தமிழ்த் திரையுலகத்தில் நடக்கவிருந்த சங்கங்களின் தேர்தல் கொரோனா பயத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் 25-ம் தேதியன்று நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தேர்தலில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் தலைமையில் ஒரு அணியும், இயக்குநர் கே.பாக்யராஜின் தலைமையில் ஒரு அணியும் மோதுகின்றன.
தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடி வருவதால் ஒரு இடத்தில் 50 நபர்களுக்கு மேல் கூட்டம் கூடக் கூடாது என்று தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் 1100 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றால் பெரும் கூட்டம் கூட வாய்ப்பு உண்டு என்பதை அறிந்த சென்னை மாநகராட்சியின் நோய்த் தடுப்புத் துறை இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இதேபோல் சென்னை மாநகர காவல்துறையும் இந்த நிகழ்ச்சிக்கு பந்தோபஸ்து வழங்க மறுத்துவிட்டது.
இதையடுத்து இந்தத் தேர்தல் காலவரையின்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும்வரையிலும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சங்கத்தின் துணைத் தலைவர்களான இயக்குநர்கள் மாதேஷும், எழிலும் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வார்கள் என்று தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கும் வரும் 27-ம் தேதியன்று தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு இந்தத் தேர்தலுக்கும் சென்னை மாநகராட்சியும், சென்னை மாநகர காவல்துறையும் அனுமதி மறுத்ததை அடுத்து, இந்தச் சங்கத்தின் தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.