நயன்தாராவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டோரா’ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் தாஸ் ராமசாமி என்ற அறிமுக இயக்குநர்.
ஆனால் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்றும் தான் எழுதி வைத்திருந்த ‘அலாவுதீனும் அற்புத காரும்’ என்கிற திரைப்படக் கதைதான் ‘டோரா’வாக உருவெடுத்திருக்கிறது என்று சாட்டிலைட் ஸ்ரீதர் என்பவர் புகார் கூறியிருந்தார்.
இந்த இருவருமே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இது பற்றி புகார் செய்தனர். இந்தப் புகாரை பெற்று விசாரணை நடத்தியது சங்கம்.
விசாரணையின் முடிவில் “இரண்டுமே வேறு வேறு கதைகள். இரண்டு திரைக்கதைகளும் முற்றிலும் மாறுபட்டிருக்கின்றன. எனவே தாஸ் ராமசாமியின் கதையின் மீது சாட்டிலைட் ஸ்ரீதர் உரிமை கொண்டாட முடியாது…” என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது எழுத்தாளர் சங்கம்.