தலையாய் காதலிக்கும் பெண்ணிற்காக, அவள் அணிந்திருந்த செருப்புக்களைத் தேடியலையும் ஒரு காதலனின் கதைதான் இந்த திரைப்படம்.

சந்தியா என்னும் ஆனந்தி கல்லூரி மாணவி. இவருடைய தந்தை ஜெயப்பிரகாஷ் தற்போது சிரியாவில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

ஆனந்தியை பார்த்ததில் இருந்து அவரை விரட்டி விரட்டி ஒன் சைடாகவே காதலிக்கத் துவங்குகிறார் யோகிபாபு. இவருடைய அல்லக்கைதான் ஹீரோவான தமிழ். இவருடைய அம்மாவான சுஜாதா அந்த ஊரில் குறி சொல்பவர்.  

யோகிபாபு ஆனந்தியை சைட் அடித்தாலும் தானும் ஆனந்தி மீது ஒரு பக்க காதலை வளர்த்துக் கொள்கிறார் ஹீரோ தமிழ்.

திடீரென்று சிரியாவில் ஆனந்தியின் தந்தையை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுவிடுகிறார்கள். ஊரே பரபரப்பாகிறது. தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகி ஆனந்தி மற்றும் அவரது தாய் ரேகாவின் கண்ணீர் சிந்தும் முகங்கள் பளிச்சிடுகின்றன.

கடத்தப்பட்ட அப்பா கிடைப்பாரா மாட்டாரா என்பதை கேட்க குறி சொல்லும் சுஜாதாவின் வீட்டுக்கு வருகிறார்கள் அம்மாவும், மகளும்.

வெற்றிலையில் மை போட்டு பார்த்து பார்க்கும் சுஜாதா “இது தப்பான சமயம். இதற்கான அறிகுறி உனக்கு வந்திருக்குமே?” என்கிறார் ஆனந்தியிடம். ஆனந்தி புரியாமல் விழிக்க.. “அப்பா கடத்தப்பட்ட அதே நேரத்தில் இங்கே உனக்கு ஏதாவது கெட்டது  நடந்ததா…?” என்று கேட்கிறார் சுஜாதா.

அன்றைக்கு காலையில் அவசரமாக பேருந்தில் ஏறியபோது தனது செருப்பு மிஸ்ஸானதை சொல்கிறாள் ஆனந்தி. “அந்தச் செருப்பை திரும்ப கண்டுபிடி. அதே சமயம் உன் அப்பாவும் பத்திரமா திரும்பி வருவார்…” என்கிறார் சுஜாதா.

இதனை ஒட்டுக் கேட்கும் தமிழ், தனது காதலியின் கண்ணீரைத் துடைக்க வேண்டி அந்தச் செருப்பைத் தேடி அலைகிறார். அலைகிறார்.. அலைந்து கொண்டேயிருக்கிறார். செருப்புக்களைக் கண்டுபிடித்தாரா? இல்லையா..? அவரது காதல் ஜெயித்ததா இல்லையா..? கடத்தப்பட்ட ஆனந்தியின் அப்பா திரும்பி வந்தாரா என்பதை தியேட்டருக்கு சென்று பார்த்துக் கொள்ளுங்களேன்..!

‘பசங்க’ படத்தில்  ‘பக்கோடா பாண்டி’ கேரக்டரிலும் ‘கோலி சோடா’ படத்தில் ‘சித்தப்பா’ என்ற கேரக்டரிலும் நடித்திருக்கும் பாண்டி, இதில் ‘தமிழ்’ என்கிற பெயருடன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

தன்னால் முடிந்த அளவுக்கு, அந்த வயதுக்கேற்ற குணத்துடன் தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார் தமிழ். இதில் வித்தியாசமெல்லாம் இல்லை. அவருக்கு எது வருமோ அதையே செய்திருக்கிறார்.

லிவிங்ஸ்டனை டார்ச்சர் செய்யும் காட்சிகளிலும் அம்மாவிடம் தப்பிக்கும் காட்சிகளிலும், கிளைமாக்ஸில் யோகிபாபுவிடம் தனது காதலைச் சொல்லி இதற்காக தான் எத்தனை கஷ்டப்பட்டேன் என்பதைச் சொல்லும் காட்சியிலும் யதார்த்தமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். நிச்சயம் பாராட்ட வேண்டும்.

ஆனந்தியை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ அத்தனை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். ரொம்பவும் கஷ்டப்படாத கேரக்டர். காதல் காட்சிகள் இல்லையென்றாலும் யோகிபாபு அண்ட் கோ-வை ரவுண்டு கட்டும் காட்சிகள் ரசனையானவை.

கிளைமாக்ஸ் காட்சியில் தமிழ் யோகிபாபுவிடம் சொல்லும் அத்தனையை கதையையும் கேட்டுவிட்டு “உன் பெயர் என்ன..?” என்று ஒற்றைக் கேள்வியை மட்டும் கேட்டு காதலுக்குத் தயாராகும் இந்தக் காட்சியை கவிதை வடிவில் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இதற்கு ஒரு கவிதையாகவே சாட்சியம் தந்திருக்கிறார் ஹீரோயின் ஆனந்தி.

யோகிபாபுவின் காமெடி தர்பார் படத்துக்கு படம் அநியாயத்திற்கு எகிறிக் கொண்டே போகிறது. இந்தப் படத்திலும் அவர் அடிக்கும் டைமிங்கான சில வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. கிளைமாக்ஸ் காட்சியில் இவர் அடிக்கும் டிவிஸ்ட் எதிர்பாராதது. ஆனால் சுவையானது. “லவ் பெயிலியர் ஆனவன் எங்க போவான்னு எனக்குத் தெரியாது. ஆனால் நான் இப்போ வீட்டுக்குப் போறேன்..” என்று கெத்தாகச் சொல்லிவிட்டுப் போகுமிடத்தில் யோகியை நிறையவே பிடித்துப் போகிறது.

திரைக்கதையின் சுவாரஸ்யத்திற்காக இடை, இடையே சில கிளைக் கதைகளையும் சேர்த்திருக்கிறார் இயக்குநர். இந்தக் கிளைக் கதைகள் ஒவ்வொன்றுக்கும் பிரபலமான நடிகர்கள் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் இயக்குநர், அதேபோல் திரைக்கதையையும் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம்.

அம்மாவாக அழுது புலம்பும் ரேகாவும் தனது வண்டி காணாமல் போனதை சொல்லாமலேயே ஒப்பாரி வைத்து அரற்றும் சிங்கம் புலியும், ஒரேயொரு காட்சியென்றாலும் கவனிக்கத்தக்க நடிப்பைக் கொடுத்திருக்கும் பால சரவணனும் குறிப்பிடத்தக்கவர்கள். தனி மனுஷியாக சுஜாதா வலம் வந்திருக்கிறார். உண்மையாகவே அந்தக் குறி சொல்வது உண்மையா அல்லது உல்டாவா என்பதை சொல்லாமலேயே இவரது கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

இவர்களும் இல்லாமல் அரசியல்வாதியாக வரும் கே.எஸ்.ரவிக்குமாரின் கேரக்டர் ரசிக்கத்தக்கது. அதற்கேற்றாற்போலவே அவரும் நடித்திருக்கிறார். அல்லது நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். கதையின் முடிச்சை அவர் அவிழ்க்கும் இடத்தைப் பார்க்கும்போது, அவருடைய கேரக்டர் கதையில் தேவையில்லாமல் வைக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.

லிவிங்ஸ்டன் இன்னொரு பக்கம் ஒரு குணச்சித்திர நடிப்பைக் காட்டியிருக்கிறார். காதலுக்காக செருப்பைத் தேடியலையும் தமிழின் மீது முதலில் கோபப்பட்டு பின்பு பணத்தைக் காட்டியவுடன் ஆர்வப்பட்டு மாட்டிக் கொண்டு அவர் படும் அவஸ்தையை கொஞ்ச நேரம் ரசிக்க முடிகிறது.

ஒளிப்பதிவுதான் படத்தின் மிகப் பெரிய பலம். முழுக்க, முழுக்க கடலூர் பகுதிகளிலேயே படமாக்கியிருக்கிறார்கள். காட்சிக்குக் காட்சி மலையாளப் படங்களை போல மழை பெய்வதால், காட்சிகளையெல்லாம் கலர்புல்லாக பிரேம்களில் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

அனைத்து பாடல்களுமே மிக எளிமையான தமிழ் வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம்தான். பாராட்டுக்கள் இசையமைப்பாளருக்கு..!

கல்லூரி காதல் என்பதாலேயே எளிதில் இதனை ஏற்றுக் கொள்ள முடியாத கதை என்கிற ஒரே காரணத்தால்தான், இந்தப் படத்தில் ஒன்றிப் போய் பார்க்க முடியவில்லை. ஹீரோயினுக்காக ஒரு ஹீரோ செருப்பைத் தேடியலையும் அளவுக்கு தெருத்தெருவாக அலைபவன் என்பதைக் காட்டும்போது அதற்கான வலுவான காரணத்தை வைத்திருக்க வேண்டும்.

செருப்பு கிடைத்தால் ஹீரோயினின் அப்பா கிடைத்துவிடுவார். ஹீரோயினின் அப்பா கிடைத்துவிட்டால் தனது காதலும் ஜெயித்துவிடும் என்று ஹீரோவும் நினைக்கும்படியான திரைக்கதையாக இருந்திருந்தால், படத்தை இன்னமும் ரசித்துப் பார்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது..!

Our Score