மெகா இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகிறார்..!

மெகா இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகிறார்..!

தமிழ்த் திரையுலகப் புள்ளிகளையும், திரை ரசிகர்களையும் ஒரு சேர அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் பட வைத்திருக்கிறது தற்போது வெளியான ஒரு செய்தி.

மெகா இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஒரு நடிகையாக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பதுதான் அந்தச் செய்தி.

அதுவும் தமிழ்ச் சினிமாவின் ஹேண்ட்சம்மான ஒரு ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பதும் அடுத்த அதிர்ச்சியான செய்தி. அந்தப் படத்தைத் தயாரிக்கப் போவதும் தமிழ்ச் சினிமாவின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனம் என்பதும் இன்னுமொரு அதிர்ச்சி செய்தி.

இப்படி அதிர்ச்சி மேல் அதிர்ச்சியைக் கூட்டிக் கொடுத்திருக்கும் இந்தச் செய்தியை தந்திருப்பது நடிகர் சிவக்குமாரின் வாரிசுகளான நடிகர் சூர்யாவும், அவரது தம்பியான நடிகர் கார்த்தியும்.

நடிகர் சூர்யாவின் 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில்தான் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கப் போவது நடிகர் கார்த்தி. இந்தப் படத்தை இயக்கப் போவது ‘கொம்பன்’ படத்தை இயக்கிய முத்தையா. ஆக, தனது முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் ஒரு கூட்டணியில் இணைந்து வெளிப்படுகிறார் அதிதி சங்கர்.  

தி.நகரில் ஷங்கரின் வீட்டுக்கு எதிரில்தான் சூர்யாவின் வீடு்ம் இருப்பது அனைவரும் அறிந்ததுதான். இரு குடும்பத்தினரும் இப்போதுவரையிலும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அதிதி ஷங்கர் சிவக்குமாரின் வீட்டுக்கு வந்து செல்லும் அளவுக்கு நெருக்கமானவராக இருப்பதால், அவரது அழகைப் பார்த்துதான் சினிமா ஆசையைத் தூண்டிவிட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

“சூர்யா தயாரிக்க, கார்த்தி ஹீரோ என்றால் ஓகே” என்று அப்பா ஷங்கரும் பச்சைக் கொடி காட்டிவிட்டார்போலும்…!

முதல் படத்திலேயே கிராமத்து வேடத்தில், பாவாடை தாவணியில் கலக்கினால் மிக எளிதாக தமிழகத்து இளைஞர்களின் மனதில் இடம் பிடிக்கலாம் என்ற திட்டத்தின்படி ‘கொம்பன்’ முத்தையாவும் உள்ளே இழுக்கப்பட அமர்க்களமான கூட்டணி ஆரம்பமாகியுள்ளது.

‘கொம்பன்’ என்ற தலைப்பினை போலவே ‘விருமன்’ என்ற பெயருடன் கூடிய தலைப்பைச் சூட்டியிருக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் எதையும் திட்டமிட்டு கச்சிதமாக அதே நேரம் பிரம்மாண்டமாகவும் செய்வதில் வல்லவரான இயக்குநர் ஷங்கர், தனது மகளின் திரையுலகப் பிரவேசத்தை மிக அழகாக திட்டமிட்டு கொணர்ந்திருக்கிறார்.

போஸ்டரில் அதிதி ஷங்கர் அழகில் மிளிர்கிறார். இனிமேல் அவருடைய அப்பாவின் முகவரி உட்பட எதுவும் அவருக்குத் தேவையில்லைதான்.

அதிதி ஷங்கர் தமிழ்ச் சினிமாவில் மிக உயரிய இடத்தைப் பிடிக்க பெரிதும் வாழ்த்துகிறோம்.

இப்படத்தின் பூஜை நாளை திங்கள்கிழமை காலையில் நடைபெறுகிறது. இம்மாதம் 18-ம் தேதி தேனியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற இருக்கிறது.

Our Score