“விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்தேன்” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் பேட்டி

“விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்தேன்” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் பேட்டி

நடிகர் விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ‘அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்’ என்று கட்சி ஆரம்பிக்க விண்ணப்பித்துள்ள செய்தி, தமிழகத்தில் கோடம்பாக்கத்தையும், அரசியல் வட்டாரத்தையும் ஒரே சேர உலுக்கியது.

இந்தச் செய்தியினைத் தொடர்ந்து வந்த விஜய்யின் மறுப்பு அறிக்கை.. தொண்டர்களுக்கு எச்சரிக்கை என்பதையும் தாண்டி அனைவராலும் கவனிக்கப்பட்ட ஒரு விஷயம்.. ‘நடிகர் விஜய்க்கும், அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகருக்குமான உறவு தற்போது சுமூகமாக இல்லை. இருவருக்குமிடையே கடந்த சில வருடங்களாக பேச்சுவார்த்தையே இல்லை’ என்ற செய்திதான்.

இந்த நிலைமையில் இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் சேனலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியில் நடிகர் விஜய்யின் ஆரம்பக் காலத்தில் இருந்து உடனிருந்து அவரை எப்படி வழி நடத்தினேன் என்பது பற்றி சொல்லியிருக்கிறார்.

“விஜய் என் மகன் என்பதால் என்னிடமிருந்த பல நல்ல குணங்கள் அவரிடமும் இருக்கு. ஆரம்பக் காலத்தில் நான் அவரை வைத்து இயக்கிய பல படங்கள் தோல்வியடைந்தாலும் ‘ரசிகன்’ படம் சில்வர் ஜூப்ளி கொண்டாடியபோதுதான் திரையுலகமே விஜய்யை திரும்பிப் பார்த்தது.

அப்போது பார்த்தவர்களெல்லாம் சொன்னது.. ‘அவருக்கென்ன.. அவங்கப்பா பணக்காரர். மகனை ஹீரோவாக்க சொந்தக் காசு போட்டு படமெடுக்கிறாரு’ன்னு சொன்னாங்க. ஆனால் அது உண்மையில்லை.

விஜய்க்குள்ள ஒரு நடிகன் இருக்கிறான் என்பதை அவரது முதல் படத்திலேயே நான் உணர்ந்து கொண்டேன். அந்த நடிகனை வெளியே கொண்டு வர வேண்டும். இந்தத் தமிழ்த் திரையுலகத்திற்கு ஒரு நல்ல நடிகனை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் தோல்வி கிடைத்தாலும் பரவாயில்லை என்று தொடர்ச்சியாக அவரை வைத்து படமெடுத்தேன்.

‘ரசிகன்’ படத்தில் இருந்து அவரை திரையுலகத்தினர் அடையாளம் கண்டு கொண்டார்கள். அதுதான் அவருக்கு நான் செய்த வேலை. அது ஒரு மகனுக்கு அப்பா செய்த கடமையல்ல. ஒரு நடிகனுக்கு ஒரு தயாரிப்பாளர் செய்த கடமையாக நினைத்து செய்தேன்.

அது மட்டுமல்ல.. இந்தத் திரையுலகத்தில் எப்படி இருக்க வேண்டும்.. தயாரிப்பாளர்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் நான்தான் அவருக்குக் கற்றுக் கொடுத்தேன்.

விக்ரமனின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஏதோ ஒரு விஷயத்திற்காகக் கோபப்பட்டு விஜய் ஸ்பாட்டில் இருந்து கிளம்பி வந்துவிட்டார். இது பெரிய இஷ்யூவாகிவிட்டது. சேம்பரில் மீட்டிங்கிற்கு கூப்பிட்டார்கள்.

நான் விஜய்யையும் அழைத்துக் கொண்டு வந்தேன். அங்கே அவரை உட்கார வைத்தேன். ஏன்னா.. நான் தயாரிப்பாளர் சங்கத்தில் துணைத் தலைவர். எனக்கும் பொறுப்பு இருக்கு. அதே சமயம் இன்னொரு தயாரிப்பாளரையும் நான் மதிக்கணும்.

தயாரிப்பாளர், இயக்குநரிடம் சொல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பியதே தவறு. இதனால் ஷூட்டிங் நின்று போனது. அதற்கு யார் பொறுப்பாவது.. ஒரு தயாரிப்பாளரா இன்னொரு தயாரிப்பாளரின் கஷ்டத்தை என்னால் உணர முடிந்தது. அப்போது விஜய்யை அங்கே மன்னிப்பு கேட்க வைத்தேன்.

இதேபோல் ‘கோயம்புத்தூர் மாப்ளை’ படத்தின்போதும் ஒரு சம்பவம். வி.ஜி.பி. பக்கத்தில் ஷூட்டிங் நடத்தியபோது ரோட்டிலேயே விஜய்யை அமர வைத்து மேக்கப் போட்டிருக்கிறார்கள். இதனால் கோபமான விஜய், அங்கேயிருந்தும் யாரிடமும் சொல்லாமல் கிளம்பி வந்துவிட்டார்.

தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எனக்கு போன் வந்தது. நான் தயாரிப்பாளர், இயக்குநர், விஜய் மூவரையும் என் வீட்டிற்கு நேரில் வரவழைத்து பேசினேன். அப்போதும் விஜய்யை அவர்களிடத்தில் மன்னிப்பு கேட்க வைத்தேன். அன்றைய நாள் படப்பிடிப்பு ரத்தாகி அந்தத் தயாரிப்பாளருக்கு பணம் நஷ்டமாகிவிட்டதே.. அதற்கு நாம்தான் பொறுப்பேற்றாக வேண்டும்..

இப்படி பல விஷயங்களை விஜய்க்கு ஆரம்பக் காலத்திலேயே உணர்த்தியதால்தான் இன்றைக்கு அவர் தயாரிப்பாளருக்கு பிரச்சினை தராத, ஒழுக்கமான ஒரு ஹீரோவாக இருக்கிறார். இதில் எனக்கு ரொம்பப் பெருமைதான்..” என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

Our Score