full screen background image

தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் கிஷோர் கவலைக்கிடம்..!

தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் கிஷோர் கவலைக்கிடம்..!

‘ஆடுகளம்’ படத்துக்காக தேசிய விருது வென்ற படத் தொகுப்பாளர் கிஷோர் வடபழனி விஜயா மருத்துவமனையில் கவலைக்கிடமாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

‘ஈரம்’, ‘ஆடுகளம்’, ‘பயணம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘காஞ்சனா’, ‘பரதேசி’, ‘மதயானைக் கூட்டம்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட பல புகழ் பெற்ற படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் கிஷோர்.

இன்னமும் திருமணமாகாத 36 வயது திரைப்பட தொழில் நுட்பக் கலைஞரான இவர், தமிழ்த் திரையுலகில் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படுபவர். ‘ஆடுகளம்’ படத்தை சிறப்பான  முறையில் படத்தொகுப்பி செய்தமைக்காக தேசிய விருது பெற்றவர்.

தற்போது இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விசாரணை’ படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்து வந்தபோது அவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்திருக்கிறார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.

கிஷோரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருடைய மூளையில் ஓர் இடத்தில் ரத்தம் கட்டியிருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி செய்திருக்கிறார்கள். அப்போது 24 மணி நேரத்தில் நினைவு திரும்பிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் இன்னமும் நினைவு திரும்பவில்லை. இப்போதும் கோமா நிலையில்தான் இருக்கிறார்.

இந்நிலையில், மீண்டும் இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கிஷோருக்கு விரைவில் நினைவு திரும்பி பழைய நிலைமைக்கு வரவேண்டும் என்று திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இதற்கென #GetWellSoonKishore என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் பலரும் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.

நாமும் பிரார்த்திக்கிறோம்..!

Our Score