தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான கேயார் மீது இயக்குநர் செல்வராகவன் கடும் கோபம் காட்டியிருக்கிறார்.
இன்றைய ‘குமுதம்’ பத்திரிகையில் இது குறித்து பேட்டியளித்திருக்கும் இயக்குநர் செல்வராகவன், கேயார் தன் மீது மட்டும் தனிப்பட்ட வன்மம் கொண்டு பேசியதாகவும், நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கேள்வி : போன வருஷம் ஒரு ஆடியோ பங்ஷன்ல கேயார் உங்களை கடுமையா விமர்சித்திருந்தார். கேள்விப்பட்டீர்களா..?
செல்வராகவனின் பதில் : நானும் படிச்சேன். அவர் என் ஒரு படத்தை மட்டும்தான் விமர்சித்தார். அதோடு தன் பொறுப்பு முடிந்துவிட்டதுன்னு முடிவெடுத்துவிட்டார்.
நான் கேட்கிறேன். அவருக்கு உண்மையான சமுதாயப் பொறுப்பு இருந்திருந்தா ஒவ்வொரு படத்தையும் அவர் தொடர்ந்து விமர்சித்திருக்க வேண்டும். அதுதான் நியாயம். எத்தனையோ பெரிய பெரிய ஹீரோ படங்களெல்லாம் ஓடலை. அதற்கெல்லாம் அவர் வாய் திறக்கல. தட்டிக் கேட்கலை.. அவர்களுக்கு எதிராக ஏனோ இவரது குரல் ஒலிக்கலை.
இதை அவரே செய்ததை போல தெரியலை. யாரோ சொல்லிக் கொடுத்து செய்ததைப் போல இருந்த்து அவரது நடவடிக்கை. இத்தனைக்கும் நான் அவரை பார்த்ததுகூட இல்லை. அப்படியிருந்தும் என்னை இவ்வளவு தூரம் எப்படி ‘நேசித்திருக்கிறார்’..? ஏன் இப்படி ‘நேசித்தார்’ என இப்பவரைக்கும் விடை கிடைக்காமல் தவிக்கிறேன். யார் மீதும் இல்லாத ‘லவ்’ என் மீது மட்டும் அவருக்கு வந்தது ஏன் என்று நீங்கதான் அவரைக் கேட்க வேண்டும்.
அவர் அதை மட்டும் பண்ணலை.. இன்னொண்ணையும் பண்ணினார். கரெக்ட்டா ஆரம்பிச்ச நேரத்திற்கு வேலைகள் நடந்திருந்தா, இந்நேரம் சிம்பு படம் ஷூட்டிங் முடிஞ்சு ரிலீஸுக்கு தயாராயிருந்திருக்கும். ஆனால் விடலை. போன்லயே மிரட்டினாங்க. ஷூட்டிங் நடந்தால் ஸ்பாட்டுக்கு வந்து தடுப்போம்ன்னு சொன்னாங்க.
அந்தப் படத்துக்கு நாலு கோடி செலவழிச்சது வேஸ்ட்டா போயிருச்சு. என் தயாரிப்பாளருக்கு அதனால் நஷ்டம். லொகேஷனெல்லாம் பார்த்து முடிவான பிறகு, சிலருக்கு அட்வான்ஸே கொடுத்திட்டோம். அப்ப வந்து பிரச்சினை செஞ்சாங்க. தயவு செஞ்சு நீங்க கட்டாயம் அவரை கேட்கணும். செல்வராகவன் மேல மட்டும் உங்களுக்கு ஏன் இவ்ளோ ‘காதல்’ன்னு..?!” என்று சொல்லியிருக்கிறார் செல்வராகவன்.
மேலும் அவர் சொல்கையில், “நீங்க பார்த்த வெர்ஷன்வரை வந்ததே நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம்தான். ஆமாம்.. அப்படித்தான் சொல்லணும்.
என் முதுகில் கிட்டத்தட்ட 325 பேர் குத்தியிருப்பாங்க. சேர்ந்து செய்வோம்ன்னு சொன்னவங்கள்லாம் ஓடி ஒளிஞ்சுட்டாங்க. ஒரு வேலையை ஒத்துக் கொண்டால் அதுல ஹானஸ்டி இருக்கணும். எனக்கு ஹானஸ்டி மேல நம்பிக்கையிருக்கு. அதான் கடைசிவரையிலும் நின்னேன்.
என்ன பண்றது..? சில இயக்குநர்களுக்கு 40 கோடி போட்டு ஒரு பாட்டை ஷூட் பண்ண கொடுத்து வைச்சிருக்கு. சிலருக்கு 40 சுமோ கார்களை பனைமரத்தில் மோதி வெடிக்க வைக்க கொடுத்து வைச்சிருக்கு. நமக்குக் கொடுத்து வைச்சது அவ்வளவுதான். என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தத் தரத்துலயாவது படம் வெளியே வந்ததேன்னு நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன்.
பச்சையா உங்களுக்குச் சொல்லணும்னா வேற மாதிரி சொல்லணும். நீங்க அந்த வார்த்தையை பிரிண்ட் பண்ண முடியாது.. பரவாயில்லையா..?” என்று விரக்தியுடன் தனது நீண்ட பேட்டியை முடித்திருக்கிறார் செல்வராகவன்.
உண்மையில் என்ன நடந்ததெனில்.. ‘இரண்டாம் உலகம்’ திரைப்படத்தின் தோல்வியினால் அதனைத் தயாரித்த பி.வி.பி. நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 35 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டமானது.
இந்தப் படத்தின் தயாரிப்பின்போதே படம் லாபம் சம்பாதித்தால் அதில் பாதி – பாதியாக பிரித்துக் கொள்வதாகவும், அதேபோல் நஷ்டம் ஏற்பட்டால் அதிலும் பாதியை தான் ஏற்றுக் கொள்வதாகவும் இயக்குநர் செல்வராகவன், பி.வி.பி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.
‘இதன்படி 35 கோடி நஷ்ட ஈட்டுத் தொகையில் பாதியான 17.50 கோடியை செல்வராகவன் எங்களுக்குத் தர வேண்டும்’ என்று பி.வி.பி. நிறுவனம் பஞ்சாயத்துக்கு அழைத்தது. செல்வராகவன் ‘கில்டு’ அமைப்பில் மெம்பர் என்பதாலும், பி.வி.பி. நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர் என்பதாலும் ‘கில்டு’ அமைப்பு மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்று இரண்டு அமைப்புகளிலும் இந்த பஞ்சாயத்து நடந்தது.
அப்போது செல்வராகவன் “என்னிடம் இப்போது அவ்வளவு பணம் இல்லை. இதனால் என்னால் உடனடியாக பணத்தைத் தர முடியாது..” என்று தெரிவித்தார். இதனால் பி.வி.பி. நிறுவனம் வேறு, வேறு வழிகளில் செல்வராகவனுக்கு செக் வைத்தது.
1. தனுஷை வைத்து பி.வி.பி. நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் இயக்கித் தர வேண்டும்.
அல்லது
2. தனுஷின் கால்ஷீட்டை பி.வி.பி. நிறுவனத்திற்கு வாங்கித் தர வேண்டும்.
அல்லது
3. செல்வராகவன் அடுத்து ஏதாவது படத்தை இயக்கத் துவங்கினால் அதற்கு முன்பாகவே 17.50 கோடி ரூபாயை பி.வி.பி. நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று சொன்னது.
செல்வராகவனும் இதற்கு ஒத்துக் கொண்டு கையெழுத்திட்டுவிட்டாராம்.
இதற்கு பின்பு தனுஷ் தனது அண்ணனை காப்பாற்றுவதற்காக பி.வி.பி. நிறுவனத்திற்கு கால்ஷீட் தர மறுத்துவிட்டார். இதனால் அந்தத் திட்டம் பணால். செல்வராகவன் தன்னுடைய இயக்கத்தில் நடிக்கக் கேட்டும் தனுஷ் மறுத்துவிட அதுவும் தோல்வியானது.
இதற்கிடையில் சென்ற வருடம் ‘சத்யம்’ திரையரங்கில் நடைபெற்ற ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அப்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த கேயார் பேசும்போது, “இரண்டாம் உலகம்’ படத்தில் செல்வராகவன் அதிக செலவு வைத்து நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாகவும், தயாரிப்பாளரின் கஷ்ட, நஷ்டம் தெரியாமல் இயக்குநர் செல்வராகவன் நடந்து கொண்டுவிட்டதாகவும், இவரைப் போன்ற இயக்குநர்களால்தான் தமிழ்ச் சினிமா இன்றைக்கு இக்கட்டில் மாட்டியிருப்பதாக”வும் தெரிவித்தார். இதைத்தான் இந்தப் பேட்டியில் செல்வராகவன் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு பின்னர் திடீரென்று ரேடியன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வருண் மணியனின் தயாரிப்பில் சிம்பு நடிக்கப் போவதாகச் சொல்லி ஒரு படத்தைத் துவக்கினார் செல்வராகவன்.
அந்தப் படத்தின் ஷூட்டிங் துவங்கும் நாள் முன்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து வந்த எச்சரிக்கை மற்றும் பலமான எதிர்ப்புகள் காரணமாக வருண் மணியன் சட்டென்று பின் வாங்கி, “பி.வி.பி.யோட உங்க பிரச்சனையெல்லாம் முடிச்சிட்டு வாங்க செல்வா.. நாம அப்புறம் படம் பண்ணலாம்..” என்று சொல்லி அந்தப் படத்தை நிறுத்துவிட்டார். இதைத்தான் செல்வராகவன் தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்போது மீண்டும் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக ட்விட்டரில் சில நாட்களுக்கு முன்பாக தெரிவித்தார் செல்வராகவன். சிம்பும் இதனை ஆமோதிக்க.. தனுஷ் அதே ட்விட்டரில் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்.
இந்தப் படத்தை தனுஷே தயாரிக்கலாம் என்று மீடியாக்கள் ஆரூடம் மட்டுமே சொல்லியிருந்தன. உண்மையில் தனுஷ் தான் அதனைத் தயாரிக்க, தயாரில்லை என்றே சொல்லிவிட்டாராம். இப்போது மும்முரமாக வேறு தயாரிப்பாளரைத் தேடி வருவதாகச் செய்தி.
புதிய படத்தை இயக்கம் செய்யும் முன் ஒப்பந்தப்படி பி.வி.பி. நிறுவனத்திற்கு செல்வராகவன் 17.50 கோடி அளவுக்கு பணத்தைத் திருப்பித் தர வேண்டியிருப்பதால், படத்தின் துவக்கத்திலேயே செல்வராகவனின் இந்த நஷ்டஈட்டுத் தொகையை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு தைரியமான, வசதியான தயாரிப்பாளர் கிடைப்பாரா என்பதுதான் தெரியவில்லை..!