‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்திருக்கும் படம் ‘சிவப்பு’.
மது அம்பாட் ஒளிப்பதிவு செய்ய, N.R.ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.
இலங்கை போரினால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் இலங்கை தமிழ் அகதி மக்களின் நிலையே இப்படத்தின் மையக் கருத்து. இதில் ரூபா மஞ்சரி தமிழ் ஈழத்துப் பெண்ணாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ‘சடுகுடு விழியில் சுடுகிற மயக்கம்’ என்று கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் பாடலை ஹரிஹரன் பாடியிருக்கிறார். ‘சிவப்பு’ திரைப்படம் வருகிற 16-ம் தேதி வெளியாகிறது.
‘சடுகுடு விழியில்’ பாடலின் வரிகள் :
பல்லவி
சடுகுடு விழியில் சுடுகிற மயக்கம் – என்
விடுகதை இரவு விடிவதை மறக்கும்
போர்க்கள பூமி வீசியெறிந்த
பூக்களில் ஒன்று பேசியதின்று
உனை சாய்த்த பள்ளங்களை
நிறைவாக மூடுகிறேன் – நீ
என் மனதோரம் நடந்துவர
ஒருவழிச்சாலை போடுகிறேன்
உயிரின் கனிகள் உனதடி – உன்
கண்ணீர் துளிகள் எனதடி
சரணம் 1
மாயப் பெண்மையே தேடித் தேடி உனை
தீயில் தள்ளியே மறைந்தேனே
கண்கள் கண்டதொரு ஈரக்காட்சியால்
மண்டை நரம்புகள் நனைந்தேனே
அகதிக் கூடாரம் கடந்து வந்து என்
சகதி மனவெளியில் விழுந்தாயே
சகதி மனவெளியைப் புல்வெளியாக்கி
சிதறு பூக்களாய் நாடந்தாயே
ஈழ தேவதை வாழ வாழவே
தூய பாவங்கள் நான் புரிவேன்
விடியல் கீற்றினில் விசிறிகள் செய்து
அடிமைக் காயங்கள் ஆற்றிடுவேன்
உயிரின் கனிகள் உனதடி – உன்
கண்ணீர் துளிகள் எனதடி
சரணம் 2
பாவை முன்னேறும் பாதை எங்கிலும்
பாவி முட்களைப் பொழிந்தேனே
காலம் காணாத கவிதை ஒன்றை
கப்பல் செய்திட நினைந்தேனே
வானமாளிகை தானனுப்பிய
மொத்த கர்வமென மொழிந்தேனே – உன்
சின்ன குடிசையில் ஒளிந்து கிடக்கும்
யுத்த சத்தங்கள் அறியேனே
நானறியாமல் என் சிறுமீசை
உந்தன் வாசலில் மண்டியிடும்
எனை கேட்காமல் என் குடை இனிமேல்
உனையும் உனையும் உள்ளடக்கும்
உயிரின் கனிகள் உனதடி – உன்
கண்ணீர் துளிகள் எனதடி