‘காந்தி’ ஆங்கிலப் படத்தை இயக்கிய ஹாலிவுட் நடிகரும், இயக்குநருமான ரிச்சர்ட் அட்டென்பரோ நேற்று காலமானார். இவருக்கு வயது 90.
இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் பிறந்த ரிச்சர்ட் அட்டென்பரோ முதலில் ஒரு நடிகராகவே தனது கலைத்துறை வாழ்க்கையை ஆரம்பித்தவர். பின்பு படங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
இவருடைய தலை சிறந்த படைப்பு ‘காந்தி’ திரைப்படம்தான்.. மகாத்மா காந்தியின் அகிம்சை வரலாற்றை சித்தரிக்கும் ‘காந்தி’ படத்தை இயக்கியதன் மூலமாக கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவராவார். இந்தப் படத்தின் மூலமாகத்தான் ஆஸ்கர் விருதையும் தனது வாழ்நாளில் முதல் முறையாகப் பெற்றார் அட்டன்பெரோ.
சுமார் 60 ஆண்டுகளாக திரையுலகில் பணியாற்றிய அனுபவம் நிறைந்த ரிச்சர்ட் அட்டென்பரோ, பல்வேறு திரைப்பட விழாக்களில் நடுவர்கள் குழுவிலும், விருதுகளுக்கான தேர்வுக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். பல நாடுகளின் சிறப்பு விருதுகளையும் பெற்றிருந்தார். இதில் இந்தியாவின் ‘பத்மபூஷனு’ம், பிரிட்டனின் ‘லார்டு’ விருதும் அடக்கம்..!
தனது வாழ்நாளில் 80-க்கும் மேற்பட்ட பல்வேறு நாட்டு படங்களில் நடித்திருக்கிறார் ரிச்சர்டு. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் புகழ் பெற்ற ‘ஜூராஸிக் பார்க்’ திரைப்படத்திலும் ரிச்சர்ட் அட்டன்பெரோ நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1945-ல் ஷீலா ஷிம் என்ற பிரிட்டிஷ் நடிகையை திருமணம் செய்த அட்டன்பெரோ இறுதிவரையில் இவருடனேயே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 3 பிள்ளைகள். இவரது மூத்த மகளான ஜான் ஹாலண்ட்டும், பேத்தி லூசியும் 2004 டிசம்பர் 26-ல் உலகை குலுக்கிய சுனாமி தாக்குதலின்போது தாய்லாந்து நாட்டில் மரணமடைந்தார்கள்.
இந்தியத் திரையுலகம் எத்தனையோ ஜாம்பவான்களை உள்ளடக்கியிருந்தும் காந்தி திரைப்படத்தை எடுக்க இந்த பிரிட்டிஷ்காரர்தான் வர வேண்டியிருந்தது.. இந்திய அரசு தரப்பு ஒத்துழைப்புடன், பிரிட்டிஷ் அரசின் ஒத்துழைப்புடனும் இந்தப் படத்தை அவர் எடுத்துக் காட்டியது நமது இந்திய திரையுலக இயக்குநர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது..
இந்த காந்தி திரைப்படம் ஒன்றே போதும்.. பத்மபூஷன்.. லார்டு ரிச்சர்டு அட்டன்பெரோவின் பெருமையை அடுத்து வரும் தலைமுறைகளுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கும்..!