இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பில், பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவருடன் ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத் தொகுப்பை ஆர்.ராமர் மேற்கொண்டிருக்கிறார்.
‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குநரான பா.கின்ஸ்லின், இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.
இன்றைய சூழலில் நாட்டில் ஏராளமான பெண்கள் கால் டாக்ஸி டிரைவர்களாக பணியாற்றுகிறார்கள். அப்படியாகப்பட்ட ஒரு பெண் டிரைவரின் ஒரு நாள், ஒரு டிரிப்பை மையப்படுத்திய திரைக்கதைதான் இந்த ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம்.
கால் டாக்சி டிரைவராக இருந்த தனது தந்தை அரசியல் காரணங்களுக்காகக் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட வருமான இழப்பினை ஈடுகட்ட அவருடைய கால் டாக்சி டிரைவர் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் அவரது மகளான ‘ஜமுனா’ என்ற ஐஸ்வர்யா ராஜேஷ்.
நோயாளியான அவருடைய அம்மா, வீட்டை விட்டு ஒடிப் போன அவருடைய தம்பி என்ற குடும்பச் சூழலும் ஜமுனாவை சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளியிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ‘ஆடுகளம்’ நரேனை கொல்ல தற்போதைய எம்.எல்.ஏ.வான கவிதாபாரதி திட்டமிட்டிருக்கிறார். இதற்காக இவர் ஏற்பாடு செய்த கூலிப் படையைச் சேர்ந்த மூன்று பேர் ஜமுனாவின் கால் டாக்சியில் ஏறுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருமுடிவாக்கம் பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு வரும் அவர்கள் கொலை திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்பதை அறியும் ஜமுனா, போலீஸுக்கு தகவல் கொடுக்கிறார்.
அவர்களை பிடிக்க போலீஸாரும் ஜமுனாவின் உதவியுடன் திட்டமிட எதிர்பாராதவிதமாக இதனை கொலையாளிகள் கேட்டுவிடுகின்றனர். இதையடுத்து ஜமுனாவை பிணைக் கைதியாக்கி, அவளது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவதாகச் சொல்லி மிரட்டியே தொடர்ந்து அவரது காரில் பயணித்து கொலை செய்ய செல்கிறார்கள்.
இவர்கள் பிடியிலிருந்து ஜமுனா தப்பித்தாரா..? ஆடுகளம் நரேனை கூலிப் படையினர் கொன்றார்களா? அல்லது போலீஸ் இவர்களை பிடித்ததா..? உண்மையில் இந்த கொலைக்கு ஸ்கெட்ச்சை போட்டது யார்..? என்ற கேள்விகளுக்கு பரபரப்பான திரைக்கதையில் விடை கொடுத்திருக்கிறார் இயக்குநர் கின்ஸ்லின்.
இயக்குநர் கின்ஸ்லின் இயக்கிய முதல் படமான ‘வத்திக்குச்சி’ படத்தில் ஒரு ஆட்டோவை மையமாக வைத்து படத்தை இயக்கியிருந்தார். இந்த இரண்டாவது படத்தில் காரை மையமாக வைத்து கதையையும், திரைக்கதையையும் எழுதியிருக்கிறார் கின்ஸ்லின்.
கதையின் நாயகியாக டிரைவர் ‘ஜமுனா’வாக ஐஸ்வர்யா ராஜேஷ் கார் டிரைவராக இதுவரையிலும் எந்த தமிழ் நடிகையும் ஏற்று நடித்திருக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிக்கும் முன்னரே வாடகை காரை இயக்கும் பெண் ஓட்டுனர்களை நேரில் சந்தித்து, அவர்களிடமிருந்து உடல் மொழியையும், வாடிக்கையாளர்களின் மனநிலையையும் கேட்டறிந்த பின்னர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த கதாப்பாத்திரத்தில் நடித்தரராம். அதற்கு நூறு சதவீத நடிப்பைக் கொடுத்து உழைத்திருக்கிறார் ஐஸ்.
பொதுவாக சாலை பயணம் பற்றிய திரைப்படம் என்றால் ப்ளூமேட் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திதான் படத்தை உருவாக்குவார்கள். ஆனால் இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் டூப் போடாமல், அவரே வாகனத்தை வேகமாக இயக்கிக் கொண்டே நடித்திருக்கிறார்.
சாலையையும் கவனித்துக் கொண்டு, உடன் நடிக்கும் நடிகர்களின் உரையாடலுக்கும் பதிலளித்துக் கொண்டே அவர் நடித்திருப்பது பாராட்டுக்குரியது.
எப்போதும் சோகம் ததும்பிய இறுக்கமான முகம்.. குடும்பச் சூழல் கண் முன்னே ஆட்டம் காட்டுவதால் மிரட்சியான பார்வையுடன், அமைதியான முகபாவனையைக் காட்டிக் கொண்டு நடித்திருக்கிறார் ஐஸ்.
ஆனால், அழுத்தமாக.. அமுக்கமாக… சாமர்த்தியாகத் திட்டம் தீட்டி இறுதியில் தான் நினைத்ததை சாதிக்கும் காட்சியில் நம்மையும் கை தட்ட வைத்திருக்கிறார் ஐஸ்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ‘ஆடுகளம்’ நரேன் வீட்டில் இருப்பவர்களிடத்தில் அன்பையும், பண்பையும் காட்டிவிட்டு… உள்ளுக்குள் மிகப் பெரிய கொலைகாரராகத் திகழும் அந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சை புரிந்து கொண்டு நடித்திருக்கிறார்.
ஒரு காட்சியில் தனது மகனான மணிகண்டனிடம் தற்போதைய அரசியல் நிகழ்வு குறித்தும், மகனை எப்படி ஜெயிக்க வைத்தேன் என்பதையும் ஆக்ரோஷமாக சொல்லிக் காட்டும் காட்சியில் அப்படியே ஒரு அராஜக அரசியல்வியாதியை கண் முன்னே காட்டியிருக்கிறார் ‘ஆடுகளம்’ நரேன்.
மூன்று கொலையாளிகளுமே ஒருவருக்கொருவர் சளைக்காமல் தங்களது வில்லத்தன நடிப்பைக் காண்பித்து நம்மை பயமுறுத்துகிறார்கள். அதிலும் போதை மருந்தை உட்கொண்டு வெறித்தனத்தைக் காட்டும் அந்த நடிகர் பாராட்டுக்குரியவர்.
ஜமுனாவின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி அட்டகாசமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியாக அவர் காட்டியிருக்கும் நடிப்பு தத்ரூபம். இதற்காகவே இவரும் இந்த மாதிரியான நோயாளிகளை நேரில் சந்தித்து, அவர்களுடைய நிலைமையை உணர்ந்து அதேபோல் நடித்துள்ளார். இவருடைய இந்த பரிதாபமான நிலைமைதான் இறுதிக் காட்சியில் ஜமுனா செய்யும் பழி வாங்கலை, சுலபமாக ஏற்க வைத்திருக்கிறது.
தொழில் நுட்பக் கலைஞர்களில் ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய் பெரும் பாராட்டை பெறுகிறார். பெரும்பாலான காட்சிகள் காருக்குள்ளேயே நடந்திருப்பதால் அனைத்தையும் பல்வேறு கேமிரா கோணங்களில் போரடிக்காமல் படமாக்கி ஒரு த்ரில்லிங்கான அனுபவத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார்.
அதேபோல் காருக்குள் நடக்கும் சண்டை காட்சிகளும், சாலைகளில் நடைபெறும் கார் விபத்து காட்சிகளையும் சண்டை இயக்குநர் அனல் அரசு வடிவமைத்திருக்கும்விதம் நம்மை பிரமிக்க வைத்திருக்கிறது.
இந்த இருவரின் கடுமையான உழைப்புக்கு தனது கத்திரிக் கோலால் மிகுந்த மரியாதை செய்திருக்கிறார் படத் தொகுப்பாளரான ராமர். சண்டை காட்சிகளிலும், கார் பயணக் காட்சிகளையும் ஒரு துளிகூட சிந்தல், சிதறல் இல்லாமல் வெட்டித் தொகுத்துத் தந்திருக்கிறார். பாராட்டுக்கள். இன்னொரு பக்கம் ஜிப்ரானின் இசையும் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
கிளைமேக்ஸ் காட்சியில் எதிர்பாராத பல திருப்பங்களுடன் முடித்திருப்பது செம டிவிஸ்ட். அரசியல் சூழ்ச்சியால் தந்தையின் கொலைக்கு காரணமானவர்களை பழி தீர்க்கும் மகளின் அதிபுத்திசாலித்தனமான பிளானிங் மர்டரை சஸ்பென்சாக வைத்து இறுதிக் காட்சியில் சபாஷ் போட வைத்துள்ளார் இயக்குநர் கின்ஸ்லின்.
கொலை சம்பவங்களை ஊக்குவித்தல் கூடாதுதான். ஆனால் இப்படி நடந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதுதான் திரைப்படம் என்பதால் இந்த ‘டிரைவர் ஜமுனா’ பல நாயகர்களின் கமர்ஷியல் படங்களுக்கு சவால் விட்டிருக்கும் ஒரு நாயகியின் படமாக நமக்குத் தோன்றுகிறது..!
RATING : 4.5 / 5