‘லிங்கா’ படம் நஷ்டமே என்று இன்றைக்கு ஒப்புக் கொண்டுள்ளார் ‘லிங்கா’ படத்தை வாங்கி விநியோகம் செய்த வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தயாரிப்பாளர் சங்கத்தின் வரும்கால செயலாளருமான அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா.
‘லிங்கா’ படத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்டும் பிரச்சினையில் ரஜினி தலையிடக் கோரி வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை நடந்த சில விநியோகஸ்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவடைந்த ஒரு மணி நேரத்தில் வடபழனி ஆர்.கே.வி.ஸ்டூடியோவில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும், டி.சிவாவும்.
இந்தக் கூட்டத்தில் சிவா பேசும்போது, “வெளில என்னை அடிக்கிறதுக்காக மதுரை ‘தங்கரீகல்’ ரமேஷ் உட்பட சில விநியோகஸ்தர்கள் காத்துக்கிட்டிருக்காங்க. இப்படியொரு இக்கட்டான சூழ்நிலைல உங்களை சந்திக்கிறேன்..” என்று அதிர்ச்சியைக் கூட்டினார்.
தொடர்ந்து பேசும்போது, “இப்படியொரு கூட்டம் நடக்கவே கூடாது. ஆனால் நடக்கும்படி ஆகிவிட்டது. ‘லிங்கா’ படம் ரிலீஸாகி நான்காவது நாளே திருச்சி பகுதி விநியோகஸ்தர் சிங்காரவேலன் இப்படியொரு பேட்டியை கொடுத்துட்டார். அதைப் பார்த்தவுடனேயே நான் உடனே சிங்காரவேலனுக்கு போன் செஞ்சு ‘என்ன சிங்காரம்.. இப்படியெல்லாம் பேசுறீங்க. கொஞ்சம் அமைதியா இருங்க.. படம் ரிலீஸாகி 4 நாள்தான் ஆகுது. அதுக்குள்ள இப்படி நீங்களே பிரச்சினையை கிளப்பினா எப்படி?’ன்னு கேட்டேன்.
‘இல்ல ஸார்.. ஏதோ ஒரு எமோஷன்ல அப்படி பேசிட்டேன்’னு சொன்னார். நான் உடனே இதை வெங்கடேஷன் ஸார்கிட்டேயும், ரஜினி ஸார்கிட்டேயும் சொல்லிட்டேன். ஆனா மறுபடியும் சிங்காரவேலன் இதே பிரச்சினையை தினமும் கிளப்ப ஆரம்பிச்சாரு. எனக்கும் சங்கடமா போச்சு. தயாரிப்பாளர் ஸாரும், ரஜினி ஸாரும் இது பத்தி நிறைய என்கிட்ட கேட்டுக்கிட்டேயிருந்தாங்க..
அப்போ மறுபடியும் சிங்காரவேலன்கிட்ட ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டுக்கிட்டேன்.. ‘மதன் ஸார்.. இப்போ ஊர்ல இல்ல. 10-ம் தேதிதான் வர்றாரு. அவர் வந்தவுடனேயே உக்காந்து பேசி நம்ம பிரச்சினையை தீர்த்துக்கலாம்.. கொஞ்சம் பொறுமையா இருங்க’ன்னு சொன்னேன்..
ஏனோ அவர் அதுக்கு மேல கேக்க மாட்டேன்னுட்டாரு. நான் பல முறை, பலவிதங்களில் அவர்கிட்ட பேசி பார்த்தேன். நேத்து ராத்திரிகூட அவங்ககிட்ட பேசினேன். ‘இன்னிக்கு உண்ணாவிரதம் நடக்காது ஸாரு’ன்ற மாதிரியேதான் பேசினாங்க. பட்.. அதை நடத்திக் காட்டிட்டாங்க.
அதுல எந்த அரசியலும் இல்லைன்னுதான் நான் நினைக்கிறேன். ஏன்னா சீமான்கூட ரஜினி ஸார் இதுல தலையிட்டு நல்ல முடிவை பெற்றுத் தரணும்னுதான் பேசியிருக்காரு. வேற எதுவும் பேசலை. ஸோ.. இதுல ரஜினி ஸாருக்கு எதிரான பாலிடிக்ஸ் இருக்கிறதா நான் நினைக்கலை.
சிங்காரவேலன் பின்னாடி மத்த விநியோகஸ்தர்கள் சேர்ந்தது ஏன்னா சிங்காரவேலனோட நடவடிக்கைகளை பார்த்துட்டு அவர் பின்னாடி போனால் உடனே நஷ்டஈடு கிடைச்சிரும் போலிருக்குன்னு நினைச்சிட்டாங்க.. இதுதான் காரணம்.
சிங்காரவேலனின் பேச்சு மிகவும் மோசமானதாக இருந்தது. அவர் ரஜினி ஸாரை பத்தி பேசினதை நான் வெளிலேயே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு கேவலமா பேசினார்.
பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கொலை செய்ததுபோல் லிங்கா படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டார். ரஜினியை பற்றி அவதூறாகப் பேசி அவர் மனதையும் நோகடித்துவிட்டார்.
ரஜினி ஸார் நடித்த 150 படங்களில் 145 படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்த ஒரே நடிகர் இந்தியாவிலேயே ரஜினி ஸார்தான்.
அதேபோல் தமிழ் சினிமால, ஏன் இந்திய சினிமாலேயே நஷ்டத்தை ஈடுகட்ட பணத்தைத் திருப்பிக் கொடுத்த ஒரே நடிகர் அவர்தான். ‘பாபா’, ‘குசேலன்’ படத்துல நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களை திருப்பிக் கூப்பிட்டு அவங்க சந்தோஷப்படுத்துற மாதிரி ஒரு தொகையைக் கொடுத்து அனுப்பி வைச்சவர் ரஜினி. அவரையே இப்படி பேசினால் எப்படி..?
இந்தப் பிரச்சினையை எப்படி பேசணுமோ அப்படி பேசித் தீர்க்கணும். இதை வெளில சொல்லி இப்படித்தான் பேசணுமா..? நான் திரும்பத் திரும்ப அவங்ககிட்ட சொன்னது, ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. மதன் ஸார் வந்தவுடனே பேசித் தீர்த்துக்கலாம்னு’தான்.. ஆனா சிங்காரவேலன் ஏதோ உள்நோக்கத்தோட தனக்கு புகழும், பெயரும் கிடைக்கணும்னோ என்னவோ இதை யூஸ் பண்ணியிருக்காருன்னு நான் நினைக்கிறேன்.
இவரோட உள் நடவடிக்கையை பார்த்துதான் அவர் உறுப்பினராக இருக்கும் விநியோகஸ்தர்கள் சங்கமே இதில் தலையிட மறுத்துவிட்டது. சிங்காரவேலன் இல்லீகலா அப்ரோச் பண்றாருன்னு மற்ற விநியோகஸ்தர்களும் புரிஞ்சுக்கிட்டு அவங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காம தள்ளி நிக்குறாங்க.
‘லிங்கா’ படம் நஷ்டம்தாங்க. அதுல எந்த சந்தேகமும் இல்லை. அதுலேயும் மிகப் பெரிய நஷ்டம் யாருக்குன்னா அது வேந்தர் மூவிஸுக்குத்தான். படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களின் நிலைமை எங்களுக்கும் புரியுது. அவங்களுக்கு நிச்சயமா நாங்க நஷ்டஈடு கொடுக்கணும். கொடுப்போம். அது உறுதி. இப்படியொரு மனநிலைலதான் நாங்களும் இருந்தோம்.
தயாரிப்பாளர்கிட்ட பேசி அது பத்தி ஒரு முடிவுக்கு வந்து அவர்கிட்ட கான்பன்சேஷனா ஒரு தொகையைக் வாங்கி விநியோகஸ்தர்களுக்கு கொடுத்து அவங்க நஷ்டத்தை சரிகட்டத்தான் நாங்களும் நினைச்சிருக்கோம்.
இந்த நேரத்துல எங்களோட நல்லெண்ணத்தையே புரிஞ்சுக்காம இப்படி அவதூறா, ஆபாசமா, ரஜினி ஸாரை ரொம்ப கேவலமா சிங்காரவேலன் பேசிக்கிட்டேயிருக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு. அவரை யாரோ தப்பா வழிநடத்துறாங்கன்னு தெரியுது..
நடந்துவிட்ட சம்பவங்களுக்காக சிங்காரவேலன் உட்பட மற்ற விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் வெங்கடேஷ் மற்றும் ரஜினி ஸாரை பற்றி பேசியதற்கெல்லாம் வேந்தர் மூவிஸ் சார்பில் நான் பகிரங்கமா மன்னிப்பு கேட்டுக்குறேன். தயாரிப்பாளர் வெங்கடேஷ் ஸார் பெரிய மனதோட எங்களை மன்னிச்சு விநியோகஸ்தர்களின் குறையைத் தீர்த்து வைக்கணும்னு வேண்டிக்கிறேன்..” என்றார் சிவா.
‘லிங்கா’ படம் சாதா வெற்றியல்ல; அமோக வெற்றி என்று ரஜினி ரசிகர்கள் சொல்லி வரும்வேளையில் அதன் விநியோகஸ்தரே, படத்தின் வசூல் கணக்குப்படி தோல்வி என்பதை ஒப்புக் கொண்டிருப்பது ஆச்சரியமானதுதான். பாராட்டுக்குரியது.
இந்தப் பிரச்சினையை முன்பேயே அவர்களை நேரில் அழைத்து பேசித் தீர்த்திருக்கலாம். அல்லது வேந்தர் மூவிஸே இதனை அறிக்கையாக வெளியிட்டு அவர்களை அமைதிப்படுத்தியிருக்கலாம்.
சிங்காரவேலன் தனது பேட்டியில் “யாரிடம் கேட்டாலும் இன்னொருவரை கை காட்டுகிறார்கள். அதனால்தான் இனிமேல் நாங்கள் யாரிடம் கேட்பது என்று தெரியாமல்தான் அடுத்தக் கட்ட போராட்டத்தில் குதித்தோம்..” என்று கூறியிருக்கிறார். டி.சிவாவோ தான் தினமும் சிங்காரவேலனுடன் பேசி சமாதானப்படுத்தி வந்ததாகச் சொல்கிறார். இதுவே குழப்பமாக இருக்கிறது..!
இந்த பிரச்சினைக்காக தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரையே தாக்கும் அளவுக்கு துணிவுடன் சில விநியோகஸ்தர்கள் அரங்கத்திற்கு வந்ததை கேள்விப்பட்டவுடன் சினிமாவுலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை நினைத்து பயமாக இருக்கிறது.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து பார்த்ததில் அனைவருமே எஸ்கேப். செய்தியறிந்து விரைந்து வந்த காவல்துறையை பார்த்தவுடன் அந்த விநியோகஸ்தர்களின் படை சிதறி ஓடிவிட்டதாம்.
எப்படியோ.. போனது போகட்டும். நஷ்டஈட்டை சரி கட்டுவோம் என்று வேந்தர் மூவிஸ் இப்போது அறிவித்திருப்பதே மிகப் பெரிய விஷயம். இந்த நல்ல வாய்ப்பை சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்கள் பயன்படுத்திக் கொண்டு, அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதுதான் சினிமாவுலகத்துக்கு நல்லது.









