full screen background image

“வடிவேலு தங்கமான மனுஷன்..” – உருகுகிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்

“வடிவேலு தங்கமான மனுஷன்..” – உருகுகிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்

சென்ற சட்டமன்றத் தேர்தலின்போது அப்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ததன் பலனாக கடந்த 4 ஆண்டு காலமாக அஞ்ஞாதவாசத்தில் இருக்கும் நடிகர் வடிவேலு, இனிமேல் ஹீரோக்களை காப்பாற்றும் காமெடி பீஸாக நான் நடிக்கவே மாட்டேன் என்று உறுதிபட சொல்லிவிட்டார்.

நடித்தால் தனி ஹீரோதான் என்ற எண்ணத்தில் ‘தெனாலிராமன்’ படத்தில் நடித்தார். பக்கம், பக்கமான வசனங்கள் மற்றும் நகைச்சுவையே இல்லாத காட்சியமைப்புகள்.. சுவாரஸ்யம் குன்றிய திரைக்கதை இவற்றால் அந்தப் படம் அதிகம் பேசப்படாமல் போனது.

vadivelu-thenaliraman

இதன் பின்பும் தனி ஹீரோதான் என்று தனி ஆவர்த்தனம் பாடியே வருகிறார் வடிவேலு. இப்போது மீண்டும் ‘எலி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக சதா நடிக்கிறார். வில்லனாக பிரதீப் ராவத் நடிக்கிறார்.  வித்யாசாகர் இசையமைக்கிறார். சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி.சதீஷ்குமார் என்பவர் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கடந்த பிப்ரவரி 5-ம் தேதி சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போதும் நடைபெற்று வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் வடிவேலு கலந்து கொண்ட ஒரேயொரு பத்திரிகையாளர் சந்திப்பு ‘தெனாலிராமன்’ படத்தின் பிரஸ்மீட்டுதான். இப்போது ‘எலி’ படத்திற்கும் அந்த நேரம் காத்திருந்தாலும், அதற்கு முன்பாக படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளன் மூலமாக வெள்ளோட்டம் பார்த்திருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த படத்தின் இயக்குநர் யுவராஜ் எலி படம் பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதன் தொகுப்பு இங்கே :

படத்தின் கதைக் கரு என்ன..?

Eli Movie Stills (9)

ஒரு கொள்ளைக் கூட்டத்தில் நல்ல போலீஸாக இருக்கும் வடிவேலு மாட்டிக் கொண்டால் என்னவெல்லாம் நடக்கும் என்று யோசித்து திரைக்கதை அமைத்தோம். நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு நகைச்சுவை தெறித்து வந்தது.  இதையே கதைக் கருவாக வைத்துக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

படத்திற்கு ‘எலி’ என்று ஏன் பெயர் வைத்தீர்கள்..?

Eli Movie Stills (2)

படத்தில் வடிவேலுவின் கேரக்டர் அப்படி. அதனையொட்டித்தான் ‘எலி’ என்று வைத்திருக்கிறோம். பல நல்லவர்கள் மத்தியில் ஒரு கெட்ட ஆள் இருந்தால், அவரை ‘கறுப்பு ஆடு’ என்று சொல்லுவார்கள். அதுபோல, திருடர்களுக்கிடையே ஒரு போலீஸ் உளவாளி இருந்தால், அவரை ‘எலி’ என்று அழைப்பார்கள். திருடர்களைப் பிடிப்பதற்காக அவர்களது கூட்டத்துக்குள் ஊடுருவும் போலீஸ் உளவாளி கதாபாத்திரத்தில் வடிவேலு இந்தப் படத்தில் நடிக்கிறார். இதனால் ‘எலி’ டைட்டில்தான் பொருத்தம் என்று நினைத்து அந்தப் பெயரையே வைத்துள்ளோம்.

இதுவும் பீரியட் படமா..?

ஒருவகையில் அப்படித்தான். 1960-களின் பின்னணியில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகிறது. ஒரு கொள்ளைக் கூட்டத்தில் உளவாளியாக நுழையும் வடிவேலுவை அவர்களே ஒரு கட்டத்தில் கண்டுபிடித்து விடுகிறார்கள். வடிவேலுவை அவர்கள் துரத்த, அவரோ பார்க்கின்ற போதெல்லாம் எலியைப் போலவே ஓடி எஸ்கேப் ஆகி விடுவார்.  ஒரு எலியை அடிக்கிறது எளிதான விஷயமா என்ன..? அதற்குள் இருக்கிற இடமே துவம்சமாயிருமே.. இதுதான் மிகப் பெரிய நகைச்சுவையான காட்சிகளாக இருக்கும். படத்தில் அவருக்கு சண்டைக் காட்சியெல்லாம் இருக்கின்றன. ஆனால் அதுவும் காமெடியாகத்தான் இருக்கும்.

‘தெனாலிராமன்’ல எல்லாரும் எதிர்பார்த்த காமெடியும் இல்லையே..? படமும் ஓடலியே..?

மீடியாக்களில் ‘தெனாலிராமன்’ ஓடலேன்னுதான் எழுதுறாங்க. ஆனால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்னு எல்லா தரப்பினருக்கும் லாபத்தைச் சம்பாதிச்சு கொடுத்த படம் அது. ஏன் இப்படி பேசுறாங்கன்னு புரியல. நல்ல கருத்துக்களை அதில் சொல்லணும்னுதான் வடிவேலு சார் ஆசைப்பட்டார். அதனால்தான் அது முழு நீள காமெடி படமா நாங்க தரல. ஆனால், இப்போ இந்த ‘எலி’, படத்தில் எல்லா காட்சிகளும் விழுந்து, விழுந்து சிரிக்கிறவிதமாத்தான் இருக்கும்.

தெனாலிராமன் மாதிரியான வசனங்கள்தானா..?

இதில் அப்படியில்லை. இதுவரை வடிவேலு ஹீரோவா நடிச்ச படங்கள் எல்லாமே சரித்திர காலப் படங்களாகவே இருந்ததால், பேச்சுத் தமிழில் இல்லாமல் அப்போதைய காலக்கட்ட தமிழில் வசனங்கன் பேசினார்.. இந்தப் படம் முன்பே சொன்னது போல 1960-களில் நடைபெறும் ஒரு  சமூகக் கதை. அதனால அவருக்கே உரிய பாணியில் எப்போதும் போலான இயல்பான தமிழில்தான் பேசியிருக்கிறார்.

அதோட 1960-கள்லதான் தமிழ்நாட்ல சாதாரணமா பேசும்போது ஆங்கில வார்த்தைகளின் கலப்போட பேசுற பழக்கம் ஆரம்பமமாச்சி. ஒரு வாக்கியம் பேசினாங்கன்னா முதல் வார்த்தையும், கடைசி வார்த்தையும் ஆங்கிலத்துல இருக்கும். அப்படி பேசும் வசனங்களில் ஒரு சில ஆங்கில வார்த்தைகளை வடிவேலு சார் அவருக்கே உரித்தான பாணியில பேசி நடிச்சிருக்காரு.

சதா எப்படி இதில் ஹீரோயினாக நடிக்க ஒத்துக் கொண்டார்..?

Eli Movie Stills (5)

நடிகை சதாவின் சிரிப்பு எனக்குப் பிடிக்கும். அதனால், ‘தெனாலிராமன்’ படத்திலேயே அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். முடியவில்லை. இப்போது ‘எலி’யில் அவர் நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

வடிவேலு ஏற்கனவே அசின், தமன்னா, ஸ்ரேயா, நயன்தாரான்னு பல முன்னணி ஹீரோயின்கள்கூட நடிச்சிருக்காரு. அசின், தமன்னாகூட டூயட்டே பாடிருக்கார். இதையெல்லாம் சதாகிட்ட சொன்னேன். அவங்களும் கதையைக் கேட்டுட்டு கதை பிடிச்சதால ஓகேன்னு நடிக்க வந்தார். ஆனா இதுல அவங்க ரெண்டு பேருக்கும் டூயட் இல்லை.

படத்தின் ஸ்டில்ஸை பார்த்தால் அப்படி தெரியலையே..? ஆடின மாதிரிதானே தெரியுது..?

Eli Movie Stills (4)

கொள்ளைக் கூட்டம் என்றால், அங்கு கிளப் டான்ஸ் ஆடும் பெண் கதாபாத்திரம் ஒன்று நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட கிளப் டான்ஸ் ஆடும் நாயகியாக சதா நடிக்கிறார். உளவாளியாக அங்கே வரும் வடிவேலுகூட ஆடிப் பாடுவதுபோல ஒரு பாடல் காட்சி உண்டு. அதுதான் அந்த ஸ்டில்ல நீங்க பார்த்த காட்சி..

1960-களில் வந்த ஏதாவது ஒரு படத்தின் சாயல் இதுல இருக்குமா..?

இந்தப் படம் பழைய படங்களை கிண்டலடிக்கிற மாதிரியோ, ஸ்பூப் படமோ இல்லை. பழைய படங்கள்ல இருந்து கடத்தல்ங்கற ஒரேயொரு விஷயத்தை மட்டும்தான் எடுத்திருக்கோம். அந்த காலத்துல நடந்த அரசியலையோ, மத்த விஷயங்களையோ தொடவேயில்லை.

இந்தப் படத்துக்காக வடிவேலு சார் நிறையவே உழைச்சிருக்காரு. அவரோட நடை, உடை, பாவனை எல்லாத்தையுமே ஒரு ‘எலி’ எப்படி பண்ணுமோ அப்படியே அவரோட உருவத்துல கொண்டு வந்திருக்காரு.

இப்போ கிராமங்களே மாறிட்டதால 1960-ம் வருஷத்தோட தோற்றத்தை வெளிப்புற இடங்கள்ல கொண்டு வர முடியலை. அதனால் பல செட்டுகளை பிரம்மாண்டமான செலவில் அமைத்து படமாக்கியிருக்கிறோம். இதற்கு கலை இயக்குநர் தோட்டாதரணியின் ஒத்துழைப்புதான் முக்கியக் காரணம்.

பாடல்கள் எப்படி..?

Eli Movie Stills (3)

தன் குருநாதர்கள் வாழ்ந்த காலத்துக் கதையாக இருப்பதால் இசையமைப்பாளர் வித்யாசாகர் அதனை நினைவுபடுத்தும் வகையில் அற்புதமாக இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். அவர் இசையில் மூன்று பாடல்கள் இருக்கின்றன, வடிவேலுவின் அறிமுகப் பாடல் ஒன்று, ‘கிளப் சாங்’ ஒன்று, டூயட் ஒன்று என்று மூன்றுமே பட்டையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை.

விஜய் இப்போ நடிக்கிற படம் ‘புலி’. அவருக்குப் போட்டியாத்தான் ‘எலி’ என்று பெயர் வைத்தீர்களா..?

அதெல்லாம் இல்ல ஸார். நாங்கள் முதலிலேயே ‘எலி’ என்ற டைட்டிலை முடிவு செய்து பதிவு செய்துவிட்டோம். எங்களுக்குப் பிறகுதான் அவர்கள் ‘புலி’ என்று வைத்தார்கள். அதனால், நியாயமா நீங்க அவங்ககிட்டதான், ‘எலி’க்குப் போட்டியா ‘புலி’ன்னு பெயர் வைச்சீங்களா?’ன்னு கேக்கணும்.

‘தெனாலிராமன்’ படத்துலேயே வடிவேலுவின் டாமினேட் அதிகமா இருந்ததாக ஒரு செய்தி பரவியதே..? வடிவேலுவை எப்படி சமாளிச்சீங்க..?

Eli Movie Stills (7)

யார் ஸார் இப்படியெல்லாம் கிளப்பிவிட்டது..? வேற எந்த டைரக்டர்கிட்டேயும் இப்படி கேட்டிராதீங்க ஸார்.. வடிவேலு ஸார் தங்கமான மனுஷன். போன வருஷம் ‘தெனாலிராமன்’, இப்ப ‘எலி’ என தொடர்ந்து ரெண்டு, மூணு வருஷமா நான் வடிவேலு சார் கூடத்தான் டிராவல் ஆயிக்கிட்டிருக்கேன். அவரை வெச்சு இப்ப ரெண்டாவது படம் பண்றேன். அப்படி எனக்கு அவர் டார்ச்சர் கொடுத்திருந்தால் நான் எப்படி இந்தப் படத்தை அவரை வைத்து இயக்குவேன்..?  அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. அது வெறும் வதந்திதான்..

உண்மை என்னன்னா வடிவேலு ஒரு அற்புதமான மனிதர். அவரை மாதிரியான ஒரு சௌகரியமான நடிகர் எனக்கு கிடைக்க மாட்டாருன்னே தோணுது. டைரக்சன் டிபார்ட்மெண்ட்ல அவர் எப்பவுமே தலையிடுறதில்ல. ரொம்பவும் சுதந்திரம் கொடுப்பார்.

ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொருவிதமாக நடித்துக் காட்டி, எது நல்லா இருக்குன்னு கேட்பார். இவ்வளவு அனுபவம் வாய்ந்த ஒரு நடிகர், வளர்ந்துவரும் என்னைப் போன்ற அறிமுக இயக்குநரிடம் இவ்வளவு எளிமையாக நடந்து கொள்வது எனக்கே ஆச்சரியமா இருக்கு.

நைட்டு ரெண்டு மணி, மூணு மணிக்கெல்லாம் போன் பண்ணி ‘யுவா நான் இப்படி ஒரு சீன் யோசிச்சேன். சொல்லவா?’ன்னு கேட்பார். நான் ஒரு சீனை யோசிச்சு வெச்சிருப்பேன். அவரோ தன்னோட பாடி லேங்குவேஜுக்கு ஏத்த மாதிரி ஒரு விஷயத்தை யோசிச்சு ‘இப்படி வெச்சுக்கலாமா?’ன்னு கேட்பார். அது நாம யோசிச்சதைவிட பெட்டரா இருக்குன்னு எனக்குத் தெரியும். அப்புறம் அதை எப்படி நான் தவிர்க்க முடியும்..?

எந்நேரமும் படத்தை இன்னும் நல்லா கொண்டு வரணுமேன்ற எண்ணம்தான் அவருக்குள்ல இருக்கு.. அவரோட இத்தனை வருஷத்தோட அனுபவங்கள்ல இருந்து சினிமாவைப் பத்தி நானும் நெறைய கத்துக்கிட்டிருக்கேன். அப்படிப்பட்ட அவரைப் போய் தப்பா எழுதாதீங்க. அவர் ஹீரோவாகக் கிடைத்தது என் பாக்கியம். இன்னும் 25 வருடங்களுக்கு அவரை மட்டுமே இயக்க வேண்டும் என்றாலும் நான் சந்தோஷத்துடன் அதைச் செய்வேன்..!” என்று சொல்லி முடித்தார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.

இதைக் கேட்டுவிட்டு மூத்த பத்திரிகையாளரான அந்தணன், “இன்னும் 2 வருஷம் கழிச்சு இதைச் சொல்லுங்க. பார்ப்போம்..” என்று சாதாரணமாக அடித்துவிட, கூட்டமே கலகலத்தது..!

Our Score