“ஜூலியஸ் சீசரை பார்த்திருக்கீங்களா..?” – இசையமைப்பாளர் தேவாவிடம் கேட்ட ரஜினி

“ஜூலியஸ் சீசரை பார்த்திருக்கீங்களா..?” – இசையமைப்பாளர் தேவாவிடம் கேட்ட ரஜினி

‘பாட்ஷா’ படத்தின் ‘தங்க மகன் இன்று சிங்கநடை போட்டான்’ பாடல் காட்சியில் ‘ஜூலியஸ் சீஸர்’ தோற்றத்தில் ரஜினி நடிக்கவிருந்த சந்தர்ப்பத்தை இப்போது சொல்லியிருக்கிறார் இசையமைப்பாளர் தேவா.

இது பற்றி தேவா பேசும்போது, “பாட்ஷா’ படத்தின் பாடலுக்கான கம்போஸிங்கை பண்ணிக் கொண்டிருந்தேன். அன்றைய நாளில் ‘தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்’ என்ற பாடலுக்கான இசையை அமைத்துக் கொண்டிருந்தேன்.

இந்தப் பாடலுக்கான சிச்சுவேஷனை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா ஸார் சொன்னார். “இந்தப் பாடல் காட்சியில் ரஜினி ஸார் ஜூலியஸ் சீஸர் மாதிரி நடந்து வருவார். அதுக்கேற்றாற்போல் இசையை அமைச்சுக்குங்க…” என்றார். நானும் அதேபோல் பாடலின் இடையிடையே ‘சீஸர்’.. ’சீஸர்’..ன்னு கோரஸா கூப்பிடுற மாதிரி அமைச்சிருந்தேன்.

சுரேஷ் கிருஷ்ணா ஸார் வெளில போயிருந்த சமயத்துல ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி வந்துட்டார். வந்த வேகத்தில இந்தப் பாட்டை முழுசும் கேட்டார். பாடல்ல அந்தக் கோரஸ் வந்தப்பவெல்லாம் ரஜினி ஸார் திரும்பி என்னைப் பார்த்தார். அப்பவே எனக்குப் புரிஞ்சு போச்சு. இது ஸாருக்கு பிடிக்கலை போலிருக்குன்னு..!

பாட்டு முடிஞ்ச பின்னாடி நாங்க ரெண்டு பேரும் வெளில வந்தோம். அப்போ ரஜினி ஸார் என்னிடம், “அதென்ன பாட்டு முழுக்க இடைல, இடைல ‘சீஸர்.. சீஸர்’ன்னு கோரஸ் கேட்டுச்சு?”ன்னார். நான் அப்போ சுரேஷ் கிருஷ்ணா ஸார் சொன்னதை அப்படியே சொன்னார். அதைக் கேட்ட ரஜினி, “ஓஹோ.. ஜூலியர் சீஸரை டைரக்டர் பார்த்திருக்காரா…?” என்றார். எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை. “சரி.. நீங்களாவது பார்த்திருக்கீங்களா?”ன்னு கேட்டார். “இல்ல ஸார். பார்த்ததில்லை”ன்னு சொன்னேன்.

“ஜூலியர் சீஸருக்கு மீசை இருக்காது ஸார். இதுல நான் மீசையோட வந்தா நல்லவா இருக்கும்.? அதோட அந்தக் காலத்து கிரேக்க டிரெஸ்ஸெல்லாம் கைல முக்கால்வாசி தெரியற மாதிரியும்.. மேல் தொடைவரைக்கும்தான் போட்டிருக்குற டிரவுசர் மாதிரியும்தான் இருக்கும். என் கை ரொம்ப ஒல்லியா இருக்கும். அதோட முக்கால்வாசி தொடை தெரியுற மாதிரி டிரெஸ்ஸெல்லாம் போட்டு நான் நடிச்சா நல்லாவா ஸார் இருக்கும்..?” என்றார்.

எனக்கு என்னவோ மாதிரியாகிவிட்டது. “டைரக்டர் சொன்னார் ஸார்.. போட்டுட்டேன்…” என்று சொல்லி சமாளித்தேன்.

பின்பு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா வந்ததும் அவரிடத்தில் ரஜினி ஸார் இதையே சொல்ல.. சுரேஷ் கிருஷ்ணா ஸார்.. சட்டென்று அதை மாற்றச் சொல்லிவிட்டார். பின்புதான் அந்த கோரஸ் குரல்களை, மொத்தமாக நீக்கிவிட்டு இப்போது இருப்பதுபோல் மாற்றினோம்..” என்றார் இசையமைப்பாளர் தேவா.

Our Score