மாபெரும் வெற்றி பெற்ற ‘மைனா’, ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’ ஆகிய படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் ‘சவுகார் பேட்டை’ படம் இந்த மாதம் 27-ம் தேதி வெளியாகவுள்ளது.
ஸ்ரீகாந்த் – ராய் லட்சுமி நடித்திருக்கும் இப்படத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்றுவிட்டது. பேய் படங்களின் ஆஸ்தான முன்னணி விநியோகஸ்தரான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் முரளி இந்தப் படத்தை வாங்கி விநியோகிக்கவுள்ளார்.
இதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள் ஜான்மேக்ஸ் – ஜோன்ஸ் இருவரும் இயக்குநர் வடிவுடையானுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் கம்பெனி தயாரிப்பிலேயே அடுத்த படத்தையும் தயாரிக்கும் வாய்ப்பையும் இயக்குநர் வடிவுடையானுக்கே வழங்கியுள்ளார்கள்.
இதையடுத்து வடிவுடையான் தனது அடுத்தப் படத்தையும் திகில் கலந்த பேய் படமாக எடுக்க முடிவெடுத்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘பொட்டு’ என்று பெயர் வைத்துள்ளார்.
இந்தப் புதிய படத்தில் பரத் நாயகனாக நடிக்கவிருக்கிறார். முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாக நடிக்க உள்ளார். மற்றும் சரவணன், கருணாஸ், சுமன், சிங்கம்புலி, ஊர்வசி ஆகியோரும் நடிக்கிறார்கள். நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ் இதில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.
“சவுகார் பேட்டை’ படம் போன்றே இந்தப் படமும் திகில் கலந்த பேய் கதைதான். மெடிக்கல் காலேஜின் பின்னணியில் இருக்கும். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது…” என்று உற்சாகமாகச் சொல்கிறார் இயக்குநர் வடிவுடையான்.