full screen background image

காதலியின் செருப்பைத் தேடியலையும் கதை ‘என் ஆளோட செருப்பக் காணோம்’

காதலியின் செருப்பைத் தேடியலையும் கதை ‘என் ஆளோட செருப்பக் காணோம்’

ஜி.வி.பிரகாஷ் – ஆனந்தி நடிப்பில் வெளியாகி, வணிக ரீதியில் வெற்றி பெற்ற ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் இணை தயாரிப்பாளரும், பல வெற்றிப் படங்களை உலகெங்கும் வினியோகம் செய்தவருமான வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், தனது சகோதரர் விஜயனுடன் இணைந்து, ‘ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தயாரித்துள்ள படம் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’.

‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ போன்ற படங்களை இயக்கிய நடிகரும், இயக்குநருமான ஜெகன்நாத், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

Movie Stills (11)

‘பசங்க’ படத்தில் ‘பக்கோடா பாண்டி’யாக நடித்த பாண்டி, இப்படத்தில் ‘தமிழ்’ என்ற பெயர் மாற்றத்துடன் நாயகனாக அறிமுகம் ஆகியிருக்கிறார். கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பால சரவணன், லிவிங்ஸ்டன், ரேகா, சிங்கம் புலி,  ஜெயப்பிரகாஷ், தளபதி தினேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சுகசெல்வன், பாடலிசை – இஷான் தேவ், பின்னணி இசை – தீபன் சக்ரவர்த்தி, படத்தொகுப்பு – மணிகண்டன் சிவகுமார், கலை – என்.கே.பாலமுருகன், பாடல்கள் – விஜயசாகர், நடனம் – பாலகுமார் ரேவதி, ‘மெட்டி ஒலி’ சாந்தி, தினா, சண்டை பயிற்சி – ஸ்டண்ட் ஜி.என்., மக்கள் தொடர்பு – நிகில், முதன்மை செயல் தயாரிப்பு – அருண் கணேசன், எம்.அரவிந்த், தயாரிப்பு வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், எழுத்து, இயக்கம் – ஜெகன்நாத்.

Movie Stills (3)

இப்படம் குறித்து இயக்குநர் ஜெகன்நாத் பேசுகையில், “நான் கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களை இயக்கிவிட்டு வாய்ப்புக்காக காத்திருந்தேன். அது கிடைக்காமல் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அதையும்விடக் கூடாதே என்பதற்காக நடிகனாகவும் மாறினேன்.

ஆனாலும், எனது நோக்கம் இயக்குநராக இருப்பதில்தான்  இருந்தது. இதனால்தான் சமீப நாட்களில் எந்தப் படத்திலும் நடிக்கப் போகாமல் புதிய படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

இந்தக் கதையை தயாரிப்பாளர் சக்திவேலிடம் நான் சொல்லும்போது கதை சொன்ன இரண்டு மணி நேரமும் அவர் சிரித்துக் கொண்டேதான் இருந்தார். அப்போதே எனக்கு அவர் மீது நம்பிக்கை வந்துவிட்டது. அதேபோல் உடனேயே படத்துக்கு ஓகே சொன்னார். 

நடிகர்களை தேர்வு செய்து கொண்டிருந்தபோது இயக்குநர் பாண்டிராஜ் ஒரு நாள் ஒரு புகைப்படத்தைக் காட்டி, “இந்தப் பையன் பசங்க படத்துல பகோடா பாண்டியா நடிச்சவன். இப்போ ஹீரோவா நடிக்க வாய்ப்பு தேடிக்கிட்டிருக்கான். உன் கதைக்கு பொருத்தமா இருந்தா பாரு…” என்று சொன்னார். நானும் அழைத்து பேசினேன். இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருப்பார் என்று எனக்குத் தோன்றியது. உடனேயே புக் செய்துவி்ட்டேன்.

ஹீரோயினுக்கு கயல் ஆனந்திதான் சரியாக இருப்பார் என்று நினைத்திருந்தேன். அவரைச் சந்தித்து கதையைச் சொன்னேன். கதையைக் கேட்டுவிட்டு ஹீரோ யார் என்றார். பாண்டி பற்றி சொன்னேன். அப்போது அவர் எதுவும் சொல்லவில்லை.

ஆனால் சில நாட்கள் கழித்து உடன் நடிப்பது பாண்டி என்னும் புதுமுகம் என்பதால் தவிர்க்க நினைத்து “கால்ஷீட் பிராப்ளம் வரும். டேட்ஸ் இல்லையே..?” என்றார். ஆனால் எனக்கு அதன் அர்த்தம் புரிந்தது. உடனேயே அவரை நேரில் சந்தித்து பாண்டி நடித்த காட்சிகளை லேப்டாப்பில் ஓடவிட்டு காட்டினேன். உடனேயே எழுந்து நின்று கை தட்டினார் ஆனந்தி. பின்புதான் இதில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இதேபோல் மற்ற ஆர்ட்டிஸ்டுகளிடம்.. அனைவருடனும் நான் சினிமாவில் நடித்திருப்பதால் நல்ல பழக்கம் உண்டு. இதனால் நான் அழைத்தவுடன் கதை என்ன என்றுகூட கேட்காமல் நடிக்க ஒத்துக் கொண்டனர். 

சென்னையில் பெய்த மழைக் காலத்தில் ஒரு நாள் வெள்ளத்தில் ஒரு பெண்ணின் புது செருப்பு மட்டும் மிதந்து வந்தது. அப்போது அது பற்றி நான் யோசித்தேன். அது வழியில் பல பயணங்களை சந்தித்திருக்கும். ஆனால் இப்போது தனியாக போகிறதே என்று சிந்தித்தேன். 

இதேபோல் நான் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்வதற்காக போயிருந்தேன். அந்த நேரம் பார்த்து என்னுடைய ஷூ பிய்ந்துவிட்டது. அதனால் தயாரிப்பாளரிடம் நாளை சந்திக்கலாமா என்று கேட்டேன். அதனால் அந்தச் சந்திப்பும் நடக்காமல் போனது. இப்படி ஒரு சாதாரண செருப்பால் ஒரு வேலை நடக்காமல் போகிறதென்றால் அந்தச் செருப்புக்கும் நம் வாழ்க்கையில் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது என்றுதானே அர்த்தம். அந்த சிந்தனையில் உதித்ததுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

நாயகியையும், அவள் தொலைத்த ஒரு ஜோடி செருப்புகளையும் சுற்றி நடக்கும் கதைதான், இந்த ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ திரைப்படம்.

ஒரு ஐப்பசி மாத அடை மழை மாதத்தில் தொலைந்த அந்த செருப்புகளைத் தேடி, தன் பயணத்தை ஆரம்பிக்கிறான் நாயகனான கித்தான். 30 நாட்கள் நடக்கும் இந்த தேடல் பயணத்தில் அவன் சந்திக்கும் விதவிதமான மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் அந்த செருப்புகளால் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் தொகுப்பே இப்படம்.

இறுதியில், செருப்புகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாயகன் வெற்றி பெற்றானா..? தொலைந்த செருப்புகள் நாயகியை சென்றடைந்ததா..? அந்த செருப்புகள் நாயகனையும் நாயகியையும் ஒன்று சேர்த்ததா..? என்பதை நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறோம்.

Movie Stills (30)

கடற்கரை நகரங்களான கடலூர் மற்றும் புதுச்சேரியில் இக்கதை நிகழ்வதாக கதைக் களம் அமைத்திருக்கிறோம். மழையும், செருப்பும்தான் இந்தப் படத்தில் முக்கியமான விஷயங்கள். இதனால் மழைக் காலத்திலேயே இதன் முழு படப்பிடிப்பையும் நடத்தியுள்ளோம். பெரும்பாலான காட்சிகளில் மழை இருக்கும். மழையை ஒரு கேரக்டராகவே இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம்.

இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளில் செண்டிமென்ட்டும், செண்டிமென்ட் காட்சிகளில் நகைச்சுவையும் கலந்திருக்கும்.

சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு கடலூர் மற்றும் புதுச்சேரியில் 50 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. தற்போது இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. திரைப்பட ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு மாறுதலான படமாக இருக்கும்…” என்றார் இயக்குநர் ஜெகன்நாத்.

“படத்தின் தலைப்பு இத்தனை நீளமாகவும் ‘செருப்பு’ என்கிற வார்த்தையெல்லாம் வருகிறதே…?” என்று கேட்டதற்கு, “இந்தப் படத்தின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. அதனால் கதைக்குப் பொருத்தமாக இருக்கட்டுமே என்றுதான் வைத்தோம். நிச்சயமாக இதில் அசிங்கமாக பேசக் கூடிய விஷயமாக இருக்காது.. தியேட்டரில் மக்கள் மிக எளிதாக எடுத்துக் கொண்டு நகைச்சுவையை ரசிப்பார்கள்..” என்றார் தன்னம்பிக்கையுடன்..!

Our Score