full screen background image

“பிரகாஷ்ராஜ் ஒரு கிறுக்கன்…” – இயக்குநர் சுகாவின் கோபம்..!

“பிரகாஷ்ராஜ் ஒரு கிறுக்கன்…” – இயக்குநர் சுகாவின் கோபம்..!

இன்று மாலை வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்ற ‘தூங்காவனம்’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் அந்தப் படத்தின் வசனகர்த்தாவான எழுத்தாளர் சுகாவும் கலந்து கொண்டு பேசினார்.

Thoongavanam - Cheekati Raajyam Trailer Launch Stills (22)

அவர் பேசும்போது, “கமல்ஹாசன் ‘பாபநாசம்’ திரைப்படம் முடிந்த நேரத்தில் ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு ‘தூங்காவனம்’ படம் பற்றி சொல்லி, என்னை அந்தப் படத்துக்கு வசனம் எழுதச் சொன்னார். அதைக் கேட்டவுடன் நான் முதலில் பயந்தேன். ஏனென்றால், தமிழ்ச் சினிமாவில் நான் மதிக்கின்ற மிக முக்கியமான வசனகர்த்தாவான கமல்ஹாசன், என்னை அவர் படத்துக்கு வசனம் எழுதச் சொன்னது எனக்கு பயம் தந்தது.

ஆனால் இந்தப் படத்தில் வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு.. கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவருடன் இருக்கிறேன். என்னை உற்ற தோழனாக நடத்தினார். நடத்துகிறார். இது எங்கேயுமே பார்க்க முடியாத விஷயம். நான் மிகையாகவோ உணர்ச்சவசப்பட்ட நிலையிலோ இதைச் சொல்லவில்லை.

கமல்ஹாசன் பல நேரங்களில் என் தோள் மீது கை போட்டுத்தான் பேசுவார். எனது குருநாதர் மறைந்த பாலு மகேந்திராவின் கை என் தோளின் மீது விழும்போது நான் என்ன உணர்ந்தனோ அதையே இப்போதும் உணர்கிறேன். அவரை நான் கமல்ஹாசன் என்றுதான் இந்த மேடையில் சொல்கிறேன். ஆனால் என் மனதில் ‘அண்ணாச்சி கமல்ஹாசன்’ என்றுதான் இருக்கிறார்.

ஏனென்றால், எனது குருநாதர் பாலு மகேந்திராவின் குடும்பத்தில் ஒரு மூத்த சகோதரர் கமல்ஹாசன். அதனால் அவர் எனக்கு அண்ணாச்சி. நான் மட்டுமல்ல எங்களது பாலு மகேந்திராவின் குடும்பத்தில் இருந்து வந்த அத்தனை பேருமே கமல்ஹாசனைப் பற்றி பேசும்போது அவரை ‘அண்ணாச்சி’ என்றுதான் சொல்வோம். பேசுவோம்.

‘தூங்காவனம்’ ஒரு கிரைம் படம். ஆனால் படமாக்கத்தின்போது அத்தனை மகிழ்ச்சியாக நாங்கள் அத்தனை பேரும் இருந்தோம். ராஜேஷ் எம்.செல்வா என்கிற அற்புதமான திறமைசாலியை இந்தப் படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகத்திற்கு வழங்கியிருக்கிறார் கமல்ஹாசன். அவர் கமல்ஹாசனிடம் பயின்றவர்.. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்தப் படத்தை இயக்கும் பொறுப்பை வழங்கினார். அந்த நம்பிக்கையை சிறிதும் குலைக்காமல் கூடவே, அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும்விதத்தில் இயக்கியிருக்கிறார் ராஜேஷ் எம்.செல்வா.

இந்தப் படத்தில் ரொம்ப நாட்களுக்குப் பிறகு பெரிய நட்சத்திரப் பட்டாளங்களே நடித்திருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ், த்ரிஷா, கிஷோர், சம்பத்ராம், யூகிசேதுன்னு..  ஆனால் இவர்களை அந்தந்த கதாபாத்திரங்களாகத்தான் நீங்கள் பார்க்க முடியும். இந்தப் படத்தின் சிறப்பம்சமும் இதுதான்.

ஷானு ஜோஸப் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர். அவருடைய கேரியரில் இதுவொரு  முக்கியமான திரைப்படம். இந்தப் படத்தின் மூலம் நிறைய உறவுகள் எனக்குக் கிடைத்திருக்கின்றனர்.

பிரகாஷ்ராஜ் மாதிரி ஒரு கிறுக்கனை நான் பார்த்ததே இல்லை. அவரிடத்தில் நான் இதை நேராகவே சொல்லிவிட்டேன். இதற்கு அவருடைய அர்ப்பணிப்புதான் காரணம்.. டப்பிங்கிற்காக அவருக்காகக் காத்திருந்தபோது கொஞ்சம் வருத்தமும், கோபமும் இருந்தது. ஆனால் வேலை முடிந்ததும் அவரை அரவணைக்கத்தான் தோன்றியது. சினிமாவை தனது வாழ்க்கையாக கருதும் சொற்ப சினிமாக்காரர்களில் அவரும் ஒருவர்.

யூகி சேது நிறைய சினிமா தெரிந்தவர். வலுவான கேரக்டரில் நடித்திருக்கிறார். த்ரிஷாவுக்கு இது 50-வது படம். இவருக்கும் இது மிக முக்கியமான படம்.  ஜிப்ரானுடைய இசை அற்புதம். தெலுங்கு பாடலாசிரியர் ராமசூர்யா சாஸ்திரிகள் இந்தப் படத்தில் வேலை செய்திருக்கிறார். அவர் மிகப் பிரபலமானவர். தெலுங்கில் அவருக்கிருக்கும் பெயரை ஹைதராபாத்தில் நான் இருந்தபோது தெரிந்து கொண்டேன். இந்தப் படத்தின் வாய்ப்பை எனக்கு வழங்கிய கமல்ஹாசனுக்கு நன்றி.. ராமசூர்யா சாஸ்திரிகள் கமலுடன் புகைப்படம் எடுத்து லேமினேட் செய்து வைத்திருப்பதாகச் சொன்னார். நான் கமல்ஹாசனை என் மனதில் வைத்திருக்கிறேன்..” என்றார்.

Our Score