‘காதல்’ படத்தில் கலை இயக்கத்தை சிறப்பாக செய்தமைக்காக கலை இயக்குநர் வீரசமருக்கு அப்படத்தின் தயாரிப்பாளரான மெகா இயக்குநர் ஷங்கர் 25,000 ரூபாய் பரிசளித்தாராம்.
இது குறித்து கலை இயக்குநர் வீரசமர் பேசும்போது, “2004-ல் ‘காதல்’ படம் வெளி வந்தது. அன்று முதல் இன்றுவரை தொடர்ச்சியாக நான் கலை இயக்குநராக இயங்கிக் கொண்டே இருக்கிறேன். ஒருபோதும் ஓய்வாக இருந்ததில்லை. என் பணியில் நான் காட்டும் ஆர்வமும், ஈடுபாடும்தான் அடுத்தடுத்து வாய்ப்புகளை எனக்குப் பெற்றுத் தருகின்றன. எனக்கான சான்றிதழ்களை என் வேலைதான் தேடிக் கொடுக்கிறது.
‘காதல்’ படத்தில் ஒரு மெக்கானிக் ஷெட்டை உருவாக்கி இருப்பேன். அதில்தான் ஹீரோ பரத் இருப்பார். என்னை ஒரு நாள் ஷங்கர் சார் அழைத்துப் பாராட்டினார். படத்தில் அந்த மெக்கானிக் ஷெட்டில் டயருக்குள் கடிகாரம் இருப்பது போல் அமைத்திருந்தேன். அதை மிகவும் பாராட்டியதுடன் கையில் ஒரு கவரைக் கொடுத்தார். வெளியே வந்து பார்த்தபோது அதில் 25 ஆயிரம் ரூபாய் இருந்தது. நான் பிரமித்து போனேன்.
‘கடைக்குட்டி சிங்கம்’ படம் வெளியான பிறகு சூர்யா சார் என்னை ஒரு நாள் அழைத்தார். படத்தில் எனது பணிகளைப் பாராட்டியவர், ஒரு கவரைக் கொடுத்தார். அதில் பார்த்தால் மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி இருந்தது.
அதேபோல் 2-டி தயாரிப்பாளர் ராஜா எங்கள் வீட்டிற்கு, தட்டு நிறைய பழங்கள் கொடுத்து அனுப்பினார். அது ஒரு வெள்ளித் தட்டாக இருந்தது. இப்படி சொல்ல நிறைய உண்டு. என்னைப் பொறுத்தவரை இந்த சினிமாவில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதே ஒரு சாதனைதான் என்று சொல்வேன்.” என்று சொல்லியிருக்கிறார் கலை இயக்குநரான வீரசமர்.