பெரும் வெற்றி பெற்ற படங்களின் கூட்டணி மீண்டும், மீண்டும் இணைவது வர்த்தக ரீதியில் மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி தரும் விஷயமாகும்.
‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஆகிய நான்கு படங்களை இயக்கிய இயக்குநர் எம்.ராஜேஷ் தனது புதிய படத்தினைத் துவக்கியுள்ளார்.
‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘ படத்தின் மூலம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த ஆர்யா – சந்தானம் – இயக்குனர் ராஜேஷ் கூட்டணி இப்போது மீண்டும் ஆர்யாவின் சொந்தப் பட நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ என்கிற நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் ‘வாசுவும், சிவாவும் ஒண்ணா படிச்சவங்க’ என்ற படத்தில் இணைகிறார்கள்.
காதல், நகைச்சுவை மற்றும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளவர் தமன்னா. இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதல் தடவை. இயக்குனர் ராஜேஷின் படங்களில் மையமாக விளங்கும் சந்தானம் இந்த படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
மேலும் படத்தில் ‘தாமிரபரணி’ படத்தில் கதாநாயகியாக நடித்த பானு, வெண்ணிற ஆடை முர்த்தி, ரேணுகா, கருணாகரன், சித்தார்த் விபின், வித்யுலேகா மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜாக்கியின் கலை வண்ணத்தில், இமான் இசை அமைக்க உள்ள இந்த படம் சென்னையில் நேற்று பூஜையுடன் துவங்கியது.
“இந்த படம் வெறுமனே சிரித்துவிட்டு போகக்கூடிய படமாக இருக்காது. சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கும். கண் கவரும் நேர்த்தியான ஒளிப்பதிவு மற்றும் செவிக்கினிய இசை என்று படத்தின் வெற்றிக்கு தேவையான அத்தனை அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கும். ஆர்யா- சந்தானம்- மற்றும் என்னுடைய கூட்டணியில் வெளிவந்த எங்களது முந்தைய படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் வெற்றியையும் தரத்தையும் இந்த படத்திலும் தருவோம்..” என்று நம்பிக்கையோடு தெரிவித்தார் இயக்குனர் எம்.ராஜேஷ்.