full screen background image

நடிகர் வடிவேலு மீது ‘எலி’ படத்தின் தயாரி்பபாளர் போலீஸில் புகார்..!

நடிகர் வடிவேலு மீது ‘எலி’ படத்தின் தயாரி்பபாளர் போலீஸில் புகார்..!

‘எலி’ படம் தயாரிப்பு பிரச்சினையில் நடிகர் வடிவேலு பல கோடி பணத்தை நஷ்டப்படுத்தி ஏமாற்றிவிட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளரான சதீஷ்குமார் போலீஸில் புகார் கூறியுள்ளார்.

இந்தாண்டு ஜூன் மாதம் ரிலீஸான படம் ‘எலி’. இதில் வடிவேலு ஹீரோவாக நடித்திருந்தார். யுவராஜ் தயாளன் இயக்கியிருந்தார். இதற்கு முந்தைய ‘தெனாலிராமன்’ படம் தோல்வியடைந்திருந்ததால் இந்த ‘எலி’ படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருப்பதாக பட ரிலீஸுக்கு முன்பாக சொன்னார் வடிவேலு. ஆனால் படம் வெளியான வேகத்திலேயே எலிக் காய்ச்சல் கண்டு சுருண்டுவிட்டது.

‘எலி’ படத்தை விமர்சனம் செய்தவர்கள்.. நல்லாயில்லை என்று சொல்பவர்களெல்லாம் ‘நட்டு கழன்ற கேஸ்கள்’ என்றெல்லாம் விமர்சனம் செய்தார் வடிவேலு.

இந்தப் படம் 14 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த பில்டிங் கான்ட்ராக்டரான சதீஷ்குமார் என்கிற மிகப் பெரிய கோடீஸ்வரர்தான் படத்தினை தயாரித்தார். 14 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வடிவேலு தனக்கு சம்பளமாக மட்டுமே 8 கோடியை எடுத்துக் கொண்டாராம். 

ஆனால் படம் 1 கோடிகூட வசூலாகவில்லை.  படு பயங்கர நஷ்டத்திற்குள்ளான தயாரிப்பாளர் இது குறித்து வடிவேலுவுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திப் பார்த்தார். வாங்கிய சம்பளத்தில் பாதியையாவது திருப்பிக் கொடுக்கும்படி கிரீன்பார்க் ஹோட்டலில் பெரிய பஞ்சாயத்தே நடந்ததாம். 

வடிவேலுவோ ரொம்ப கூலாக “இன்னொரு படத்தைத் தயாரிங்க. அதுல நான் சம்பளமில்லாமல் நடிச்சு தரேன்..” என்று சொல்லிவிட்டாராம்..

ரொம்பவும் பொறுமை இழந்துபோன தயாரிப்பாளர் சதீஷ்குமார் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நான்கு பக்கங்கள் கொண்ட புகார் மனுவை அளித்துள்ளார். 

அதில், “நான் ‘சிட்டி சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். என்னிடம் ஒரு நாள் நடிகர் வடிவேலு, ‘நான் ‘எலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தின் தயாரிப்பாளரான ராம்குமார் சரிவர படத்துக்கு செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். எனவே ‘எலி’ படத்தை உங்கள் நிறுவனம் தயாரிக்க வேண்டும்..’ என்று கேட்டுக்கொண்டார்.

நானும், நடிகர் வடிவேலுவும் நீண்டகால நண்பர்கள் என்பதால் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு வேலைகள் பாதிக்கு மேல் நடந்து கொண்டிருந்தபோது, நடிகர் வடிவேலுவும், படத்தின் இயக்குனர் யுவராஜ் ஆகியோர் கூறிய ‘பட்ஜெட்’ தொகை 14 கோடியை தாண்டி விட்டது.

வடிவேலுவின் பேச்சை நம்பி 17 கோடியை முதலீடு செய்த பின்னும், படம் சரிவர ஓடவில்லை. இதனால் எனக்கு ரூ.9.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.

படம் சரியாக ஓடாததால் ஒரு சில தியேட்டர் உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் போலியான கணக்கை காண்பித்து என்னிடம் கந்துவட்டி போட்டு பணத்தை கேட்டு மிரட்டுகின்றனர்.

இந்தநிலையில் மீண்டும் நடிகர் வடிவேலு, முன்னாள் தயாரிப்பாளர் ராம்குமாருக்கு 90 லட்சம் கொடுக்க வேண்டும் என்று அடையாளம் தெரியாத 6 பேர் காசோலையை என்னிடமிருந்து மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் வாங்கியதோடு, தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நான் என்னுடைய சூழ்நிலைகளை நடிகர் வடிவேலுவிடம் கூறியபோது, ‘அவரும், அவருடைய மானேஜர் பன்னீரும், கணக்காளர் முத்தையாவும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, ‘இப்படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை தர முடியாது’ என்று மிரட்டும் தோனியில் பேசுவதோடு பணத்தை கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.

நடிகர் வடிவேலுவினால் ஏற்பட்ட நஷ்டத்தை அவரிடமிருந்து பெற்று தருவதோடும், என்னை மிரட்டுகின்ற வடிவேலு உள்ளிட்டவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கும், உடமைக்கும் உரிய பாதுகாப்பு தர வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும் வடிவேலு சார்பாக முன்னாள் சட்டமன்ற துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி தன்னை போனில் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறாராம். 

ஆக.. ‘வைகைப் புயல்’ வடிவேலுவும் மிக விரைவில் கமிஷனர் ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், ஜாமீன் என்று அலைய வேண்டி வரும் என்றே தெரிகிறது..!

Our Score