அண்மையில் திரைக்கு வந்திருக்கும் படம் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’. பாரதியாரின் வரியாச்சே என்று அவர் ரசித்து வைத்த இந்த தலைப்பை, ஏதோ பிட்டு பட ரேஞ்சுக்கு சிலர் விமர்சித்து வருவது பொறுக்காமல் குமுறி தீர்க்கிறார் அப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.குமரன்.
“சார்… நான் ஒரு டீசன்ட்டான படம் எடுத்திருக்கேன். தமிழ்ச் சினிமாவில் இப்படியொரு கதை இதுக்கு முன்னாடி வந்ததேயில்லை. தியேட்டர்ல படத்தை பார்க்குற பெண்களும், குழந்தைகளும் என்ஜாய் பண்ணிட்டு போறங்க. ஆனால் இந்தத் தலைப்பை பற்றி தவறான அபிப்ராயத்தை மக்கள் மனதில் பரப்பிக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.
எந்த படம் ரிலீசானாலும் அந்தப் படத்திற்கு எதிராக புரளி கிளப்பும் ஒரு கும்பல்தான் என் படத்திற்கும் எதிராக புரளி கிளப்புகிறாங்க. இது ‘அந்த’ மாதிரியான படம்னு புரளி கிளப்புறவங்க படத்துக்கு க்ளீன் யூ சர்டிபிகேட் வாங்கியிருக்குற தகவலையெல்லாம் ஏன்தான் மறந்துட்டு பேசுறாங்களோ தெரியல..” என்று சொல்லி கவலைப்படுகிறார்.
அதுமட்டுமல்ல, இந்தப் படத்திற்கு சென்னையில் இருக்கும் பிரபலமான தியேட்டர் வளாகம் ஒன்று தியேட்டர் தர முதலில் மறுத்துவிட்டதாம். “உங்க படத்தின் தலைப்பு ஒரு மாதிரியா இருக்கு. கூட்டம் வராது..” என்று அந்த தியேட்டர் மேனேஜர் கூறிவிட்டாராம். பின்பு இந்தப் படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவே அந்தத் தியேட்டர் மேனேஜருக்கு போன் செய்து, ‘அது நல்ல படம் ஸார். உங்க தியேட்டரின் புகழுக்கு இதனால் ஒரு இழுக்கும் வராது’ என்று உத்தரவாதம் கொடுத்த பின்புதான் படத்தை வெளியிட சம்மதித்தாராம்.
இதையெல்லாம் நம்மிடம் சொல்லி புலம்பிய எஸ்.எஸ்.குமரன், “உங்க படம் கமர்ஷியலாகவும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைஞ்சதாகவும் இருக்கு’ என்று விநியோகஸ்தர்களே வாய் திறந்து பாராட்டுறாங்க. இந்த நேரத்தில் இந்த புரளி கிளப்புகிறவர்கள் அமைதியா இருந்தாலே என் படம் வெற்றி பெரும்…” என்றார்.
இதுக்கு அவங்களைக் குத்தம் சொல்லி புண்ணியமில்லையே..? இந்த மாதிரி தலைப்பு வைத்து பிட்டு படங்களை வருடக்கணக்காக ஓட்டியதே இதே திரையுலகத்தில் ஒரு அங்கமாக இருக்கும் திரையரங்குகள்தான்.. அதன் உரிமையாளர்கள்தான் இந்த நிலைமைக்குக் காரணம்..!
இப்படியொரு பிரச்சினை வரும் என்பதை முன்கூட்டியே ஊகித்து தலைப்பை மாற்றியிருந்தால் இந்தச் சின்னப் பிரச்சினையும் வராது.. தவறு முழுக்க இயக்குநர் மீதுதான்..! இப்போது புலம்பி என்ன புண்ணியம்..?