full screen background image

“படத்தின் தோல்விக்காக கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள்…” – இயக்குநர் வசந்தபாலனின் வருத்தம்..!

“படத்தின் தோல்விக்காக கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள்…” – இயக்குநர் வசந்தபாலனின் வருத்தம்..!

‘காவியத்தலைவனு’க்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களால் அதிகம் வருத்தப்பட்டிருக்கும் இயக்குநர் வசந்தபாலன், அது பற்றி மனம் வருந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பது இது :

ஒரு திரைப்படத்தின் வெற்றி எப்படி முடிவாகிறது என்று தெரியுமா நண்பர்களே..? திங்கள்கிழமை காலைக் காட்சி ‘ஹவுஸ்புல்’ ஆவதை வைத்து..! எத்தனை கடினமான முரண்பாடுகள்.. சிக்கலான ஏற்பாடுகள்..?

அனைத்து பள்ளிக்கூடங்களும், அலுவலகங்களும், வேலை நிறுவனங்களும் வியாபார தளங்களும், கல்லுரரிகளும் திறந்து ஒரு திரும்பி வர முடியாத வேலைப் பளுவில் அனைவரும் சிக்கிக் கொள்ளும் அந்தக் காலையில்… வயிற்றில் நெருப்பு எரிய அந்த படத்தின் இயக்குநர் மட்டும் ‘அந்த திங்கள்கிழமையில் தன் படத்தின் காலைக் காட்சி முழுதாக நிறைய வேண்டும்’ என்று வேண்டுவது எந்த செவுட்டு தெய்வத்தின் காதில் கேட்கும்..?

வாழ்க்கையை வெறுத்து மதுவின் புராதான சுவையுடன், அவன் மயங்கி கிறங்கி கெடக்கும்போது, ‘படம் நல்லாயிருந்துச்சு awesome’ என்றொரு எஸ்.எம்.எஸ். வரும். பேஸ்புக்கில் யாராவது பாராட்டுவார்கள். யாராவது கழுவி ஊற்றுவார்கள். அதற்கு ஆயிரம் லைக்குகளும், பத்து கமெண்டுகளும் வரும். அது பாம்பின் விஷத்தைபோல பத்தாயிரம் முறை ஷேர் செய்யப்படும்.

தான் மதிக்கும் பிரபல பத்திரிக்கை ஏதோ ஒரு அரசியல் ஏற்பாட்டின் முக்கிய ஆடுகளத்தில் அவன் இல்லாமல் போனதால்.. நிறைய பேசிவிட்டால்… மிக குறைந்த மதிப்பெண் வழங்கி அவனை பெயிலாக்கும்.

யாரென்று தெரியாத விலாசம் தொலைத்தவர்கள் படம் நன்றாக இருந்தாலும் ‘உலகம் என்ன சொல்லுது?’ என்று கேட்டபடி கள்ள மௌனம் சாதிப்பார்கள். பார்த்தாலும் அசூசையான செயலை செய்தது போல முகம் சுளிப்பார்கள். போனை எடுக்கமாட்டார்கள். போனை எடுத்தாலும் தூக்கத்தில் இருந்து எழுந்தவர்கள் போல் யாரென்று கேட்பார்கள். ‘ஓடாத தியேட்டரில் படம் பார்த்து கொள்கிறேன்’ என்று கறாராய் பேசுவார்கள். தன் கூட்டத்துடன் அமர்ந்து தோல்வியை கேக் வெட்டி கொண்டாடுவார்கள். கெக்கேபிக்கேவென்று சிரிப்பார்கள். ‘அவனுக்கு நல்லா வேணும். இல்லாட்டி இன்னும் ஆடுவான்’ என்று ஆட்டத்தின் விதிகள் குறித்து கருத்துரை பரப்புவார்கள்.

ஓடாத படத்தின் இயக்குநரின் தற்கொலை செய்திக்காக அனைவரும் செய்தி சேனலின் முன்னே காத்திருப்பார்கள். ‘கடைசி நாள் தியேட்டரில் கூட்டமே இல்லை’ என்று சொன்ன ஒரு சிறு நகரத்தில் அவன் படத்தின் திருட்டு விசிடி பத்தாயிரம் விற்றுள்ளது. ‘நாடகத்தை எவன்டா பார்ப்பான்?’ என்று சொன்ன பெருநகரத்தில் ஒரு லட்சம் திருட்டு விசிடி விற்றிருக்கிறது. டோரண்ட்டுகளில் இடைவிடாது டவுன்லோடு செய்யப்பட்டு பேஸ்புக்கில், ‘படம் நன்றாக இருக்கிறது.. சூப்பர்’ என்ற செய்தி வருகிறது.

இருண்ட உலகின் புராதன நகரத்தில் யாருமின்றி வாழப் பழகி கொள்வதை தவிர இங்கே வியாபாரம் செய்ய பெரிதொன்றும் வழியில்லை. புழுக்களும், தேள்களும், பூரான்களும், நச்சு பாம்புகளும் அந்த இயக்குநரை இடைவிடாது கொத்தி நஞ்சுற செய்யட்டும்..

எத்தனை பெரிய தவறு இழைத்துவிட்டான்..?

Our Score