இதுநாள்வரையில் புகைந்து கொண்டிருந்த இந்த டப்பிங் சீரியல் விவகாரம், இப்போது பூதாகரமாக தெருவுக்கு வந்ததன் காரணம் என்ன..?
சமீபத்தில், சன் தொலைக்காட்சியில் இருந்து அத்தொலைக்காட்சியில் சீரியல்களை தயாரித்து வழங்கும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வந்த ஒரு பக்க மெயில்தான் இப்போதைய திடீர் பரபரப்பிற்குக் காரணமாம்..!
அந்த மெயிலில் தெரிவிக்கப்பட்டிருக்கும் செய்தியின்படி, பகல் நேரத்திலும், பிரைம் டைமிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நேரடி தமிழ் சீரியல்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 3 வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக டல் அடிக்கும் சீரியல்களின் ரேட்டிங்கை உயர்த்த வேண்டும் என்பதுதான் அந்த மெயிலின் சாராம்சம்.
இன்னும் 3 வாரங்களில் குறிப்பிட்ட ரேட்டிங்கை அந்தந்த சீரியல்கள் பெற வேண்டும். அப்படி ரேட்டிங் பெறும் சீரியல்கள் மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என்றும், ரேட்டிங் கிடைக்காத சீரியல்கள் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அந்த சீரியலை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் சன் டிவி நிர்வாகம் தெரிவித்துவிட்டதாம்.
இதனால், போர் அடித்தாலும் கவலைப்படாமல் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பிய பல சீரியல் தயாரிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன.
தற்போது ஜெயா டிவி, பாலிமர் டிவி, ஜீ தமிழ் டிவி, ராஜ் டிவி என பல தொலைக்காட்சிகளில் டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இருந்தாலும் இவைகளைவிடவும் அதிகமான சீரியல்களை ஒளிபரப்புவது சன் டிவி மட்டுமே.
மொத்தமாக 18 தமிழ் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான் டி.ஆர்.பி. ரேட்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பாகவே சன் டிவியை தவிர மற்ற சேனல்களெல்லாம் டப்பிங் சீரியலை கொண்டு வந்தபோது சன் டிவி மட்டும் அமைதி காத்தது. விஜய் டிவியும், ஜீ தமிழும் டப்பிங் சீரியல்களால் குறிப்பிடத்தக்க அளவில் ஒட்டு மொத்த சேனலின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை எட்டிப் பிடித்தபோது சுதாரித்துக் கொண்ட சன் டிவி, இதன் பின்பு தானும் அதே வழியில் இறங்கியது.
இப்போது ஞாயிறன்று ‘ஜெய் ஹனுமான்’ என்ற டப்பிங் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது குட்டீஸ்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது.
இதுவுமில்லாமல் திங்கள் முதல் சனிவரை இரவு 10 மணிக்கு ‘நாகினி’ என்ற டப்பிங் சீரியலையும் ஒளிபரப்பி வருகிறது சன் டிவி.
இந்த சீரியலில் உள்ள பிரம்மாண்டமும், நடிக்கும் நடிகைகளின் கவர்ச்சி போஸ்களும் 10 மணி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. இந்த சீரியலும் சன் டிவி நிர்வாகமே எதிர்பார்க்காத டி.ஆர்.பி. ரேட்டிங்கை பிடித்துள்ளதாம்.
இப்படி இந்த வட இந்திய டப்பிங் சீரியல்கள் மக்களிடையே திடீர் வரவேற்பு பெற்றது என்றாலும், சன் தொலைக்காட்சியின் மற்ற சில சீரியல்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கை தொடர்ந்து இழந்து வருகின்றன.
என்னதான் சன் டிவி சீரியல் என்றாலும் ஒரே வீடு.. ஒரே லொகேஷன்.. குளோஸப் ஷாட்டுகள்.. அரதப்பழசான திரைக்கதை.. வார்த்தையாலேயே அரிவாளைக் கொண்டு வெட்டுவதை போன்ற வசனங்கள்.. இவையெல்லாம் மக்களுக்குத் திகட்டத் துவங்கி இப்போது அவர்கள் டப்பிங் சீரியல்களில் மூழ்கத் துவங்கிவிட்டார்கள்.
சன் டிவியில் காலை 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகும் ‘நாகினி’ சீரியலும் எதிர்பாராத டி.ஆர்.பி.யை தொட்டதும்தான் இந்த டப்பிங் சீரியல் பிரச்சினைக்குள் சன் டிவியை கொண்டு போய் தள்ளியிருக்கிறது. இதனால் பல டப்பிங் சீரியல்களை பகல் நேரத்திலும் களமிறக்க திட்டமிட்டுள்ளதாம் சன் டிவி நிர்வாகம்.
இதனாலேயே சன் டிவியில் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் டிவி சீரியல்களையும், போரடிக்கும் சீரியல்களையும் நிறுத்திவிட்டு, விறுவிறுப்பான டப்பிங் சீரியல்களை ஒளிபரப்ப சன் டிவி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம். இதற்காக தற்போது சுமார் 20 டப்பிங் சீரியல்களின் உரிமைகளை வாங்கி வைத்துள்ளது சன் டிவி நிர்வாகம்.
சன் டிவியின் இந்த திடீர் முடிவினால் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்களில் 90 சதவிகிதம் பேருக்கு வேலை வாய்ப்பு பறி போகவுள்ளது என்கிற பயம் எழுந்ததால்தான், தமிழ்நாடு சின்னத்திரை கூட்டமைப்பினர் அவசரம், அவசரமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதோ, வரும் ஞாயிற்றுக்கிழமையன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள்.
யாருக்கு எதிராக..? டப்பிங் சீரியல்களுக்கெதிராக..
டப்பிங் சீரியல்களை அனுமதிப்பது யார்..? தனியார் தொலைக்காட்சிகள்..
அந்தத் தொலைக்காட்சிகளை கண்டித்தாலே.. தண்டித்தாலே.. இந்தப் பிரச்சினை முடிந்துவிடும்.. ஆனால் செய்ய வேண்டுமே..? செய்வதற்கு தைரியம் வேண்டுமே..? அதற்கு முதலில் முழு ஒற்றுமை வேண்டுமே..? அதுதான் இங்கே இல்லை.
கர்நாடகாவில் அனைத்து தரப்பு திரையுலகத்தினரும் ஒன்று சேர்ந்து டப்பிங் படங்கள், மற்றும் டப்பிங் சீரியல்களுக்கு தடை போட்டிருக்கிறார்கள்.
அங்கே தமிழில் ஒளிபரப்பான சீரியல்களை மறு ஆக்கம் செய்யலாமே தவிர, அப்படியே டப்பிங் பேச வைத்து மறுஒளிபரப்பு செய்யவே முடியாது. அப்படிச் செய்தால் அந்தத் தொலைக்காட்சிக்கு கன்னட சினிமாவுலகம், சின்னத்திரையுலகம் இரண்டுமே ஒத்துழைப்பு கொடுக்காது என்பது அந்த மாநில கலைஞர்களின் கூட்டுத் தீர்மானம்.
இப்படியொரு தீர்மானத்தை இங்கே ஏன் கொண்டு வர முடியவில்லை..? இதுதான் சிக்கலே..!
ஒரு பக்கம் சன் டிவி. இன்னொரு பக்கம் ஜெயா டிவி. இதற்கு நடுவில் கலைஞர் டிவி. இவர்கள் யாரிடமும் போய் மிரட்ட முடியாது.. எச்சரிக்கைக் கடிதம்கூட கொடுக்க முடியாது. அந்த அளவுக்கு தைரியமுள்ளவர்கள் யாரும் சினிமாவுலகத்தில் இல்லவே இல்லை. பெரிய திரையிலேயே இல்லை என்றால் சின்னத்திரையில் யார் முன் வருவார்கள்..?
ஆகவே.. இந்த போராட்டத்தின்போது யாராவது ஒருவர் வாய் தவறி எதையாவது ஒன்றை கூறினால்கூட அது தங்களுக்கு ஆபத்தில் முடியும் என்பதை யூகித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் யாருக்கும் பேச அனுமதியில்லை என்று சின்னத்திரை நிர்வாகத்தினர் முடிவெடுத்திருக்கிறார்களாம்.
அதோடு, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தையே ‘அறவழி விழிப்புணர்வு நிகழ்ச்சி’ என்று சுற்றி வளைத்து சொல்கிறார்கள் சின்னத்திரை நிர்வாகிகள். இந்த அளவுக்கு இவர்கள் பயந்து சாவதற்குக் காரணம் சன் டிவிதான்.
அவர்களைப் பகைத்துக் கொண்டால் சின்னத்திரை உலகத்திலேயே வாழ முடியாது என்பது தெரிந்த விஷயம் என்பதால்தான் இத்தனை தூரம் இறங்கி வந்து மறைமுகமாக போராடுகிறார்கள் சின்னத்திரை கலைஞர்கள்.
இதனால் என்ன ஆகும் என்றால் எதுவும் நடக்காது என்பதுதான் உண்மை.
“சன் டிவியின் காலை நேர ஸ்லாட்டே 65000 முதல் 75000 ரூபாய்வரை விற்கப்படுகிறது. இதற்கு மேலும் கூடுதலாக ஒரு எபிசோடுக்கு 30 அல்லது 40000 ரூபாய்வரை செலவழித்து ஒரு எபிசோடிற்கு ஒரு லட்சத்து 25000 ரூபாய் வரையிலும் முதலீடு செய்து சீரியலை தயாரித்தாலும் அந்தத் தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய லாபம் கிடைப்பதில்லை. ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் சொற்பமான லாபம்தான் கிடைக்கும்.
இதே நேரம் வெறும் 20000 ரூபாயில் டப்பிங் பேச வைத்து, அந்த சீரியலை ஒளிபரப்பி அதன் டி.ஆர்.பி. ரேட்டிங் ஏறி அதன் விளைவாய் விளம்பரக் கட்டணத்தையும் உயர்த்தினால் சன் டிவிக்கு நேரடியாகவே தினம்தோறும் பல லட்ச ரூபாய் லாபமாக கிடைக்கும். இது ஒரு சீரியல் என்றால் மிச்சமிருக்கும் 18 சீரியல்களுக்கும் கணக்குப் போட்டு பார்த்தால் அதுவே மாதந்தோறும் கோடிகளில் கிடைக்க வாய்ப்புண்டு.
இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் சன் டிவி நிர்வாகம் இந்த டப்பிங் சீரியல்களை வரவேற்கும் திட்டத்தைத் துவக்கியுள்ளது என்கிறார்…” பெயர் சொல்ல விரும்பாத சின்னத்திரை இயக்குநர் ஒருவர்.
இதே நேரம் “இந்த டப்பிங் சீரியல்கள் திட்டம் நிச்சயம் வெற்றி பெறாது..” என்கிறார் இன்னொரு மூத்த சின்னத்திரை இயக்குநர்.
அவர் மேலும் பேசும்போது, “அநேகமான வடக்கத்திய சேனல்களில் அன்னிய முகங்கள்தான். அவர்களது சீரியல்களில் இருக்கும் ரிச்னெஸ்.. லொகேஷன்களில் இருக்கும் வித்தியாசம்.. பெண்கள் அணியும் ஆடை, அணிகலன்கள்.. நமது பெண்களுக்கு முதலில் ஒரு ஆர்வத்தைக் கொடுக்கும். பரவசத்தைக் தரும்.. ஆனால் மனதைத் தொடாது.
அந்த ஹிந்தி சீரியல்களில் இருக்கும் கதையும், திரைக்கதையும் நம் மண்ணில் இருந்து முற்றிலும் அந்நியப்பட்ட கதை. இப்போது 17 தமிழ் சீரியல்களுக்கு நடுவில் ஒரேயொரு அன்னிய சீரியல் ‘நாகினி’ வெற்றிகரமாக ஓடுகிறது என்றால் காரணம், அது அனைவருக்கும் மாற்றாக இருக்கும் ஒரேயொரு சீரியல் என்பதால்தான்..
இதே நேரத்தில் ஒரு நாளில் ஒளிபரப்பாகும் 18 சீரியல்களுமே ‘நாகினி’ போன்ற டப்பிங் சீரியல்கள்தான் என்றால் நிச்சயம் மக்களுக்கு திகட்டிவிடும். போரடிக்கும். அவர்களே வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இப்போது வரும் தமிழ் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் கேரக்டர் பெயர்களை ஞாபகம் வைத்திருக்கும் அளவுக்கு சீரியல்களை நேசிக்கும் தமிழ்ப் பெண்களால் முற்றிலும் அடிமைத்தனமான சூழல் கொண்ட அந்த அன்னிய சீரியல்களை ரசிக்க முடியாது என்பது உண்மை. நிச்சயம் இது அடிபட்டுவிடும்..
சின்னத்திரை கலைஞர்கள் உலகம் இதில் பயப்பட தேவையில்லை. ஆனால் நிச்சயம் இது போன்ற விழிப்புணர்வு அவர்களுக்கு தேவைதான். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தங்களது ஒற்றுமையை காட்டுவதற்காக அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் தவறில்லை..” என்றார்.
கர்நாடகாவில் இருக்கும் பெப்சி அமைப்பின் கிளைதான் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. ஆனால் இங்கே இருப்பவர்கள் ஆளும் அரசுகளுக்கெதிராக ஒரு சின்ன முணுமுணுப்பைக்கூட வைக்க மாட்டார்கள். இதனால் ஜெயா டிவியை கண்டிக்க முடியாது.
சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த முக்கால்வாசி கலைஞர்களுக்கு வேலை கிடைத்திருப்பதே சன் டிவியால்தான். சின்னத்திரை நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களில் 99 சதவிகிதத்தினர் நடித்து வருவது ‘சன்’னில் வரும் சீரியல்களில்தான். அதனால் வெளிப்படையாக சன் டிவியை கண்டிப்பதற்கு யாருக்கும் துணிவில்லை.
இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே அனைத்து தொலைக்காட்சி அலுவலகங்களுக்கும் நேரடியாகச் சென்று “டப்பிங் சீரியல்களை ஒளிபரப்ப வேண்டாம்..” என்று கடிதமெல்லாம் கொடுத்தார்கள் சின்னத்திரை கூட்டமைப்பினர்.
அந்தக் கடிதம் அவர்கள் அந்தக் கட்டிடத்தைவிட்டு வெளியே வருவதற்குள்ளேயே குப்பைக் கூடைக்கு போயிருக்கும் என்பது அவர்களுக்கே தெரியும். ஆனாலும் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது தெருவுக்கு வந்திருக்கிறார்கள்.
இது தொடர்ந்தால் நிச்சயம் சின்னத்திரை உலகத்தில் சுகாதாரமற்ற நிலை உருவாகி, வேலை வாய்ப்புகள் அருகி, தொழிலாளர்களும், நடிகர், நடிகையரும் சிக்கலுக்குள்ளாகுவார்கள் என்பது மட்டும் உறுதி.
பெப்சியும், அனைத்து திரைப்பட சங்கங்களும் இந்த விஷயத்தில் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புடன் இணைந்து அனைத்து தொலைக்காட்சிகளுக்கு எதிராக கர்நாடகாவில் செய்தது மாதிரியான ‘செக்’ வைத்து அவர்களைத் திருத்தினால் ஒழிய.. இதற்கு தீர்வு கிடைக்கவே கிடைக்காது..!
பார்ப்போம்.. யார் இதனை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துகிறார்களென்று..?!