இயக்குநர் சீனு ராமசாமியின் புதிய படம் அறிவிப்பு

இயக்குநர் சீனு ராமசாமியின் புதிய படம் அறிவிப்பு

தமிழகத்தின் மண்ணின் மைந்தர்களின் எதார்த்த வாழ்வியலை ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்பறவை’, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’ என்று தொடர்ச்சியான படங்களில் காண்பித்து, அதனை வெற்றிப் படங்களாகவும் மாற்றியமைத்து, அடுத்து ஒரு மாபெரும் வெற்றிக்குக் காத்திருக்கும் விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ படத்தையும் உருவாக்கியிருக்கும் இயக்குநர் சீனு ராமசாமி தனது அடுத்தப் படத்தை அறிவித்திருக்கிறார்.

அவர் எழுதி, இயக்கப் போகும் இந்தப் புதிய படத்தை டைம் லைன் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் சுந்தர் அண்ணாமலை தயாரிக்கிறார்.

இந்த நிறுவனம் ஏற்கெனவே சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் சர்ஜூன் இயக்கிய ‘எச்சரிக்கை’ படத்தை தயாரித்து வெளியிட்டனர். தங்களது இரண்டாவது படமான ‘ரெட் ரம்’ திரைப்படத்தை அஷோக் செல்வனின் நடிப்பில் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரனின் இயக்கத்தில் உருவாக்கி வருகிறது.

இந்த நிலையில் டைம் லைன் சினிமாஸின் மூன்றாவது தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கவிருப்பதாக இன்றைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.