திரையுலகில் மெல்ல தலை தூக்கும் கட்சிகளின் அரசியல் விளையாட்டு..!

திரையுலகில் மெல்ல தலை தூக்கும் கட்சிகளின் அரசியல் விளையாட்டு..!

2011-ம் ஆண்டு, மே 13-ம் தேதி. தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாள். மாலை 3 மணிக்கே அனைத்து முடிவுகளும் தெரிந்துவிட்டன.

அதுவரையிலும் முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி முன்னாள் முதல்வராகி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடுத்த முதல்வராகிறார் என்பதும் புரிந்துவிட்டது.

அன்றைய தினம் மாலைவரையிலும் முதல்வர் கருணாநிதியின் ஆலோசகர்களாக அன்றைய ஆட்சியில் பணியில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அசோக்வரதன்ஷெட்டியும், ராஜமாணிக்கமும்கூட தங்களுடைய ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை.

ஆனால் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு முதல் தேர்தல் எபெக்ட் ராஜினாமாவாக வெளிவந்த செய்தி, திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து இராம.நாராயணனும், செயலாளர் பொறுப்பில் இருந்து சிவசக்தி பாண்டியனும் ராஜினாமா செய்ததுதான்.

fefsi-guhanathan

அடுத்த அரை மணி நேரம் கழித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் அமைப்பான பெப்சி அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் வி.சி.குகநாதன் ராஜினாமா செய்துவிட்டதாக பத்திரிகைகளுக்கு நியூஸ் பறந்து வந்தது.

இதன் தொடர்ச்சியாக அடுத்த முதல்வர் பதவியேற்கும் நாளுக்கு முதல் நாள் 2011, மே 15-ம் தேதி சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்த பிரமுகரான நடிகை குஷ்பு அதுவரையிலும் தான் வகித்து வந்த சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து  விலகுவதாக அறிவித்தார்.

நடந்தது என்னவோ தமிழக சட்டமன்றத் தேர்தல். இதற்கும் திரையுலகத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. ஆனாலும் திரையுலகின் மிக முக்கிய சங்கங்களின் தலைவர்கள் அன்றைக்கே ராஜினாம் செய்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்..? எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதற்கு வால் பிடிப்பவர்கள் மட்டுமே திரையுலகின் சங்கங்களில் பொறுப்புக்களில் இருக்க வேண்டும் என்பதாகவே இது காட்டுகிறது.

sac-1

இராம.நாராயணனின் விலகலுக்குப் பின்பு துணைத் தலைவராக இருந்த எஸ்.ஏ.சி. தலைவர் சீட்டில் வலுக்கட்டாயமாக உட்கார்ந்து ‘எந்திரிக்க மாட்டேன்’ என்று அடம்பிடிக்க.. அதன் பின்பு தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த மியூஸிக்கல் சேர் விளையாட்டு அனைவரும் அறிந்ததே.

இராம.நாராயணனும், வி.சி.குகநாதனும் பயந்ததுபோல அதற்கு பின்பு திரையுலகின் எந்தவொரு சங்கத்திலும் தற்போதைய அ.தி.மு.க. தலைமை மூக்கை நுழைக்கவில்லை. தங்களுடைய ஆதரவாளர்கள்தான் பொறுப்புக்கு வர வேண்டும் என்றும் நினைக்கவும் இல்லை. இப்போதுவரையிலும் ஒதுங்கியே இருக்கிறது.

இதேபோல் தி.மு.க.வும் தங்களது தலைவரை கடந்த கால ஆட்சியின் இறுதிக் காலத்தில் நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஒரு விழாவில் உட்கார வைத்து மூக்கறுத்துவிட்ட கடுப்பில் இருந்த்தால் ‘இராம.நாராயணனே இல்லை.. இனிமேல் நமக்கெதற்கு திரையுலகம்?’ என்று ஒதுங்கிக் கொண்டது.

முன்னாள் முதல்வர் கலைஞரின் பேரனும், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தயாரித்த ‘ஏழாம் அறிவு’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘நீர்ப்பறவை’, ‘வணக்கம் சென்னை’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘நண்பேன்டா’ ஆகிய படங்களுக்கு அனைத்துத் தகுதிகளும் இருந்தும் வரிவிலக்கு கொடுக்கப்படவில்லை.

udhayanidhi stalin-2

இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் உதயநிதி ஸ்டாலின் புகார் கொடுத்தபோது, தலைமைப் பதவியில் இருந்தவர்கள் “என்னங்க ஸார்.. உங்களுக்குத் தெரியாதா..? நாங்க போய் இதையெல்லாம் கேட்க முடியுமா…?” என்று தயங்கியதால் அதற்குப் பின் அவர்களிடத்தில் எதுவும் பேசாமல் இப்போதுவரையிலும் சுப்ரீம் கோர்ட்வரைக்கும் சென்று நீதி கேட்டு போராடி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

இதற்குக்கூட தி.மு.க. தரப்பில் இருந்து சட்டமன்றத்தில் எதிர்ப்புக் குரல், கலைஞரின் அறிக்கை, ஸ்டாலினின் கண்டன பேட்டி என்பதோடு பேச்சை முடித்துக் கொண்டார்கள். சங்கங்களை குற்றம், குறை சொல்லி அறிக்கையோ, பேட்டியோ யாருமே அளிக்கவில்லை உதயநிதி ஸ்டாலின் உட்பட.!

இன்னொரு பக்கம் தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினரான பூச்சி முருகன் நடிகர் சங்கத்தின் கட்டிடம் பற்றி தான் எழுப்பிய சில கேள்விகளால் இன்றைக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலையெழுத்தையே தலைகீழாக மாற்றிவிட்டார்.

sarathkumar-radharavi-chandrasekar-1

அதே தி.மு.க.வைச் சேர்ந்த வாகை சந்திரசேகர் அப்போது சங்கத்தில் பொருளாளாராக இருந்தும், அவரும் இந்தக் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டிருந்தும் பூச்சி முருகனை அவராலும் சமரசம் செய்ய முடியவில்லை. வாகை சந்திரசேகரே தனது கட்சி மேலிடத்தில் இது பற்றி புகார் சொல்லியபோதும், “இது அறிவாலயத்திற்கு அப்பாற்பட்ட விஷயம்..” என்று நறுக்கென்று பதில் வந்ததாம்..!

எப்படியோ இதன் பின்னணியில் தி.மு.க. தலைமையின் மெனளமே பூச்சி முருகனுக்கு தூண்டுகோலாக இருப்பதை உணர்ந்துதான் சரத்குமாரும் விடாமல் எப்படியாவது கடைசிகட்டத்திலாவது இதை உணர்ந்து அ.தி.மு.க. தலைமை தனக்கு உதவி செய்யும் என்று எதிர்பார்த்தார்.

தி.மு.க. சார்பில் யாராவது இருந்தாலோ, அல்லது வெளிப்படையாக உதவி செய்தாலோ அது சரத்குமாருக்கு உதவி செய்வதுபோலாகிவிடும் என்பதால் ஒரு கட்டத்தில் வாகை சந்திரசேகரை நடிகர் சங்கத்தில் இருந்து விலகி வந்துவிடும்படி அறிவாலயம் உத்தரவிட்டது.

அதுவரையிலும் அமைதி காத்து கூட்டணியாக அமர்ந்திருந்தவர்… ஜெயல்லிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் குன்ஹாவின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் நடத்திய போராட்டம்.. கண்டன அறிக்கைகள்.. பின்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை வரவேற்று நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை.. பாராட்டுரைகள்.. இதற்குப் பின்பே வாகை சந்திரசேகர் நடிகர் சங்கத்திலிருந்து தனது கட்சியின் கட்டளைப்படி விலகினார்.

பூச்சி முருகன் இப்போதுவரையிலும் சரத்குமாரையும், ராதாரவியையும் மட்டுமே தாக்குகிறார். கண்டிக்கிறார். பேசுகிறாரே தவிர.. அப்போதைய காலக்கட்டத்தில் பொருளாளர் என்கிற முக்கியப் பதவியில் இருந்த வாகை சந்திரசேகரை எதுவும் சொல்லாமல் இருப்பதன் அரசியலை இங்கே நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

இதுவரையிலும் வெளிப்படையாக திரையுலக அரசியலுக்குள் கால் வைக்காத தி.மு.க. இப்போது மெல்ல, மெல்ல தன் மெனளத்தைக் கலைத்து உள்ளே வருவதாக தற்போதைய சில சம்பவங்கள் உணர்த்துகின்றன.

பூச்சி முருகன் செயற்குழுவில் ஜெயித்தவுடன் அவருடைய தானைத் தலைவரை சந்தித்து ஆசி பெற்றார். கலைஞரும் அவருக்கும் வாழ்த்து சொல்லி புதிய நிர்வாகிகளுக்கு “தோற்றவர்களுடன் கலந்து ஆலோசித்து நண்பர்களாக செயல்படுங்கள்…” என்று வாழ்த்துரையும் வழங்கியிருக்கிறார்.

ஆரம்பம் நன்றாகத்தானே இருக்கிறது என்று நினைத்தபோது திடீரென்று தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகனின் ஒரு அறிக்கை, இதையும் தாண்டி தி.மு.க.வின் திரையுலக ஆர்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

j.anbalagan-2

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவின் அளவு கடந்த ஆளும் கட்சியின் பாசத்தைக் கண்டித்திருக்கும் ஜெ.அன்பழகன், தாணு தனது பதவியைப் பயன்படுத்தி பெரிய ஸ்டார் நடிகர்களின் கால்ஷீட்டை வாங்கி பிழைத்து வருகிறார் என்று வெளிப்படையாகவே குற்றம்சாட்டியிருக்கிறார். கடைசியாக தாணு தி.மு.க.வில் இருந்ததையும், பின்பு ம.தி.மு.க.வில் இருந்ததையும், இப்போது அ.தி.மு.க.வில் இருக்கிறாரென்றும், நாளை எங்கே போவாரோ என்று அரசியல்தனமாக கேட்டிருக்கிறார் அன்பழகன்.

இந்த அறிக்கை நிச்சயமாக அறிவாலயத்தின் உத்தரவோ அல்லது கடைக்கண் பார்வையோ இல்லாமல் வெளியாகியிருக்காது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. வெறும் தயாரிப்பாளர் என்கிற பார்வையையும் தாண்டி தாணுவின் அரசியல் வாழ்க்கையையும் சீண்டியிருப்பதால் கட்சித் தலைமையின் எண்ணத்தைத்தான் இங்கே பிரதிபலித்திருக்கிறார் அன்பழகன் என்கிறார்கள் அரசியல் நிருபர்கள்.

இந்த நேரத்தில், நடிகர் சங்கத் தேர்தலில் நடுநிலைமையாக நிற்காமல் சரத்குமார் அணிக்கு ஆதரவு அளித்தது மிகப் பெரிய தவறென்று செயற்குழுவில் சுட்டிக் காட்டிய தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, பதில் தனக்கு சாதகமாக இல்லையென்பதால் மிக கோபமடைந்து முன்னாள் தலைவர் கேயாருக்கு எதிராக தாணு என்ன செய்தாரோ, அதையே இப்போது தாணுவுக்கு எதிராக தான் செய்யப் போவதாக களத்தில் குதித்துள்ளார்.

k-e-gnanavelraja1

அவருடைய அலுவலகத்தில் சென்ற வாரம் கூடிய தாணுவுக்கு எதிரான தயாரிப்பாளர்கள் அடுத்த மாதத் துவக்கத்தில் பொதுக்குழுவைக் கூட்டும்படி கோரிக்கை வைக்கவிருக்கிறார்கள். அந்தப் பொதுக்குழுவில் தலைவர் தாணு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அதை நிறைவேற்ற… இப்போதே அதற்கான வேலைகளை துவக்கிவிட்டார்கள்.

தாணுவுக்கும் இது தெரியாமல் இல்லை. இந்த நேரத்திலும் சங்கத்தை முழு மூச்சாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக இதுவரையிலும் நடத்தி வருவதால், கடைசி நேரத்திலாவது தனக்கு அ.தி.மு.க. அரசின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.

இந்த நேரத்தில்தான் தாணுவின் எதிர்ப்பாளர்களுக்கு உரம் ஊட்டுவதை போல தி.மு.க. சட்டமன்ற உறுப்பனர் ஜெ.அன்பழகனின் அறிக்கையும் கிடைத்திருக்கிறது. இனி அவரும் தாணுவுக்கு எதிர்ப்பாகத்தான் செயலாற்றப் போகிறார் என்பது கண்கூடு. இதன் மூலம் மறைமுகமாக தி.மு.க. தயாரிப்பாளர் சங்கத்தில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முயல்கிறது என்பது பட்டவர்த்தனமான உண்மை.

தி.மு.க. ஆதரவு இருந்தால் நிச்சயம் அ.தி.மு.க. அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. ஆதரவுக் கரம் நீட்ட முனையும். அப்போது உண்மையாகவே அரசியல் கொள்கைகளே இல்லாமல் இரண்டு அரசியல் கட்சிகளின் பக்கமும் நின்று தலையாட்டும் அளவுக்கு தயாரிப்பாளர்களுக்குள் மனஸ்தாபம் வரப் போகிறது.. இது நிச்சயம் திரையுலகத்திற்கு ஆரோக்கியத்தைத் தரவே தராது.

அளவுக்கதிமான ஜால்ராவும், மூர்க்கத்தனமான எதிர்ப்பும் எந்தக் காலத்திலும் சங்கங்களுக்கு உதவாவது. அரசியல் கொள்கைகளில் நடுநிலைமை வகித்து, சங்கத்தின் வளர்ச்சிக்கு மட்டும் பாடுபடுவதே தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் கடமை. கலையுலகம் என்ற சொல்லுக்கும் அதுதான் உண்மையான அர்த்தமாக இருக்கும்..!

புரிந்து கொண்டு செயலாற்றுங்களேன்..!

Our Score