நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘லூசிபர்’ படத்தின் அடுத்த பாகமாக இந்தப் படம் வெளியாகி உள்ளது.
‘லூசிபர்’ முதல் பாகத்தின் இறுதி காட்சியில் தன்னை வளர்த்தெடுத்த குருவான முன்னாள் முதலமைச்சர் பி.கே.ராமதாஸின் மகனான டோவினோ தாமஸை கேரளாவின் முதலமைச்சராக அமர்த்தி விட்டு தான் பொறுப்பில் இருந்த நெடும்பள்ளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நம்ம செய்துவிட்டு காணாமல் போகிறார் ஸ்டீபன் நெடும்பள்ளி என்னும் மோகன்லால்.
இந்த இரண்டாம் பாகத்தில் அதனுடைய தொடர்ச்சியாக கதைகள் நடக்கின்றன. டோவீனா தாமஸின் ஆட்சி அவருடைய கூட்டணி கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிக் கூட்டணியை உடைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.
அதோடு பி.கே.ராமதாஸின் மகளான மஞ்சு வாரியாருக்கும், அவருடைய தம்பியான டோவினா தோமஸூக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு உறவு பிரியும் நிலையில் உள்ளது.
இந்த நேரத்தில் கட்சி தன் கையை விட்டுப் போவதை உணரும் டோவினோ தாமஸ் தன்னுடைய அப்பா கட்டிக் காத்த கட்சியை கை கழுவி விட்டு தானே புதிதாக ஒரு கட்சியை ஆரம்பித்து அந்த கட்சியின் மூலமாக அடுத்து வரக் கூடிய தேர்தலை சந்திக்கப் போவதாக சொல்கிறார்.
இதற்காக மத்தியில் ஆட்சி செய்யும் மதவாத கட்சி தலைவரான பஜ்ரங்தள் பல்தேவ் என்னும் அபிமன்யு சிங்குடன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்.
இந்த அபிமன்யு சிங் நெடும்பள்ளியில் புதிய அணை கட்டும் காண்ட்ராக்ட்டை கைப்பற்றும் முழு முயற்சியில் இருக்கிறார். அதோடு அபிமன்யுவின் கட்சி மதவாத கட்சியாகவும் இருப்பதால் அவருடன் கூட்டணி அமைத்தால் அது தன்னுடைய தந்தையின் கொள்கைக்கு எதிரானது என்பதை உணரும் மஞ்சுவாரியர் தானும் அரசியல் களத்தில் குதிக்கிறார்.
இந்த நேரத்தில் கேரளாவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்கள் மற்றும் பி.கே.ராமதாஸின் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களுக்கு உதவிக் கரம் வேண்டி ஸ்டீபன் என்ற மோகன்லாலை வலை வீசி தேடுகிறார்கள். கடைசியாக ஸ்டீபனிடம் இந்தத் தகவல் சொல்லப்பட அவர் வழக்கம்போல திடீரென்று கேரளாவுக்கு பறந்து வந்து மஞ்சு வாரியாரை கொலைச் செயலில் இருந்து காப்பாற்றுகிறார்.
அடுத்து அவர் என்ன செய்கிறார் டோவினோ தாமஸ் என்ன ஆனார்.. மஞ்சு வாரியார் முதல்வரானாரா.. அபிமன்யூவின் கட்சி என்னவானது.. என்பதுதான் இந்த இரண்டாம் பாகத்தின் சுருக்கமான திரைக்கதை.
மோகன்லால் படம் முழுவதும் ஒரு ஸ்டைலான பான் இந்தியா.. இல்லை… பான் வோர்ல்ட் கதாநாயகனாகவே வலம் வந்திருக்கிறார். அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே லாலேட்டனின் கேரக்டர் ஸ்கெட்ச்சை இப்படி அமைத்திருக்கிறார்கள் போலும்..!
அவரும் ஆக்ரோஷமான வசனங்களை எல்லாம் பேசாமல் தன்னுடைய வசீகரமான முகத்தாலும், தன்னுடைய ஸ்டைலான வசன உச்சரிப்பிலும் தன்னுடைய தோற்றத்தாலும் ரசிகர்களை கவர்கிறார்.
மோகன்லாலை விதம்விதமான கேமரா கோணங்களில் அழகாகக் காட்டி ஒரு உணர்ச்சிகரமான காட்சியில்கூட ஸ்டைலாக நடந்து போவதாகக் காட்டியிருப்பது படத்தின் மிகப் பெரிய பலவீனம்.
லாலேட்டனின் வயதை முன் வைத்து சண்டை காட்சிகளில் அதிகம் சிரமம் வைக்காமல் சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார் ஸ்டண்ட் சில்வா.
மஞ்சு வாரியார் ஒரு அரசியல் தலைவியாக தனது வேடத்தை ரசித்து நடித்துள்ளார். முதலில் சாதாரணமாக இருப்பவர், ஒரு கட்டத்தில் தன்னுடைய அப்பாவின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தானும் அரசியலில் நுழைவதாக அறிவிக்கின்ற அந்த காட்சியில் இருந்து, அவரை கொலை வெறியோடு தாக்கும்போது தப்பிக்கின்ற காட்சிகளிலும்.. தன்னுடைய நடிப்பை சிறப்பாக காண்பித்திருக்கிறார்.
மோகன்லாலின் தளபதியாக நடித்திருக்கும் பிருத்விராஜ் தன்னுடைய ரசிகர்களுக்காக பழிக்குப் பழி வாங்கும் அதிரடிப் புயலாக நடித்துள்ளார்.
கேரள முதலமைச்சராக நடித்திருக்கும் டோவினோ தாமஸ் இளம் வயது கதாப்பாத்திரம் என்பதால் அந்த கேரக்டருக்கு ஏற்ற நடிப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் அபிமன்யூ சிங் முதல் காட்சியில் கொடூர வில்லனாக வந்து கடைசிவரையிலும் அகோரமான வில்லத்தனத்தையே காட்டி… சிறப்பான இயக்கத்தினால் அவருடைய வில்லத்தன கதாபாத்திர நடிப்பில் இந்தப் படம்தான் முதலிடம் என்பதுபோல இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
மற்றும் இந்திரஜித். சூரஜ் வெஜ்ஜாரமூடு மற்றும் பலரும் இந்தப் படத்தில் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
படத்தில் முதலில் பாராட்ட வேண்டியது இயக்குநர் பிருத்விராஜைத்தான். அத்தனை கதாபாத்திரங்களையும் மிக சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார். மிகச் சிறப்பாக காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கேமரா கோணங்களை மிக அழகாக வடிவமைத்திருக்கிறார்.
படத்தின் துவக்கக் கட்சியில் இடம் பெறும் அந்த படுகொலை சம்பவங்களை படத்தில் முன் வைத்திருக்கும் தைரியத்திற்கு தனி பாராட்டுக்கள்.
ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவின் கேமரா வொர்க் படத்திற்கு ஒரு மிகப் பெரிய பக்க பலம். உலக நாடுகள் முழுவதையும் அந்தப் படம் சுற்றி வருவதால் அத்தனை நாடுகளிலும் அழகழகான இடங்களை தேர்வு செய்து ஒவ்வொரு கட்சியையும் ரசிகர்கள் கூர்ந்து கவனித்து ரசித்து பார்க்கும்படியாக கேமராவில் அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
படத்தின் பின்னணி இசை அபாரம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு படம் நெடுகிலும் கெத்தான தீம் மியூசிக்கைக் கொடுத்திருக்கிறார். பல காட்சிகளில் பின்னணி இசையே அந்தந்த கதாபாத்திரங்களுக்கு வலிமையைக் கூட்டி இருக்கின்றன.
படத்தொகுப்பாளர் எந்த அளவுக்கு வேலை பார்த்திருப்பார் என்பது படத்தைப் பார்த்தாலே தெரிகிறது. நிச்சயமாக நான்கரை மணி நேர திரைப்படத்தை நம் வசதிக்காக மூன்று மணி நேரத்திற்கு சுருக்கி கொடுத்திருக்கிறார். பல காட்சிகளை நீளமாக எடுத்திருக்கிறார்கள். இதுதான் படத்தின் மிகப் பெரிய பலவீனம்.
படத்தில் பேசப்பட்டிருக்கும் வசனங்கள் அனைத்தும் நமக்கு சுலபமாக புரியக் கூடாது என்பது போல அமைந்திருப்பதும், இலக்கியமாக அமைந்திருப்பதும் படத்திற்கு மிகப் பெரிய பின்னடைவு என்று சொல்லலாம்.
கேரளாவின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரான கே.கருணாகரனின் மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் வேணுகோபாலும், மகள் பத்மஜாவும் ஆளுக்கொரு பக்கமாக அரசியல் செய்து காங்கிரஸின் தோல்விக்குக் காரணமாக அமைந்தார்கள். இப்போது வேணுகோபால் காங்கிரஸிலும், பத்மஜா பா.ஜ.க.விலும் இருக்கிறார்கள். டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் கதாப்பாத்திரங்களை இவர்களை முன் வைத்து வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். இதுவே சுவாரஸ்யமாகத்தான் உள்ளது.
மோகன்லால் வெளிநாடுகளில் செய்யும் சாகசங்கள் இந்தப் படத்தின் மெயின் கதைக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யவில்லை. ச்சும்மாவேணும் வெளிநாடுகளைக் காட்டுவதற்காக இந்தத் திரைக்கதையை இயக்குநர் அமைத்திருக்கிறாரோ… இல்லையோ.. ஆனால் தேவையில்லாத ஆணி என்பதில் மட்டும் சந்தேகமில்லை.
படத்தின் இறுதியில் இந்தப் படத்தின் மூன்றாம் பாகத்திற்கும் லீடு கொடுத்துள்ளார்கள். அந்த மூன்றாம் பாகத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக இருக்கப் போவது மோகன்லாலின் மகனான பிரணவ் மோகன்லால் என்பது சுவாரசியமான ஒரு விஷயம்.
மதவாத அரசியலால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள இப்போதைய மிகப் பெரிய பிரச்சனைகளையும், இனி ஏற்பட இருக்கும் அபாயங்களையும் இந்த திரைப்படம் சுட்டி காட்டுகின்றது.
கேரளாவில் மாறி, மாறி ஆட்சிக்கு வரும் காங்கிரஸூம், இடதுசாரி கூட்டணியும் தங்களுக்கிடையேயான போட்டி, பொறாமையால்தான் மதவாதக் கட்சியை வளர்த்து விடுகின்றன என்பதை மறைமுகமாக வசனத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
அதேபோல் ஒவ்வொரு கட்சியிலும், தொண்டர்களும், தலைவர்களும் எந்த அளவுக்கு தொடர்பில்லாமல் விலகிய நிலையில் உள்ளார்கள் என்பதையும் சிற்சில வசனத்தால் சொல்லியிருக்கிறார்கள்.
தற்போது இந்தியத் திருநாடே பிஜேபி என்கின்ற ஒரு மாயாஜால கட்சிக்கு அடிமையாகி இருக்கும் நிலையில், மோகன்லால் என்ற ஒரு மாபெரும் நடிகர்.. அதே பிஜேபி கட்சியால் பலவித சலுகைகளையும், பாராட்டுகளையும் பெற்றவர்.. அந்த மதவாத, வகுப்புவாத கட்சியின் அடித்தளத்தையே கிண்டல் செய்வது போலவும், உண்மையை உறித்தெடுப்பது போலவும் அமைந்திருக்கும் கதையில் நடித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
2002-ல் குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் முஸ்லீம் மக்களை படுகொலை செய்த சம்பவங்களை அப்படியே இந்தப் படத்தில் பதிவாக்கிருப்பது நிச்சயமாக நாம் எதிர்பாராதது. அதேசமயம் பாராட்டுக்குரியது.
ஒரு பக்கம் பிஜேபியை கண்டிப்பது போலவும் அவர்களின் மதவாத அரசியலை வெளிப்படுத்தும் போலவும் கதை எழுதியிருக்கும் கதாசிரியர் முரளி கோபி, இன்னொரு பக்கம் கேரளா அரசியலில் இப்பொழுதுவரையிலும் பேசுபொருளாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை பற்றியும் எழுதி தன்னுடைய மலையாள விசுவாசத்தை காட்டி இருக்கிறார்.
“முல்லைப் பெரியாறு அணை இன்னும் 2000 ஆண்டுகள் நீடித்து நிலைத்து நிற்கும் அளவுக்கு மிகவும் ஸ்ட்ராங்காக உள்ளது…” என்று அந்த அணையை பார்வையிட்ட அனைத்து வெளி மாநில பொறியியல் வல்லுநர்களும் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் கேரளாவை ஆண்டு கொண்டிருக்கும், ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆகிய இரண்டு கட்சிகளுமே மாறி மாறி முல்லை பெரியாறு அணை இடிந்து விழும் அபாயத்தில் இருக்கிறது என்று இப்போதுவரையிலும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்தப் பேச்சுக்கு வலு சேர்ப்பதுபோல படத்திலும் ‘நெடும்பள்ளி’ என்று மறைமுகமாக பெயர் மாற்றி சொல்லப்படும் அந்த அணையை இடித்துவிட்டு புது அணையை கட்டும் ஒப்பந்தத்தை பெறுவதற்கு அந்த பஜ்ரங்தள் பல்ராஜ் முயல்வதாகவும் காட்சியை அமைத்துள்ளார்கள்.
இன்னொரு இடத்தில் “அந்த அணையின் நான்கு ஷட்டர்களை திறந்துவிட்டாலே போதும் கேரளாவில் மூழ்கிவிடும்” என்று கேரள மக்களை பயமுறுத்துவது போலவும் காட்சிகளை அமைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பி.ஜே.பி. பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ். என்ற இந்த கூட்டணியை ஒரு பக்கம் வெளிப்படையாக காண்பித்து அவர்களை பகிரங்கப்படுத்தி இருக்கிறார்கள் என்று நாம் சந்தோஷப்படும் அதே நேரத்தில்…
தமிழர்கள் ஆகிய நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டிய ஒரு விஷயம் இந்தப் படத்தில் முல்லை பெரியாறு அணையை பற்றி முற்றிலும் தவறாக விரோதமாக சொல்லி இருக்கும் இந்தப் படத்தின் எழுத்தாளர், இயக்குநர், நடிகர்கள் கூட்டணியை நாம் எதிர்த்துக் குரல் கொடுத்தே ஆக வேண்டும்.
RATING : 3.5 / 5









