ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் ‘உறியடி’ விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் இந்த ‘எலெக்சன்’.
இந்தப் படத்தில் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, பாவெல் நவகீதன், திலீபன், நாச்சியாள் சுகந்தி, ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – தமிழ், வசனம் – அழகிய பெரியவன், ஒளிப்பதிவாளர் – மகேந்திரன் ஜெயராஜு, படத் தொகுப்பாளர் – பிரேம்குமார், கலை இயக்குநர் – ஏழுமலை, சண்டை பயிற்சி இயக்குநர் – ஸ்டன்னர் சாம், நடன இயக்குநர் – கிரிஷ், ஒலிப்பதிவு, ஒலிக் கலவை -அன்னபூர்ணா ஸ்டுடியோஸ், பாடல்கள் – கார்த்திக் நேத்தா, யுகபாரதி, ஞானக்கரவேல், விளம்பர வடிவமைப்பு – கபிலன், ஆடியோ பார்ட்னர் – திவோ, பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்.
இந்தப் படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி.சக்திவேலன் வெளியிட்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் திரைப்படம் இது. களம் தேர்தலாக இருந்தாலும் கருத்துக்களை வலிந்து திணிக்காமல், அரசியலை அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி… உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு ஃபேமிலி டிராமாவாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்கிறது சிலப்பதிகாரம். ஜனநாயகம் என்று சொல்லக் கூடிய.. சமத்துவம் என்று சொல்லக் கூடிய.. ஒரு கருத்தியலை… ஒரு அரசியல் கட்சியிடம்.. ஒரு அமைப்பிடம்.. தராமல்.. மக்களிடம் தந்தால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் ஜனநாயகத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள்? ஒரு எளிய மனிதனிடம் அதிகாரம் சென்று சேரும்போது அதை அவன் எப்படி உள் வாங்கிக் கொள்கிறான்? எப்படி அதை பயன்படுத்துகிறான்? என்பதை இப்படம் சொல்கிறது.
வேலூர் அருகேயிருக்கும் வி.நெல்லூரை மையமைக் கொண்டக் கதை இது. அந்த ஊரில் இருக்கும் ‘நல்லசிவம்’ என்ற ஜார்ஜ் மரியான் ஒரு அரசியல் கட்சியின் உண்மையான தொண்டர். கடந்த 40 வருடங்களாக ஒரே கட்சியிலேயே இருக்கிறார். கட்சிக்காக இரவும், பகலுமாக உழைக்கக் கூடிய உத்தமத் தொண்டன்.
இவருடைய மகன்தான் நாயகன் விஜய்குமார். பி.இ. முடித்துவிட்டு அரசியலில் விருப்பமே இல்லாமல் ஒரு இன்ஜீனியரிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த நல்லசிவத்தின் நண்பரின் மகளான ரிச்சா ஜோஷியைக் காதலித்து வருகிறார்.
இந்த நேரத்தில் அந்தத் தொகுதியில் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. நல்லசிவம் சார்ந்த கட்சி அத்தொகுதியை கூட்டணி கட்சிக்கு தாரை வார்க்கிறது. இதனால் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத ரிச்சா ஜோஷியின் அப்பா தானே சுயேச்சையாக நிற்கிறார். உடன் துணைக்கு நல்லசிவத்தை வரச் சொல்கிறார். ஆனால் நல்லசிவம் தனக்குக் கட்சிதான் முக்கியம் என்று சொல்லி அவருடன் செல்லாமல் கூட்டணிக் கட்சித் தலைவருக்காக உழைத்து அவரையும் ஜெயிக்க வைத்துவிடுகிறார்.
இந்தக் கோபத்தில் தன் மகளை விஜய்குமாருக்குத் திருமணம் செய்து வைக்க மறுத்துவிடுகிறார் ரிச்சா ஜோஷியின் தந்தை. இதனால் காதலர்கள் பிரிகின்றனர்.
இதன் பின்பு விஜய்குமாரும் பள்ளி ஆசிரியையான ப்ரீத்தி அஸ்ரானியைத் திருமணம் செய்து கொள்கிறார். இடையில் அடுத்த்த் தேர்தலும் வருகிறது. இப்போதும் நல்லசிவத்துக்கு சீட் கிடைக்காமல் போகிறது. பரம்பரை பரம்பரையாக அதே தொகுதியில் தலைவராக இருந்து வரும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த குடும்பத்தினர், இந்த முறையும் தேர்தலில் நிற்கிறார்கள்.
இதை எதிர்க்கும் விஜய்குமாரின் மைத்துனரான பாவெல் நவகீதன், விஜய்குமாரை தேர்தலில் நிற்கச் சொல்கிறார். முதலில் மறுக்கும் விஜய்குமார் சாதி ரீதியாக தங்களைத் தாழ்த்தி வைக்கும் அந்த ஆதிக்க சாதிப் புள்ளியின் பேச்சைக் கேட்டவுடன் மனம் மாறி தேர்தலில் நிற்கிறார். அதே நேரம் விஜய்குமாரின் தந்தையோ தன் கட்சித் தலைமை சொன்ன ஆளுக்கே ஓட்டுக் கேட்டு பிரச்சாரம் செய்கிறார்.
கடைசியில் மக்களின் ஓட்டுக்கள் சிதறி வெறும் 5 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய்குமார் தோல்வியடையும் அதே நேரத்தில் அந்த சாதி வெறி பிடித்தவரும் தோல்வியடைகிறார். அதோடு இந்தக் குழப்பத்தில் நெஞ்சு வலி வந்து இறந்தும் போகிறார்.
இதில் கோபம் அடைந்த அந்த சாதித் தலைவர் சார்ந்த ஜாதியினர் ஊரில் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகளால் அடுத்தத் தேர்தலிலும் விஜய்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். இப்போது அவர் ஜெயித்தாரா..? அல்லது தோற்றாரா..? அந்த ஊரில் நடக்கும் சாதிய அரசியலின் முடிவுதான் என்ன..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
இதுவரை தமிழ் திரையில் சொல்லப்படாத நாயகனின் தந்தை கதாபாத்திரத்தை உயிர்ப்புள்ள கதாபாத்திரமாக திரையில் செதுக்கியிருக்கும் இந்தப் படத்தின் இயக்குநரை மனதாரப் பாராட்டுகிறோம்.
இந்தப் படத்தின் முதுகெலும்பு… இந்த கதையின் முதுகெலும்பு என்றால்.. அது நடிகர் ஜார்ஜ் மரியம் ஏற்று நடித்திருக்கும் ‘நல்லசிவம்’ என்ற ஒரு அரசியல் கட்சியின் தொண்டர்தான். தன்னலம் பார்க்காமல் மக்களுக்காகவும், கட்சிக்காகவும் கடுமையாக உழைக்கக் கூடிய ஒரு கேரக்டர்.
நம்மில் பெரும்பாலானவர்கள் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை நம் குடும்பத்திலேயே பார்த்திருப்போம். அப்பா… பெரியப்பா… சித்தப்பா.. மாமா.. என யாரேனும் ஒருவரை பார்த்திருப்போம்.
அமைதிப்படை ‘அமாவாசை’ போன்றவர்கள் இருக்கும் அரசியலில் இப்படி கொள்கைக்காகவும், கட்சிக்காகவும் உழைக்கிற நல்லவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் ஜார்ஜ் மரியான்.
“பொம்பளைங்களுக்குத் தாலி போலத்தான் ஒவ்வொரு கட்சித் தொண்டனுக்கும் அவனுடைய துண்டு” என்பதை முதல் காட்சியிலேயே சொல்லிவிட்டு கடைசிவரையிலும் கட்சிக்காகவே வாழ்ந்து காட்டும் ஒரு அப்பாவி கேரக்டரை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் ஜார்ஜ் மரியான்.
அதிலும் புதிய மாவட்டச் செயலாளரிடம் சீட் கேட்டு இல்லை என்ற பதில் வந்தவுடன் “தான் இறந்துவிட்டால் எங்கேயிருந்தாலும் வந்து கட்சிக் கொடியைப் போர்த்திட்டு மாலை போட்டுட்டு போங்க தலைவரே…” என்று சொல்லிவிட்டுப் போகும்போது நிஜத்தில் எத்தனையோ லட்சணக்கணக்கான தொண்டர்களை ஞாபகப்படுத்தியிருக்கிறார் ஜார்ஜ் மரியான்.
தன் மகனது கோபத்தை உணர்ந்து தான் இழந்ததை மகன் இழக்க வேண்டாம் என்று தடுக்கும் காட்சியிலும், மனைவியிடம் கட்சிக்காக மல்லுக்கட்டும் காட்சியிலும் மனிதர் அசரடிக்கிறார். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் படத்தின் அடிநாதம் என்றே சொல்லலாம்.
இந்த ‘நல்லசிவம்’ போன்ற உண்மைத் தொண்டர்களை ஏமாளியாகவும், பிழைக்கத் தெரியாதவர்களாகவும் இந்த உலகம் பேசும்போது.. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் அந்தக் கோபம் இருக்கும். அப்படி ஒரு கோபமான மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் படத்தின் நாயகனான விஜய்குமார்.
‘உறியடி’ படத்துக்குப் பின்பும் தனக்குத் தோதான கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் விஜய்குமாருக்கு இதுவும் ஒரு வெற்றிப் படம்தான்.
ஒரு ஹீரோவுக்குரிய மேக்கப்பெல்லாம் இல்லாமல், பில்டப்பும் இல்லாமல், சாதாரணமான ஒரு இளைஞனாகவே படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார் விஜய்குமார். காதலியிடம் ரொமான்ஸ் செய்யும்போதும், மனைவியிடம் அதே ரொமான்ஸை காட்டும்போதும் சின்னதான ஹீரோயிஸம்கூட இல்லாமல் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.
அவரின் அந்த டிரேட் மார்க் சிரிப்புதான் அவருக்கான அடையாளமாக உள்ளது. அரசியல் சூழல் கொஞ்சம், கொஞ்சமாக அவரை உள்ளே இழுத்து அலையவிடும்போது அதைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் அவரது இயலாமை கலந்த நடிப்பு நமக்கு பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
சேவியரின் இறுதிச் சடங்குக்குப் போனதற்காக மைத்துனர் நவகீதன், விஜய்குமாரை திட்டும்போது எதிர்க்குரல் கொடுக்கும் அந்த நீண்ட வசனங்கள் கொண்ட காட்சியில் நம் மனதை உருக்கிவிட்டார் விஜய்குமார். ஹாட்ஸ் அப் விஜய்..!
காதலியான ரிச்சா ஜோஷி ஒரு டூயட்டுக்கும், திருப்பு முனையான ஒரு காட்சியிலும் அழகான தன் முகத்தைக் காட்டிவிட்டும், நடித்துவிட்டும் போகிறார். மனைவியான ப்ரீத்தி அஸ்ரானியும் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் சிறப்பாக நடித்துப் பெயர் எடுத்துவிட்டார்.
பாவல் நவகீதனும், திலீபனும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். அதிலும் நவகீதன் நயவஞ்சமாக தன்னை ஏமாற்றிய திலீபனிடம் “என்னடா இப்படி பண்ணிட்ட..?” என்று மென்மையான குரலில் கேட்கும்போது நமக்கே பாவமாக இருக்கிறது. இதேபோல் திலீபன் தனது வில்லத்தனத்தின் உச்சத்தை தனது நடிப்பில் காட்டியிருக்கிறார்.
இன்னொரு பக்கம் விஜய்குமாரின் அம்மாவாக நடித்திருக்கும் நாச்சியாள் சுகந்தி, பிழைக்கத் தெரியாத கணவரிடமும், அரசியலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் மகனுக்கும் இடையில் சிக்கி குடும்பத்தைக் காப்பாற்ற நினைத்து அல்லல்படும் சராசரி மனைவியாக தனது நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
“அரசியல் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராதுடா…” என்று மகனை எச்சரித்துவிட்டு, பின்பு மகனுக்கும், அப்பனுக்குமான பிரச்சினையில் தலையிட்டு மகனையும் கண்டித்து, அப்பாவையும் திட்டித் தீர்த்து.. பாவம்பா இந்த மனைவிமார்கள் என்று நம்முடைய அனைத்து பரிதாபத்தையும் பெற்றுக் கொள்கிறார் நாச்சியாள் சுகந்தி. பாராட்டுக்கள்.
இஸ்லாமியராக நடித்திருக்கும் அருள் தனது பண்பட்ட நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இவர் கூடவே வரும் லீ கார்த்தியும் சரியான தேர்வு. சேவியராக நடித்தவரும், திருநங்கையாக நடித்தவரும்கூட சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவு அபாரம். தேர்தல் களத்தையும், மக்கள் கூட்டத்தையும் குறைவில்லாமல் காண்பித்திருக்கிறார். அதோடு வேலூர் பகுதியின் இயற்கை எழிலையும் காண்பித்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். சண்டை காட்சிகளை விசேஷமாக படம் பிடித்திருக்கும் இவரது திறமைக்கு இன்னொரு முறை பாராட்டுக்கள்.
எப்போதும் விஜய்குமாரின் படங்களில் சண்டை காட்சிகள் ஸ்பெஷலாகவே இருக்கும். இந்தப் படத்திலும் அதே தாபா ஸ்டைல் சண்டைக் காட்சி ரொம்பவும் ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது. மற்றைய சண்டை காட்சிகளையும் யதார்த்தம் என்று சொல்லும் அளவுக்கு வடிவமைத்திருக்கிறார்கள்.
பிரேம்குமாரின் எடிட்டிங்கில் எதுவும் தப்பவில்லை. அரசியல் களேபரங்களை முழுமையாகப் பதிவு செய்துவிட்டு சினிமாத்தனமானவைகளை மட்டும் கத்திரி போட்டு படத்தை அதிகப்பட்சம் யதார்த்தவாத திரைப்படமாக நம் கண்ணுக்குக் காண்பித்திருக்கிறார்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ‘மன்னவன்’, ‘தீரா’ ஆகிய பாடல்கள் டூயட்டுகளாக ரசிக்க வைக்கின்றன. ‘எலெக்சன்’ பாடல் கணீர் குரலில் காதுகளிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறது.
உள்ளாட்சி தேர்தல் பற்றிய படமாக இருந்தாலும் அதில் நுட்பமாக சில விசயங்களை இயக்குநர் இணைத்திருக்கிறார். எழுத்தாளர் அழகிய பெரியவன், நாயகன் விஜயகுமார், இயக்குநர் தமிழ் மூவரும் இணைந்து வசனங்களை எழுதியிருக்கிறார்கள். அனைத்து வசனங்களும் முத்து முத்தானவை. ஆனால், பல காட்சிகளில் வசனங்களை இன்னும்கூட வெளிப்படையாக பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸில் சொல்லப்பட்டிருக்கும் திரைக்கதை மிகவும் முக்கியமானது. இப்போதைய காலக்கட்டத்திற்கு மிகவும் பொருத்தமானது. அரசியல் சூழலுக்கும் பொருத்தமானது. இது போன்ற தீர்வை முன் வைத்திருக்கும் முதல் திரைப்படம் இதுதான் என்றே சொல்ல்லாம்.
தாழ்த்தப்பட்ட மக்களை.. ஒடுக்கப்பட்ட மக்களை.. ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குகளுக்காக மட்டுமே அணுகும் இப்போதைய ஜாதி அரசியலை ஒழிக்க வேண்டுமென்றால், தேர்தல்களில் தாழ்த்தப்பட்ட மக்களை முன் நிறுத்தி, மற்றைய சாதியினர் பின்னால் நிற்பதுதான் சரியான வழி. நேர்மையான செயல் என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஆனால், இந்தக் காட்சி பற்றிய விவரணையை வசனமாகவும் சொல்லியிருக்க வேண்டும். அப்படி சொல்லியிருந்தால் இந்தப் படம் சொல்லியிருக்கும் செய்தி பாமரனையும் சென்றடைந்திருக்கும்.
தேர்தல்கள் என்பதை தங்களது சாதி கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், பணம் சம்பாதிக்கவும், அதிகார பலத்தை நிரூபிக்கவும் கொண்டு வரப்பட்டுள்ளது என்றே பல அரசியல்வாதிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தேர்தல் என்பது ஜனநாயக நாட்டில் மக்களுக்கு சேவையாற்ற கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பு என்பதை இந்தப் படத்தில் இயக்குநர் தமிழ் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.
பஞ்சாயத்து தேர்தல் என்றாலும், பாராளுமன்ற தேர்தல் என்றாலும் அதிகாரத்தின் வெறியும், சாதிய பாகுபாடும், ஆண், பெண் பேதம் பார்க்கும் அரசியலும் இருப்பதை இந்தப் படத்தின் திரைக்கதையில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு அரசியல் கட்சியில் தொண்டராக இருக்கும் ஒருவரின் மகன், அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும்..? இந்த அடிப்படையில் அமைந்திருக்கும் இந்தக் களம் புதிது. இதுவரை தமிழ் திரையில் சொல்லப்படாதது.
ஒரு எளிய மனிதனை எளிய மனிதனாகவே இருக்க இந்த சமூகம் விடுவதில்லை. குடும்பமும் விடுவதில்லை. அவனுக்கு பலவித நெருக்கடிகளைக் கொடுக்கும்போது, அதனைத் தாங்கிக் கொள்ள அவனால் முடிகிறதா என்பதையும் இத்திரைப்படம் சுட்டிக் காட்டுகிறது.
”ஒரு சட்டத்தை அரசு இயற்றுகிறது என்று சொன்னால்.. அதை நீங்கள் ஒரு பனிக்கட்டி என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பனிக்கட்டியானது பத்து அல்லது இருபது மனிதர்களைக் கடந்து.. கடை கோடியில் இருக்கும் எளிய மனிதனை சென்றடையும்போது அது ஒரு துளி நீராகத்தான் போய் சேரும்” என்று குறிப்பிடுவார்கள். இன்றைய சூழலும் இப்படித்தான் இருக்கிறது.
சிறந்த சட்டங்களை இயற்றினாலும்… அற்புதமான திட்டங்களை திட்டினாலும்… அதை யார் செயல்படுத்துகிறார்கள்? அவர்களுக்கான அரசியல் என்னவாக இருக்கிறது? அந்த விசயங்களை எல்லாம் சேர்ந்துதான் இந்தப் படம் பேசுகிறது.
இங்கு மக்கள் அணியும் உடையிலும்.. உண்ணும் உணவிலும்… இறந்துவிட்டால் புதைக்க வேண்டுமா ..? அல்லது எரிக்க வேண்டுமா..? என்பதுவரையிலும் அனைத்திலும் அரசியல் இருக்கிறது. எனவே நம்மைச் சுற்றி எந்த மாதிரியான அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதைப் பற்றிய குறைந்தபட்ச புரிதலை இந்த ‘எலெக்சன்’ திரைப்படம் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது.
அரசியல் ஒரு சாக்கடை. அது நமக்கு வேண்டாம் என்று பலர் ஒதுங்கி செல்வதை இன்றைய சமூகத்தில் நம்மால் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்டவர்களும் இந்தப் படத்தை பார்த்தால் நிச்சயமாக அரசியல் பேசத் துவங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஜனநாயகம் என்றால் என்ன என்ற கேள்வியை இந்தப் படம் நிச்சயம் மக்களிடத்தில் எழுப்பும் என்று நம்புகிறோம்..!
RATING : 4.5 / 5









