full screen background image

விவேக்-தேவயானி நடித்த ‘எழுமின்’ படத்திற்கு வரி விலக்கு அளிக்கக் கோரிக்கை..!

விவேக்-தேவயானி நடித்த ‘எழுமின்’ படத்திற்கு வரி விலக்கு அளிக்கக் கோரிக்கை..!

‘வையம் மீடியாஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும் திரைப்படம் ‘எழுமின்’.

தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்பு கலைஞர்கள் மத்தியில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி இருவரும் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Ezhumin Audio Launch (7)

மேலும், நடிகர்கள் விவேக், ஆரி, ஹிப்-ஹாப் ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா, மற்றும் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “இவ்வளவு மாணவர்கள் மத்தியில் இந்த விழா மிகுந்த எழுச்சியோடு நடைபெறுகிறது. நடிகர் விவேக் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். அவர் பல நல்ல கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்வதினால்தான் இப்போதும் வாழும் கலைவாணராக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Minister Kadambur Raju

வருகின்ற காலங்களில் இளைஞர்கள் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமான கருத்தைக் கூறும் இந்தப் படம் வரவேற்பை பெற வேண்டும்.

முன்பெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் எல்லாம் எங்களுக்கு பாடங்கள். அப்படி இந்த ‘எழுமின்’ திரைப்படமும் இன்றைய தலைமுறைக்கான பாடமாக அமைய வேண்டும்.

தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு எப்படியோ அப்படித்தான் சிலம்பாட்டமும். அதுவும் வீரத்தின் அடையாளமாக இருக்கிற ஒரு விளையாட்டுதான். தமிழ் சினிமா நூற்றாண்டு காணும் இந்த காலத்தில், ‘எழுமின்’ திரைப்படம் ஒரு முக்கியமான கருத்தை எடுத்து வருகிறது. இப்படம் கூறுவதைப் போல, தற்காப்பு கலைகளை மாணவர்கள் அவசியமாக கற்க வேண்டும்.

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்றிருந்தேன். அங்கு தமிழ் சினிமாக்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது. காரணம் இதைப் போல அழுத்தமான கதைகளுடன் இன்னமும் இங்கு படங்கள் வந்து கொண்டிருப்பதால்தான். எனவே, நம் தமிழ் இளைஞர்கள் இந்த ‘எழுமின்’ திரைப்படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்…” என்று பேசினார்.

தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி பேசும்போது, “இரண்டு அமைச்சர் பெருமக்கள் இங்கே வந்திருக்கிறார்கள். ஒருவர் விளையாட்டுத் துறை, இன்னொருவர் செய்தித்துறை, இவர்கள் முன்னிலையில் ஒரு பணிவான கோரிக்கையை வைக்கிறேன்.

Director VP Viji

தயவு செய்து இந்த ‘எழுமின்’ திரைப்படத்தை ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவியரும் பெற்றோருடன் பார்ப்பதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். அதற்கு இந்த திரைப்படத்திற்கு ஏதேனும் சிறப்பு அந்தஸ்து வழங்கி, வரிவிலக்கு அளித்திட ஆவண செய்ய வேண்டும்.

இதனைக் கேட்பதற்கான காரணம், இந்த திரைப்படம் நிச்சயமாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். குறைந்தபட்ச விழிப்புணர்வையாவது மாணவர்களுக்கு வழங்கும்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில், இந்தத் திரைப்படத்தில் நடிக்க வந்த பிறகு ‘கிக் பாக்சிங்’ கற்றுக் கொண்ட சிறுவன் இப்போது ஸ்டேட் லெவலில் தங்கப் பதக்கத்தை வெல்லும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார். தற்காப்பு கலைகளின் முக்கியத்துவத்தை நிச்சயமாக ‘எழுமின்’ திரைப்படம் மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும்…” என நெகிழ்ச்சியுடன் பேசினார். 

imaan

இசையமைப்பாளர் டி.இமான் பேசும்போது, “இந்த மேடையில் நிற்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம். காரணம், விவேக் ஸார் நடித்த நிறைய படங்களுக்கு ஆரம்ப காலகட்டங்களில் இசையமைத்திருக்கிறேன். அப்போது ஒன்றை புரிந்துகொண்டேன், விவேக் சார் ஒரு நல்ல மோட்டிவேட்டர். தொடக்கத்தில் நிறைய குழப்பங்களோடு இருந்த என்னை, வழிநடத்தியவர்களில் விவேக் சார் முக்கியமானவர்.

சுந்தர்.சி-யின் இயக்கத்தில் ‘தகதிமிதா’ என்ற படத்திற்கு நான் இசையமைத்திருந்தேன். அந்த படத்தின் பாடல்களை பிடித்திருந்ததால் என்னிடம் தொலைபேசியில் விவேக் சார் பேசினார். ‘காதலை யாரடி முதலில் சொல்வது’ என்ற பாடலை மிகவும் பாராட்டி பேசினார். அப்போது அவர் ஒன்றைச் சொன்னார், ‘இறைவன் உங்களைப் பார்த்து சிரிக்கணும்’ என்று. காலம் போக போகத்தான் தெரிந்தது அன்று அவர் சொன்னதற்கான அர்த்தம்.

“Arise Awake Achieve” என்று ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவர் சொல்ல வேண்டும். இளைஞர்களை மோட்டிவேட் செய்யக் கூடிய இந்த ‘எழுமின்’ மாதிரியான சினிமாக்கள் நிறைய வரவேண்டும். இருட்டு அறைக்குள்ளே நல்லதையும் விதைக்க முடியும் என்பதனை நிரூபிக்க வேண்டும். அந்த வகையில் இந்த ‘எழுமின்’ திரைப்படம் மாணவர்களை நிச்சயமாக மொட்டிவேட் செய்யும்” என்று பேசினார்.

இசையமைப்பாளர் ஹிப்-ஹாப் ஆதி பேசும்போது, “எழுமின்’ முக்கியமான திரைப்படம். இது முழுக்க முழுக்க மாணவர்களுக்கானது. இன்றைய மாணவர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படமாக இது இருக்கும் என நம்புகிறேன்.

காரணம், 2020-ஆம் அண்டில் மாணவர்கள் நிறைந்த தேசமாக இந்தியா இருக்கும். நம் மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால் 2027-இல் நிச்சயம் இந்தியா வல்லரசாகும். இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும்போதே, மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்பது தெரிகிறது…” என்று பேசினார்.

Ezhumin Audio Launch (17)

நடிகர் விவேக் பேசும்போது, “தமிழ்நாட்டில் சமீபமாக பல சூப்பர் ஸ்டார்கள் உருவாகி இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன் நின்று நடத்தி வென்று காட்டிய மாணவர்கள்தான் அந்த உண்மையான சூப்பர் ஸ்டார்கள்.

நான் நான்கு பேருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். முதலாவது, தன்னம்பிக்கையால் உயர்ந்த நடிகர் தனுஷுக்கு. நான் கேட்டவுடன் மறுக்காமல் வந்து ஒரு பாடலைப் பாடி கொடுத்திருக்கிறார். இரண்டாவது இசையமைப்பாளர் அனிருத்திற்கு. மூன்றாவது நன்றி.. இசையமைப்பாளர்கள் ஆதி மற்றும் இமான் இருவருக்கும்.. கூப்பிட்டவுடன் மறுக்காமல் வந்து கலந்து கொண்டமைக்காக..” என்று கடகடவென நன்றி தெரிவித்து சுருக்கமாய் முடித்துக் கொண்டார்.

விழாவில் நடிகர் தனுஷ் பாடிய ‘எழுடா’ பாடலும், இசையமைப்பாளர் அனிருத் பாடிய ‘எழு எழு’ பாடலும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டது.

Our Score