full screen background image

DUDE –  சினிமா விமர்சனம்

DUDE –  சினிமா விமர்சனம்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘Dude’.

யங் சென்சேஷன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தப் பிறகு ’புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பல பிரம்மாண்டமான வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் பான் இந்தியன் படமான ‘Dude’-ல் இணைந்துள்ளார்.

‘பிரேமலு’ படப் புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்குமார், ரோகிணி, ஹிருது ஹாரூன், நேஹா சர்மா, டிராவிட் செல்வம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சாய் அபயங்கர் இசையமைத்திருக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக லதா நாயுடுவும் படத் தொகுப்பாளராக பரத் விக்ரமனும் பணியாற்றியுள்ளனர். அறிமுக இயக்குநரான கீர்த்தீஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் படத்தின் ஹீரோவுக்கு மார்க்கெட் கிடைக்கும். தொடர்ந்து அடுத்த படமும் வெற்றி பெற்றால் அந்த நடிகரை நோக்கி பெரிய தயாரிப்பாளர்கள் வருவார்கள். மூன்றாவது படமும் வெற்றி பெற்றால் அவருக்கென்று ஒரு தனி ஸ்டைல் அவருக்கு தெரியாமலேயே உருவாக்கப்படும். அவரும் அந்த ஸ்டைல் என்ற வளையத்துக்குள் மாட்டிக் கொள்வார். அப்படித்தான் இந்தப் படத்தின் ஹீரோவான பிரதீப் ரங்கநாதனும் இந்தப் படத்திலும், இந்த இயக்குநரிடமும் மாட்டியிருக்கிறார்.

‘அகன்’ என்ற பிரதீப் தன்னுடைய சொந்த தாய் மாமன் மகளான மமிதா பைஜூவுடன் இணைந்து ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் சர்ப்ரைஸ் கிப்டுகளை வழங்கும் நிகழ்ச்சிகளையும், பிறந்த நாள் நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொடுக்கிறார்கள் பிரதீப்பும், மமிதாவும்..!

ஆனால் இந்தக் கம்பெனியை சும்மா ஒரு பெயருக்குத்தான் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவருடைய தாய் மாமாவும், மமீதா பைஜுவின் அப்பாவுமான சரத்குமார் மாநில பால்வளத்துறை அமைச்சர். மிகப் பெரும் கோடீஸ்வரர்.

ஆனால் தீவிரமான ஜாதிப் பித்துப் பிடித்தவர். தன்னுடைய மகளுக்கும் பிரதீப்புக்கும் திருமணம் செய்து வைக்க காத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரம் பிரதீப்பின் அம்மாவான ரோகிணி தன்னுடைய அண்ணன் சரத்குமார் உடன் பேசுவதில்லை. என்ன காரணம் என்பதை அவர்கள் இருவருமே சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் பிரதீப்பும், ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண் காரணமே சொல்லாமல் பிரதீப்பிடமிருந்து விலகிச் செல்கிறார். இந்த சோகத்தில் இருக்கும் பிரதீப்பிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறார் மமீதா.

ஆனால் சிறு வயதில் இருந்தே தோழமையோடு பழகியதால் மமீதா மீது தனக்கு காதல் வரவில்லை என்கிறார் பிரதீப். இதனால் இந்த காதல் தோற்றுப் போன நிலைமையில் மமீதா மேல் படிப்பு படிப்பதற்காக பெங்களூர் செல்கிறார்.

இதன் பிறகு தன்னுடைய வழியில் குறுக்கே வரும் எத்தனையோ பெண்களை பார்த்தும் பிரதீப்புக்கு காதல் உணர்வு வரவில்லை. ஆனால் அவர் மனதில் மமீதாவின் முகமும், பெயரும் அப்படியே இருக்க… உள்ளுக்குள் தான் இன்னமும் மமீதாவை காதலிப்பதை உணர்கிறார். உடனேயே பிரதீப் இதை தாய் மாமன் சரத்குமாரிடம் சொல்ல… சரத்குமார் அவசரம் அவசரமாக இருவருக்கும் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

இந்த நேரத்தில் பெங்களூரிலிருந்து வரும் மமீதா தான் ஒரு பையனை காதலிப்பதாகவும் அவன் மூலமாகத் தான் இப்போது கர்ப்பமாக இருப்பதாகவும் ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார்.

அதிர்ந்து போன பிரதீப் இந்தப் பிரச்சனையில் இருந்து நமீதாவை காப்பாற்றுவதாக அவரிடம் வாக்களிக்கிறார். இதன் பின்பு என்ன ஆனது மமிதாவையும் அவளது காதலனையும் பிரதீப் சேர்த்து வைத்தாரா… அல்லது பிரதீப்புக்கும், மமிதாவுக்கும் இடையில் திருமணம் நடந்ததா… முடிவுதான் என்ன என்பதுதான் இந்த டியூட் படத்தின் திரைக்கதை.

முதல் இரண்டு படங்களைப் போலவே இந்தப் படத்திலும் பிரதீப் நடிப்பு ஒன்று போலத்தான் இருக்கிறது. அவருடைய டென்ஷன்தான் அவர் காட்டுகின்ற அதிகபட்சமான நடிப்பு. ஒவ்வொரு டென்ஷனுக்கும் ஒவ்வொருவிதமான முக பாவனைகளையும், உடல் மொழியையும் வெளிப்படுத்தி அதில் ஒரு சின்ன சின்ன காமெடியை கொண்டு வந்திருக்கிறார் பிரதீப்.

சரத்குமாரிடம் தன்னுடைய காதலை அவர் சொல்லும்விதமும் மமீதாவிடம் தன்னுடைய காதலை சொல்லி, அவள் ஏற்க முடியாமல் போக அந்த சிக்கலில் மாட்டிக் கொண்டு அவரை காப்பாற்றுகின்ற அவரது முயற்சிகளின்போதும் பிரதீப்பின் நடிப்பும் அவர்கள் உடல் மொழியும் ஒரு நடிப்பாகவே நமக்கு தெரிகிறது.

சில இடங்களில் வழக்கம் போல கத்துவதும்… எக்ஸ்ட்ரீம் லெவலான ஒரு வெறியையும், வெறுப்பையும் காட்டுவதும் பிரதீப்பின் ஸ்டைல் என்று ஆகிவிட்டது என்பதால், இந்தப் படத்திலும் இதை அனாசயமாக பல காட்சிகளில் பயன்படுத்தி இருக்கிறார் பிரதீப்.

அவருடைய கோணங்கித்தனமான சேட்டைகளும், அவருடைய நடத்தைகளும், உடல் மொழியும் சில இடங்களில் நகைப்பை வரவழைத்ததால் அவர் வயதை ஒத்த பல இளைஞர்கள், இளைஞர் கூட்டங்கள் ரசிக பெருமக்கள் அனைவருக்கும் பிரதீப்பை பிடித்து இருக்கிறது. தன்னிடம் இருக்கின்ற அவருடைய ரசிகர்களுக்கு பிடித்த முழு சேட்டைகளையும் இந்தப் படத்தில் அவர் காண்பித்து இருக்கிறார்.

பிரேமலுவைப் பார்த்து அசந்து போயிருந்த ரசிகர்களுக்கு மற்றும் ஒரு கொண்டாட்டத்தை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார் மமீதா பைஜூ. அவருடைய அழகை அதிகமாக காட்டாமல் நடிப்பை மட்டுமே மிக சிறப்பாக கேமராவில் பதிவு செய்து காண்பித்திருக்கிறார் இயக்குநர்.

பிரதீப் எப்போதெல்லாம் தன்னுடைய குறளி வித்தையை காட்டுகிறாரோ அப்போதெல்லாம் மமீதாவும் தன்னுடைய அழகான முக பாவனை மூலமும், அழகான நடிப்பின் மூலமாகவும் தன்னுடைய ஹீரோயின் வேலையை  மிக அழகாக செய்து இருக்கிறார்.

அமைச்சர் அதியமானாக நடித்திருக்கும் சரத்குமார் தன்னுடைய பாசமிக்க அப்பா என்கின்ற குணத்தையும், அதே பாசமிக்க தாய் மாமன் என்கின்ற குணத்தையும் காட்டியவர் இடையிடையே வில்லத்தனத்தையும் காட்டி அசர வைத்திருக்கிறார்.

தன்னுடைய தங்கை எப்படி இறந்தார் என்பதை மமீதாவிடம் சொல்லுகின்ற காட்சிகளும், அதற்கு அடுத்து அந்த காட்சியை பிராங்க்காக பிரதீப் சொல்லும்பொழுது தானும் பிராங்குக்காகத்தான் செய்ததாக சொல்லி உடனடியாக மடை மாற்றும் அந்தக் காட்சியிலும் சபாஷ் போட வைத்திருக்கிறார் சரத்.

மமீதாவின் காதலனாக வரும் ஹ்ருது ஹரன் அவ்வப்பொழுது பிரதீப்பை டென்ஷன் ஆக்கும் காட்சிகளிலும், தன்னுடைய காதலை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்ற பொழுதும் பல இடங்களில் காமெடியை கொண்டு வந்திருக்கிறார்.

அமைச்சராக  நடித்திருக்கும் சரத்குமார் தன்னுடைய வில்லத்தனத்தை கடைசியில் காட்ட… அம்மா ரோகிணியோ முதலிலிருந்து கடைசிவரையிலும் தன்னுடைய மகனுடன் மல்லு கட்டுகின்ற ஒரு அம்மாவாக தன்னுடைய நடிப்பை காண்பித்து இருக்கிறார். அழகு. இறுதியில் தன் மகன் தன்னை ஏமாற்றியதை அறிந்து அவர் காட்டுகின்ற அந்த ஆக்ரோஷ நடிப்பு சூப்பர்.

பிரதீபின் காதலியாக நடித்திருக்கும் நேகா ஷெட்டியும் அவரது கணவராக நடித்த வரும் ஒரு கண நேர நகைச்சுவைக்காக கச்சிதமாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதில் நேகா ஷெட்டியின் அழகு ஒரு பக்கம் நம் கவனத்தை

ஈர்க்க இன்னொரு பக்கம் திருமணத்தில் இடையூறு செய்ய வரும் பிரதீப்பா அவர் எதிர்கொள்ளும் நேரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பெரிய பட்ஜெட் படம் என்பதை ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி. ஒவ்வொரு காட்சியிலும், ஷாட்டிலும் இதைக் கவனத்தில் வைத்து படமாக்கி இருக்கிறார். முதல் காட்சியான கல்யாண மண்டபத்தில் நடக்கும் கலேபரங்களை மிக அழகாக படமாக்கியிருக்கிறார்.மற்றும் பாடல் காட்சிகள் அனைத்துமே கேமராவின் கை வண்ணத்தில் காட்சிகள் நகருகின்ற பொழுது இதுவொரு வித்தியாசமான ஒரு படமாக நமக்கு தெரிகிறது.

துவக்க காட்சிகளில் மமிதாவை சாதாரணமாக காண்பித்து விட்டு இடைவேளைக்கு பின்னான காட்சிகளில் மட்டுமே அவருடைய நடிப்பையும், அழகையும் விஸ்தாரமாக படமாக்கி இருக்கிறார்.

சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். ஊரும் பிளட் என்ற பாடல் மிக வேகமான தாள லயத்தில் இசைக்கப்பட்டு ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.  அதேபோல் சிங்காரி பாடலும் அந்த சிச்சுவேஷனில் நம்மையும் சேர்த்து முணுமுணுக்க வைத்திருக்கிறது. . ‘நல்லாரு போ’ உணர்வுப்பூர்வமான பாடலாக வந்துள்ளது.

ஏக்கம், காதல், பிரிவு ஆகியவற்றின் கலவையாக விவேக்கின் பாடல் வரிகள் எழுதியிருக்க, திப்பு மற்றும் மோஹித் செளஹான் இந்த அர்த்தமுள்ள மெலோடி பாடலை பாடியுள்ளனர்.

நமக்கு பிடித்தவர்கள் எந்தக் காரணத்திற்காக நம்மை விட்டு பிரிந்தாலும் ‘எங்கிருந்தாலும் வாழ்க…’ என வாழ்த்துவதை கருவாகக் கொண்டு இந்தப் பாடல் பிடித்துள்ளது.

படத்தில் இடையிடையே கொஞ்ச நேரம் விட்டு, கொஞ்ச நேரம் காமெடி விட்டுக்களை தெளித்து நாம் புன்முறுவல் பூக்கவும், சிரிக்கவும், கை தட்டி கொண்டாடுவும் மாதிரியான திரைக்கதையை அழகாக காட்சி வடிவத்தில் தொகுத்து அளித்திருக்கிறார் படத்தொகுப்பாளர்.

அதிலும் பிரதீப்பின் ஸ்பீடான வசனங்களையும் அதற்கு பொருத்தமான கவுண்டர் டயலாக்குகளையும் மற்றவர்களின் நடிப்பையும் கண்ணிமைக்கும் நேரத்தில் நமக்குக் காண்பித்து பெரிது ரசிக்க வைத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் பரத் விக்ரமன்.

முதல் பாதியில் அடுத்தடுத்து திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் திரைக்கதை இடைவேளை பிளாக்கில் ஸ்தம்பித்து போய் நிற்கிறது. அடுத்து என்ன ஆகும் என்ற ஒரு கேள்வியையும் எழுப்பி ரசிகர்களை ஒருவித குழப்ப மன நிலையிலேயே வைத்திருக்கிறது.

இடைவேளைக்குப் பின்புதான் கதை மிக மிக சீரியஸாக நாம் நினைத்துப் பார்க்காத வகையில் நம்முடைய நம்பிக்கை புனிதங்களையெல்லாம் அடித்து செல்லும் காட்டாறு போல் செல்கிறது.

நிறைய லாஜிக் மிஸ்டேக்குகளுடன் இப்படி எல்லாம் ஒரு கதை பண்ண முடியுமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு வந்திருக்கும் இத்திரைப்படம் இளைஞர்களுக்கு ஒரு கொண்டாட்டத்தை கொடுத்தாலும், குடும்பத்தோடு படம் பார்க்க வருபவர்களுக்கு நிச்சயமாக ஒரு சலிப்பையும் ஒரு அதிர்ச்சியையும் ஒரு திடுக் உணர்வையும் கொடுத்திருக்கிறது.

சம்பிரதாயங்களையும், வழிமுறைகளையும், தொன்மங்களையும் தாண்டுவதுதான் இன்றைய இளைய தலைமுறையின் கொண்டாட்டம் என்றால் இந்தப் படம் அதைத்தான் சொல்லி இருக்கிறது.

இதனோடு கூடவே சாதிப் பித்து… அதன் விளைவாய் வரும் ஆணவம்.. சாதிய மனநிலை… சாதிக்கு முன்பு பாசமெல்லாம் இல்லை என்பது போன்ற சாதிப் பித்து பிடித்தவர்களை கேள்வி கேட்பது போலவும் யாருக்காகவும் எதற்காகவும் கட்டாய திருமணம் செய்து மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதையும் சொல்லும் ஒரு விஷயத்திற்காக இந்தப் படம் பிரதீப்பின் ரசிகர்களால் கவனிக்கப்படும்.

RATING : 2.5 / 5

Our Score