வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து சாமி இயக்கியுள்ள படம் ‘கங்காரு’. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நேற்று மாலை நடைபெற்றது. முன்னோட்டத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.
விழாவில் ‘கங்காரு’ படத்தின் இயக்குநர் சாமி பேசும்போது, “நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்திருக்கிறேன். என் முந்தைய படங்கள் வேறு மாதிரி இருந்ததற்கு நான் மட்டும் காரணமல்ல. சினிமாவில் பலர் அறியாத விஷயம் ஒரு படம் எந்த மாதிரி வரும் என்பதை தனி நபர் யாரும் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், தயாரிக்கும் தயாரிப்பாளர், நடிக்கும் நடிகர்கள் எல்லாரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.
இத்தனைக்கும் பிறகு வெற்றி என்றால் எல்லாரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிட்டு ஓடி விடுவார்கள்.
‘கங்காரு’ என் உதவி இயக்குநர் சாய்பிரசாத் சொன்ன கதை. சினிமாவில் ஞாபகம் வைக்கிற படமாக இருக்கும். 5 பாடல்கள்.. கவிஞர் வைரமுத்துவுக்கு இந்தப் படத்திற்காக நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். படத்தை என் ஞானத் தந்தை தாணு வெளியிடுகிறார். அவரிடம் 2004-ல் படம் இயக்க முன் பணம் வாங்கினேன். ஆனால் படம் இயக்க முடியவில்லை. இப்போது 2015-ல் நான் இயக்கியிருக்கும் ‘கங்காரு’வை வாங்கி வெளியிடுகிறார். அவருக்கு எனது நன்றி.” என்றார்.